பாராளுமன்றத்தில் உணவுக்காக சண்டை?

நாடாளுமன்றத்தில் திரவப்பால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தவறான செய்திகள் வெளியிடப் பட்டுள்ளதாகவும் அது குறித்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தில் நேற்று அறிவித்தார்.

நாடாளுமன்ற உணவகத்தில் திரவப்பால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார சிறப்புரிமை கேள்வியொன்றை முன்வைத்தார்.

இதற்குப் பதிலளித்த சபாநாயகர், இது தொடர்பில் சிறப்புரிமை கேள்வியொன்றை ஜயந்த கெட்டகொட எம்.பி. எழுத்துமூலமாக முன்வைத்துள்ளதாக குறிப்பிட்டார்.

ஊடகங்களில் இவ்வாறான செய்தி வெளியாவதால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவமானம் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் சுட்டிக்காட்டினர்.

மக்கள் பொருட்களைப் பெற்றுக்கொள்ள வரிசைகளில் காத்திருக்கும்போது இவ்வாறான செய்திகள் வெளியாகுமாக இருந்தால், சபாநாயகரின் உத்தரவின்பேரில் உணவகத்தை மூடிவிடுவதே சிறந்தது என நளீன் எம்.பி. சுட்டிக்காட்டினார்.

“உணவுக்காக நாடாளுமன்றத்துக்கு வருகைதருவது போன்ற தோரணையை குறித்த செய்தி உருவாக்கியுள்ளது. நாடாளுமன்ற உணவகத்துக்குப் பொறுப்பான அதிகாரியையும் அங்கு கடமையாற்றுவோரையும் அழைத்து நான் இது குறித்து விசாரித்தேன். அவ்வாறானதொரு பற்றாக்குறை இல்லையென அவர்கள் தெரிவித்தார்கள். பாலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அதற்காக உறுப்பினர்கள் முண்டியடிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதனை நாடாளுமன்றத்தில் உள்ள அதிகாரியொருவரே உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து விசாரணைகள் அவசியம் என கெட்டகொட எம்.பி. சபாநாயகரை வலியுறுத்தினார்.

அதற்குப் பதிலளித்த சபாநாயகர், இந்த செய்தி தொடர்பில் நான் கவலையடைகிறேன். இவ்வாறான தவறான செய்திகள் கடந்த காலங்களில் அவர்கள் நினைத்த மாத்திரத்தில் பிரசுரமாகி நாடாளுமன்றத்தையும் அதன் உறுப்பினர்களையும் சங்கடத்துக்குள்ளாக்கிய சம்பவங்களும் உள்ளன. வியாபாரத்துக்காக அல்லது ஜனநாயக உரிமையை தவறான முறையில் உபயோகிப்பதற்காக, செய்திகளை பிரசுரிப்பதற்கான சுதந்திரம் தவறாக பயன்படுத்தப்படுகின்றமை குறித்து நாம் உண்மையில் கவலையடைகிறாம்.

இது தொடர்பில் நாம் அறிக்கையொன்றை பெற்று அதனை சிறப்புரிமை குழுவிடம் சமர்ப்பித்து எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் என்னவென்பது குறித்து நான் அறியத்தருகிறேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *