4 வயதில் ஸ்பானிஷ் ப்ளூ,106 வயதில் கொரோனாவில் இருந்து மீண்ட முதியவர்!

டெல்லியில் 100 வயதைக் கடந்த ஒருவர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார். 1918-ம் ஆண்டு ஸ்பானிஷ் ஃப்ளூ பாதிப்பு ஏற்பட்டபோது இவருக்கு நான்கு வயது. தற்போது இவர் 70 வயதான தனது மகனைக் காட்டிலும் விரைவாக குணமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

106 வயதான முதியவர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டதால் ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இவரது மனைவி, மகன் ஆகியோருடன் குடும்ப உறுப்பினர் மற்றொருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மீண்டுள்ளனர்.

“கொரோனா வைரஸ் போன்றே 1918-ம் ஆண்டில் உலகம் முழுவதும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய ஸ்பானிஷ் ஃப்ளூ பெருந்தொற்று அனுபவமும் இவருக்கு உண்டு. இவரது மகனைக் காட்டிலும் விரைவாக இவர் கோவிட்-19 தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார்,” என்று மூத்த மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஸ்பானிஷ் ஃப்ளூ பெருந்தொற்று 102 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டது. அந்த சமயத்தில் உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினரை இந்த நோய்தொற்று பாதித்தது.

“1918-ம் ஆண்டு பரவிய பெருந்தொற்று மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அது பறவையில் இருந்து தோன்றிய மரபணுக்களுடன் கூடிய H1N1 வைரஸால் ஏற்பட்டது. வைரஸ் எங்கிருந்து பரவியது என்பது குறித்த ஒருமித்த கருத்து இல்லை என்றாலும் 1918-1919 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பரவியது,” என்று அமெரிக்காவில் உள்ள நோய் கட்டுப்பாட்டு மையம் (CDC) தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் 1918-ம் ஆண்டு ராணுவ அதிகாரியிடம் இது முதலில் கண்டறியப்பட்டது. இதன் காரணமாக அமெரிக்காவில் 6,75,000 பேர் உயிரிழந்திருக்கலாம் என மதிப்பிடப்படப்படுகிறது.

1918-1919-களில் ஏற்பட்ட ஸ்பானிஷ் ஃப்ளூ என்கிற பெருந்தொற்று வீரியமிக்கது எனவும் உலகம் முழுவதும் 40 மில்லியன் பேர் இதன் காரணமாக உயிரிழந்ததாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

முதல் உலகப் போர் முடிந்து திரும்பிய ராணுவ வீரர்கள் மூலம் இந்தியாவில் இந்த நோய் பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது. மும்பை, கொல்கத்தா, டெல்லி, சென்னை போன்ற முக்கிய இடங்களிலேயே முதலில் ஸ்பானிஷ் ஃப்ளூ தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இங்குதான் வெளிநாடுகளில் இருந்து பலர் ஊர் திரும்பியுள்ளனர்.

ஸ்பானிஷ் ஃப்ளூ காரணமாக இந்தியாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களில் ஐந்தில் ஒரு பகுதியாக இருந்தது என்று கூறப்படுகிறது.

106 வயதான இந்த முதியவர் கொரோனாவைரஸ் தொற்றில் இருந்து மீண்டது மருத்துவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

“ஸ்பானிஷ் ஃப்ளூ பாதிப்பு இவருக்கு ஏற்பட்டதா என்பது குறித்து எங்களுக்குத் தெரியாது. டெல்லியைப் பொறுத்தவரை அன்றைய சூழல் குறித்த ஆவணங்கள் அதிகம் இல்லை. அந்த காலகட்டத்தில் வெகு சில மருத்துவமனைகளே இருந்தன. நோய் தொற்றில் இருந்து மீள்வது சாத்தியம் என்று இந்த 106 வயதான முதியவர் மன தைரியத்தை ஊட்டுகிறார்,” என்றார் மூத்த மருத்தவர் ஒருவர்.
70-களில் உள்ள இவரது மகனைக் காட்டிலும் இவர் விரைவாக குணமடைந்திருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். அதுமட்டுமின்றி ஸ்பானிஷ் ஃப்ளூ, கோவிட்-19 இரு பெருந்தொற்றுகளையும் சமாளித்து மீண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இவரது குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் தொற்றில் இருந்து வெற்றிகரமாக மீண்டு ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவர் குறிப்பட்டார். ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இதுவரை 1,000 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *