இரும்பு மழை பெய்யும் அதிசய கிரகம்!

குழந்தைகள் முதல் கவிஞர்கள் வரை அனைவரும் மழையை ரசிப்பர். மழைக்கு இதமாக தேநீர் மிளகாய் பஜ்ஜி கூட சாப்பிட்டு குதூகலிக்கும் கூட்டத்தில் ஒருவரா நீங்கள்? ஆம் என்றால் மகிழ்ச்சி. இரும்பு மழை பெய்தால் ரசிப்பீர்களா? அப்படிப்பட்ட கோளைத்தான் நாம் இங்கு பார்க்கப் போகிறோம்.

நம் பூமி ஒரு சூரிய குடும்பத்தின் அங்கம். பலசூரிய குடும்பங்கள் ஒன்ரு சேர்ந்தது தான் ஒரு பால்வெளி. பல பால்வெளிகளை ஒன்றிணைந்தது தான் ஒரு பிரபஞ்சம். அப்படிப்பட்ட பறந்து விரிந்த பிரபஞ்சத்தில் பல புறகோள்கள் இருக்கின்றன.

இப்போது நாம் பார்க்கவிருக்கும் கோள் நம் சூரிய குடும்பத்துக்குள் இல்லை. இப்படி சூரிய குடும்பத்துக்கு வெளியே இருக்கும் கோள்களைத் தான் எக்ஸொபிளேனெட் (Exoplanet) என்பர். தமிழில் புறக்கோள்கள் எனலாம்.

அப்படி கண்டுபிடிக்கப்பட்ட WASP – 76b என்கிற புறகோள் விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததை விட அதீத வெப்பமாக இருக்கலாம் என சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் மானா கியா (Mauna Kea) என்கிற இடத்தில் இருக்கும் ஜெமினி நார்த் தொலைநோக்கியைப் பயன்படுத்தி, இந்த கோளை ஆராய்ந்த போது, அக்கோளின் வளிமண்டலத்தில் சோடியம் மற்றும் ஐயனைஸ்ட் கால்சியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

எக்ஸோஜெம்ஸ் அல்லது ‘ஜெமினி ஸ்பெக்ட்ராஸ்கோபி சர்வேயில் புறகோள்கள்’ (Exoplanets with Gemini Spectroscopy survey) என்கிற கார்னெல் பல்கலைக்கழகத் திட்டத்தின் ஒரு பகுதிதான் இந்த ஆய்வு. இத்திட்டத்தின் கீழ் புறகோள்களின் வளிமண்டலம் குறித்து ஆராயும் பல விஞ்ஞானிகள் ஒன்றிணைந்தனர்.

இவர்களின் ஆய்வறிக்கை கடந்த 2021 செப்டம்பர் 28 அன்று ஆஸ்ட்ரோ ஃபிசிகல் ஜர்னல் லெட்டர்ஸ் என்கிற சஞ்சிகையில் பிரசுரமானது. அதனைத் தொடர்ந்து ‘டிவிஷன் ஃபார் பிளானெடரி சயின்ஸ்’ என்கிற அமெரிக்காவின் வானியல் சமூகக் கூட்டத்திலும் இந்த ஆய்வு தொடர்பான விஷயங்கள் விளக்கப்பட்டன.

“டஜன் கணக்கிலான புறக்கோள்களை ஆராய்ந்த போது, பலதரப்பட்ட நிறை முதல் மாறுபட்ட தட்பவெப்பநிலை வரை பலதையும் காண முடிந்தது. இந்த விவரங்களைக் கொண்டு, அதிவெப்பமான இரும்பு மழை பொழியும் புறக்கோள்கள் தொடங்கி மிதமான வெப்பநிலை கொண்ட கோள்கள் வரை, வியாழனை விட பெரிய கோள் தொடங்கி புவியை விட சிறிய கோள் வரை என அந்நிய உலகத்தைக் குறித்து ஒரு முழு படத்தை நாங்கள் உருவாக்குவோம்” என சி என் என் ஊடகத்திடம் கூறியுள்ளார் இந்த ஆய்வின் துணை ஆசிரியர் ரே ஜெயவர்த்தன மற்றும் கார்னெல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹரோல் டேன்னர்.

“இன்று நம் கையில் இருக்கும் தொலைநோக்கிகள் மற்றும் கருவிகளைப் பயன்படுத்தி, பல ஒளியாண்டு தொலைவில் இருக்கும் புறக்கோள்களின் வளிமண்டலங்கள், அதன் குணாதிசயங்கள், அக்கோள்களில் இருக்கும் மேகக் கூட்டங்கள், பலமான காற்றுவீசும் முறை என பலவற்றையும் தெரிந்து கொள்ள முடியும்” என்றும் கூறியுள்ளார் ஜெயவர்த்தன.

கடந்த 2016ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட WASP – 76b என்கிற கோள், வியாழனைப் போல் பெரியது. Pisces விண்மீன் கூட்டத்தைச் சேர்ந்த இக்கோள், பூமியில் இருந்து சுமார் 640 ஒளியாண்டு தொலைவில் உள்ளது.

இக்கோள் தன்னுடைய மைய நட்சத்திரத்துக்கு மிக அருகில் இருப்பதால், அது 1.8 நாளிலேயே தன் மைய நட்சத்திரத்தைச் சுற்றி வந்துவிடும். சூரியனில் இருந்து பூமிக்கு வரும் கதிரியக்கத்தைப் போல சுமார் 1,000 மடங்கு அதிக அக்திரியக்கத்தை எதிர்கொள்கிறது WASP – 76b.

“WASP – 76b கோளில் கால்சியம் அதிகமாக இருப்பதைக் கண்டோம்” என எமிலி டெய்பெர்ட் என்கிற டொரான்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் பட்டம் தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ள மாணவர் கூறியுள்ளார். அக்கோளில் ஐயனைஸ்ட் கால்சியம் இருப்பது, மிக வலுவான மேல்தட்டு வளிமண்டல காற்று இருப்பதைக் வெளிப்படுத்துவதாகக் கருதலாம் அல்லது நாம் கணித்திருப்பதை விட அக்கோளின் வளிமண்டல வெப்பநிலை மிக அதிகமாக இருக்கலாம்” என்றும் கூறினார்.

இதை எல்லாம் விட மிக ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், இந்த கோள் தன்னைத் தானே சுற்றிக் கொள்வதில்லை. இந்த கோளின் ஒரு பகுதி மட்டுமே தொடர்ந்து அதன் மைய நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது. WASP – 76b கோளின் பகல் நேரத்தில், அதன் மைய நட்சத்திரத்தில் ஒளிபடும் இடத்தில் சுமார் 4,400 டிகிரி பேரன்ஷீட் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த வெப்பநிலையில் உலோகங்களே ஆவியாகிவிடும். இந்த ஆவி அப்படியே அக்கோளின் குறைந்த வெப்ப நிலை (2,400 டிகிரி ஃபேரன்ஹீட்) கொண்ட பகுதிக்கு (இரவு பகுதிக்கு) எடுத்துச் செல்லப்படுகிறது. இரும்பு உலோக ஆவி மேகத்தோடு இணைந்து கணமாகி இரும்பு மழையாகப் பொழிகிறது.

எக்ஸோஜெம்ஸ் சர்வே சுமார் 30 புறக்கோள்களைக் குறித்து ஆராய உள்ளது. இதை நாசாவின் கார்ல் சாகான் (Carl Sagan) ஃபெல்லோவான ஜேக் டர்னர் தலைமை தாங்கி வழிநடத்தி வருகிறார்.

“நம் சூரிய குடும்பத்திலிருந்து வெளியே உள்ள கோள்களின் வளிமண்டலங்களை ஆராய்வதற்கான வழிகளை எங்கள் பணி மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பணி உருவாக்குகிறது” என சி என் என் ஊடகத்திடம் கூறியுள்ளார் ஜேக் டர்னர்.

புறக்கோள்களின் வேதியியலைப் புரிந்து கொள்வது, வானியல் வல்லுநர்கள் அக்கோளின் வானிலை, காலநிலை மற்றும் சுற்றுச்சூழலைப் புரிந்துகொள்ள உதவும் என்கிறது அறிவியல் உலகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *