ஒரு கொலை வழக்கில் 51 பேர்களுக்கு மரண தண்டனை விதிப்பு!

காங்கோ ஜனநாயகக் குடியரசில் இரண்டு ஐ.நா ஊழியர்களைக் கொன்றது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 50 க்கும் மேற்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 54 பேர்களில் 51 பேருக்கு இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஒரு இராணுவ கர்னலுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

காங்கோ நாட்டைப் பொறுத்தமட்டில் மரண தண்டனை நிறைவேற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது, இதனால் குறித்த சட்டம் அமுலில் இருக்கும் வரை, மரணத்தண்டனைக் கைதிகள் அனைவரும் ஆயுள் தண்டனையை அனுபவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 20 க்கும் மேற்பட்டவர்கள் தப்பியோடியவர்களாக இருப்பதால் அவர்களை தலைமறைவானவர்கள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பலர் நீண்ட கால வழக்கு விசாரணையின் போது காவலில் மரணமடைந்துள்ளனர்.

கடந்த 2017 மார்ச் மாதம் ஐ.நாவின் சிறப்பு அதிகாரிகளான அமெரிக்கரான Michael Sharp மற்றும் ஸ்வீடன் நாட்டவரான Zaida Catalan ஆகிய இருவரும் ஒரு கூட்டக்கொலை தொடர்பான விசாரணையின் போது திடீரென்று மாயமாகினர்.

இதையடுத்து அவர்களின் உடல்கள் ஒரு கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டன. ஆயுதம் ஏந்திய ஆட்களால் சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டு, வயலுக்கு அழைத்துச் சென்று கொலை செய்யப்பட்டுள்ளது பின்னர் தெரிய வந்தது.

இந்த வழக்கில் காங்கோவின் அரசாங்கம் Kamuina Nsapu கிளர்ச்சியாளர்களைக் குற்றம் சாட்டியது. மட்டுமின்றி அரசு அதிகாரிகளுக்கு இந்த விவகாரத்தில் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் மறுத்தது.

இருப்பினும், குறித்த சிறப்பு அதிகாரிகள் கொலையில் காங்கோ அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளின் பங்கிருப்பதாக பரவலாக பேசப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், Colonel Jean de Dieu Mambweni உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களே கிளர்ச்சியாளர்களுக்கு உதவியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் உயர் அதிகாரிகள் எவரும் விசாரணைக்கு உட்படுத்தப்படவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *