செலுத்த வேண்டிய கடனால் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை!

1948 இல் பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கையின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள் மேலும் மோசமாகிவிடும் என்று கூறியுள்ள ரணில் விக்ரமசிங்க, வெளியில் இருந்து நிதி உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த வார ஆரம்பத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களை தொடர்ந்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தின் ஏனைய உறுப்பினர்கள் தங்களின் பதவிகளில் இருந்து விலகினர்.

மக்கள் ஏன் வீதிக்கு வந்தனர்?

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து விலைவாசி உயர்வு மற்றும் தட்டுப்பாடு குறித்த போராட்டங்கள் தலைநகர் கொழும்பில் ஏப்ரல் தொடக்கத்தில் வெடித்து நாடு முழுவதும் பரவியது.

2021 இன் பிற்பகுதியில் உணவுப் பொருட்களின் விலைகள் உயரத் தொடங்கின, ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட தற்போது 30 வீதம் அதிகமாக உணவுக்காக மக்கள் செலுத்துகின்றனர். இதனால் பலர் உணவை தவிர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின்வெட்டு ஆகியவையும் ஏற்பட்டுள்ளன. அத்துடன், மருந்துகளின் பற்றாக்குறை சுகாதார அமைப்பை சரிவின் விளிம்பிற்கு கொண்டு வந்துள்ளது.

இலங்கையின் பொருளாதார  நெருக்கடியும் செலுத்த வேண்டிய வெளிநாட்டு கடன்களும்!

இலங்கையின் பொருளாதாரம் ஏன் நெருக்கடியில் உள்ளது?

இலங்கையின் வெளிநாட்டு நாணய கையிருப்பு முடிவடைந்துள்ளது என்றே கூற வேண்டும். இலங்கை இறக்குமதியை பெரிதும் நம்பியிருப்பதால், முக்கிய உணவுகள் மற்றும் எரிபொருளுக்கு இனி பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் நெருக்கடிக்கு சுற்றுலா துறையை பாதித்த கோவிட் தொற்றுநோயை அரசாங்கம் காரணமாக கூறுகின்றது. எனினும், 2019 ம் ஆண்டு தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களால் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், தவறான நிர்வாகமே இந்த நிலைக்கு காரணம் என பல பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பல தசாப்தங்களாக அரசாங்கத்தின் முக்கிய பதவிகளை வகித்த ராஜபக்ச குடும்பத்தின் மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.

இலங்கையின் பொருளாதார  நெருக்கடியும் செலுத்த வேண்டிய வெளிநாட்டு கடன்களும்!

2009 இல் உள்நாட்டுப் போரின் முடிவில், இலங்கை வெளிநாட்டு சந்தைகளுக்கு விற்பனை செய்வதற்குப் பதிலாக உள்நாட்டு சந்தைகளில் அதிக கவனம் செலுத்தத் தெரிவு செய்தது. அதனால் ஏற்றுமதி வருமானம் குறைவாகவே இருந்தது, அதே சமயம் இறக்குமதிக்கான தொகை அதிகரித்துக்கொண்டே இருந்தது.

இலங்கை இப்போது ஒவ்வொரு வருடமும் ஏற்றுமதி செய்வதை விட அதிகமாக இறக்குமதி செய்கிறது. உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக சீனா உள்ளிட்ட நாடுகளுடன் அரசாங்கம் பெரும் கடன்களை வாங்கியது.

2019 ஆம் ஆண்டின் இறுதியில், இலங்கையின் வெளிநாட்டு நாணய கையிருப்பில் 7.6 பில்லியன் டொலர் (£5.8bn) இருந்தது. எனினும், மார்ச் 2020க்குள் அதன் கையிருப்பு 1.93 பில்லின் டொலராக (£1.5bn) குறைந்தது.

சமீபத்தில் அரசாங்கம் நாட்டின் வசம் 50 மில்லியன்  (£40.5m) மட்டுமே இருப்பதாகக் அதிகாரபூர்வமாக அறிவித்தது. நாட்டில் தற்போதைய நிலைக்கு பல ஜனரஞ்சக கொள்கைகளும் காரணம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2019 இல் ஆட்சிக்கு வந்ததும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாரிய வரி குறைப்புகளை வழங்க முடிவு செய்தார், வெளிநாட்டு நாணயங்களை வாங்குவதற்கு குறைந்த பணத்தை விடுவித்தார். கோட்டாபய ராஜபக்ச இப்போது வரிக் குறைப்புகளை ஒரு “தவறு” என்று ஒப்புக்கொண்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதார  நெருக்கடியும் செலுத்த வேண்டிய வெளிநாட்டு கடன்களும்!

2021ம் ஆண்டின் தொடக்கத்தில் இலங்கையின் நாணயத் தட்டுப்பாடு ஒரு உண்மையான பிரச்சினையாக மாறியபோது, அரசாங்கம் இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதைத் தடைசெய்து, விவசாயிகளுக்கு இயற்கை உரங்களைப் பயன்படுத்தச் சொல்லி வெளிநாட்டு நாணயத்தின் வெளிப்பாட்டை நிறுத்த அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டது.

இது பரவலான பயிர் சேதத்திற்கு வழிவகுத்தது. இலங்கை தனது உணவுப் பொருட்களை வெளிநாட்டிலிருந்து வாங்க வேண்டியிருந்தது, அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை வெளிநாட்டு நாணயப் பற்றாக்குறையை மேலும் மோசமாக்கியது.

இரசாயன உரத் தடை காரணமாக தேயிலை மற்றும் இறப்பர் ஏற்றுமதியையும் பாதித்தது. இது “கணிசமான” இழப்புகளுக்கு வழிவகுத்தது என்று இந்த ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச நாயண நிதியத்தின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இலங்கையில் பரந்த அளவிலான “அத்தியாவசியமற்ற” பொருட்களின் இறக்குமதியை அரசாங்கம் தடை செய்தது. ஏனைய நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாய் வீழ்ச்சியடைவதையும் அரசாங்கம் மறுத்துவிட்டது. எவ்வாறாயினும், அமெரிக்க டொருக்கு எதிராக ரூபாயின் பெறுமதி 30 வீதத்திற்கும் அதிகமாக சரிந்தது.

புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க, சம்பளம் வழங்குவதற்காக அரசாங்கம் பணத்தை அச்சிட வேண்டும் என்று அறிவித்துள்ளார், இது ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைய வழிவகுக்கும் என்று அவர் கூறுகிறார்.

பணம் திரட்டுவதற்காக தேசிய விமான நிறுவனத்தை விற்கும் திட்டத்தையும் அவர் வகுத்துள்ளார்.

எவ்வளவு வெளிநாட்டுக் கடனை இலங்கை செலுத்த வேண்டும்?

இலங்கை அரசாங்கம் $51bn (£39bn) வெளிநாட்டுக் கடனை வாங்கி குவித்துள்ளது. இந்த ஆண்டு, 7 பில்லியன் டொலர் கடனை (£5.4bn) செலுத்த வேண்டியிருக்கும், வரவிருக்கும் ஆண்டுகளில் இதே போன்ற தொகையை செலுத்த வேண்டியுள்ளது.

ஏப்ரலில், இலங்கை அரசாங்கம் 78 மில்லியன் டொலரை திருப்பிச் செலுத்தத் தவறிவிட்டது. சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை தனது வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தாத முதல் தடவை இதுவாகும்.

எரிபொருள் போன்ற அத்தியாவசிய இறக்குமதிகளை செலுத்துவதற்காக 3 பில்லியன் டொலர்களை அவசரகால கடனாக இலங்கை நாடுடியுள்ளது. உலக வங்கி 600 மில்லியன் டொலர் கடனாக வழங்க ஒப்புக்கொண்டது.

இலங்கையின் பொருளாதார  நெருக்கடியும் செலுத்த வேண்டிய வெளிநாட்டு கடன்களும்!

இந்தியா 1.9 பில்லியன் டொலரை வழங்க உறுதியளித்துள்ளது. மேலும் இறக்குமதிக்காக 1.5 பில்லியன் டொலரை கூடுதல் கடன் கொடுக்கலாம். அத்துடன், 65,000 தொன் உரங்களையும் 400,000 தொன் எரிபொருளையும் இந்திய வழங்கியுள்ளது.

மே மாதத்தின் பிற்பகுதியில் அதிக எரிபொருள் ஏற்றுமதிகள் எதிர்பார்க்கப்படுகின்றன. சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து பிணை எடுப்பது குறித்து அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

கடனுக்கான நிபந்தனையாக அரசாங்கம் வட்டி விகிதங்கள் மற்றும் வரிகளை உயர்த்த வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது, இது நாட்டின் வாழ்க்கைச் செலவு நெருக்கடியை மோசமாக்கும்.

இலங்கை சீனாவுக்கு 6.5 பில்லியன் டொலர் கடனை செலுத்த வேண்டியுள்ளது. அத்துடன், கடனை எவ்வாறு மறுசீரமைப்பது என்பது குறித்து இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *