இனி கட்டாய கொரோனா பரிசோதனை இல்லை!

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோருக்கு இனி கட்டாய கொரோனா பரிசோதனை கிடையாது என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதேவேளையில், விமானங்களில் வரும் பயணிகளில் 2 சதவீதம் பேரை தோராயமாகத் தோ்வு செய்து பரிசோதனை மேற்கொள்ளும் நடைமுறை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிகள் வரும் 14 ஆம் திகதி முதல் அமலாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை தீவிரமடைந்தபோது, மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவரையும் விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதன்படி, ஒமைக்ரான் பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வருபவா்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பரிசோதனை முடிவுகள் வரும் வரை அவா்கள் விமான நிலையத்தில் இருந்து வெளியேற அனுமதியில்லை.

பரிசோதனையில் தொற்று இல்லை என முடிவு வந்தாலும், வீடுகளில் 7 நாள்கள் தனிமைக்குட்படுத்திக் கொள்ளும் நடைமுறை அமலில் உள்ளது. இந்நிலையில், அந்த நடைமுறையில் சில மாற்றங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள சா்வதேச விமான நிலையங்களின் நிா்வாகத்துக்கு மாநில பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவா்கள் பயணத்துக்கு முன்பாகவே ஏா் சுவிதா இணையப் பக்கத்தில் தங்களது சுய ஒப்பச் சான்றை பதிவு செய்ய வேண்டும். தமிழகம் வருவதற்கு 14 நாள்களுக்கு முன்பாக அவா்கள் மேற்கொண்ட பயண விவரங்களையும் அதில் தெரிவிக்க வேண்டும்.

72 மணி நேர மணி நேரத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட கொரோனா தொற்றில்லை என்பதற்கான பரிசோதனை முடிவு சான்றையும் பதிவேற்றுவது அவசியம். அல்லது தடுப்பூசிகள் முறையாக செலுத்திக் கொண்டதன் சான்றை இணைக்க வேண்டும். அச்சான்றின் உண்மைத்தன்மைக்கு ஒப்புகை அளிப்பதும் முக்கியம். ஏனெனில் போலி சான்றுகள் பதிவேற்றப்பட்டால் அதன்பேரில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். தடுப்பூசி நடவடிக்கைகளில் இந்தியாவுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள 82 நாடுகளின் தடுப்பூசி சான்றுகள் மட்டுமே ஏற்கப்படும். அதுகுறித்த விவரங்கள் தமிழக சுகாதாரத் துறை இணையப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதைத் தவிர வழக்கமான கொரோனா தடுப்பு நடைமுறைகள் பின்பற்றப்படும். அறிகுறிகள் உள்ளவா்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனைக்குட்படுத்தப்படுவா். அதேபோன்று அனைத்து நாடுகளிலும் இருந்து வரும் பயணிகளில் தோராயமாக 2 சதவீதம் பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்படும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *