இரண்டு வருடங்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார் ஹிஸ்புல்லா!

மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை பிணையில் நேற்று புத்தளம் மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சுமார் 2 வருடங்கள் தடுப்புக்காவலில் இருந்து வந்த நிலையிலேயே அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

உயிர்த்தஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் தற்போது சதி செய்தமை, சமூகங்களிடையே வெறுப்புணர்வை தூண்டிய குற்றச்சாட்டுக்களின் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் அவரது சட்டத்தரணிகள் அவருக்கு பிணை வழங்குமாறு கோரியிருந்தனர்.

எனினும் பிணை வழங்கும் அதிகாரம் மேல்நீதிமன்றத்திற்கு இல்லை எனக் கூறி சட்டத்தரணி ஹிஜாஸ் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை கோரிக்கையை இரு முறை புத்தளம் மேல் நீதிமன்றம் மறுத்தது.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இரு பிரதிவாதிகளுக்கு எதிரான சாட்சி விசாரணைகள் கடந்த 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போதே ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் இந்திரதிஸ்ஸ முன்வைத்த பிணைக் கோரிக்கை குறித்த விவகாரம் தொடர்பிலான வழக்கை விசாரிக்கவென விசேடமாக நியமிக்கப்பட்டுள்ள சிலாபம் மேல் நீதிமன்றின் நீதிபதி குமாரி அபேவர்தனவினால் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில்,தனக்கு பிணை அளிக்க முடியாது என புத்தளம் மேல்நீதிமன்றம் கடந்த ஜனவரி 28 ஆம் திகதி வழங்கிய உத்தரவை திருத்தி, தன்னை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் CA/PHC/APN/10/22 எனும் இலக்க சீராய்வு மனுவின் உத்தரவு நேற்று முன்தினம் (07) அறிவிக்கப்பட்டது.

இதன்போது, சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை பிணையில் விடுவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் புத்தளம் மேல் நீதிமன்றத்திற்கு நேற்று முன்தினம் (07) உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான மேனகா விஜேசுந்தர மற்றும் நீல் இத்தவெல ஆகியோர் சட்டத்தரணி ஹிஜாஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவின் உத்தரவாக இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளனர்.

அதன்படி குறித்த உத்தரவை உடனடியாக புத்தளம் மற்றும் சிலாபம் நீதிமன்றங்களுக்கு அனுப்பி வைக்குமாறும், அங்கு பிணை நிபந்தனைகள் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேற்படி மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இந்த பிணை உத்தரவின் பிரகாரம், உடனடியாக புத்தளம் மேல் நீதிமன்றில் விசாரணையில் உள்ள H.C / 78 / 2021 எனும் வழக்கை முன் கூட்டி விசாரணைக்கு அழைக்க சட்டத்தரணி ஹிஜாஸ் தரப்பால் நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தனர்.

மேன் முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அது நேற்றைய தினம் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போதே, புத்தளம் மேல் நீதிமன்றத்திற்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவுக்கு அமைவாக சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் இன்று (09) புத்தளம் மேல்நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஒரு இலட்சம் ரூபா ரொக்கப்பிணை மற்றும் தலா ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல அவர் அனுமதிக்கப்பட்டார்.

ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத்திற்கு சென்று கையொப்பமிட வேண்டுமெனவும் இதன்போது புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி மாலினி அபேரத்ன உத்தரவிட்டுள்ளார்.

தனக்கு பிறப்பிக்கப்பட்ட பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்த சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், இன்று மாலை புத்தளம் மேல்நீதிமன்றத்திலிருந்து வெளியேறிச் சென்றார்.

எந்த குற்றமும் செய்யாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தனக்காகவும், தனது விடுதலைக்காகவும் பிரார்த்தனைகள் மற்றும் அனைத்து வழிகளிலும் முயற்சிகள் செய்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவிப்பதாக சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், நீதிமன்றத்தில் இருந்து வெளியேறிச் செல்லும் போது குறிப்பிட்டார்.

இதேவேளை, மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமையை சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட மனித உரிமைகள் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *