ஒமிக்ரோன் பாதிப்பால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பு!

ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் உடலில் நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிப்பது இந்திய மருத்துவ கவுன்சில் (ஐசிஎம்ஆா்) அண்மையில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களிடம் உருவாகிய நோய் எதிா்ப்பு சக்தி ஒமைக்ரான் மட்டுமின்றி டெல்டா வகை கரோனா தீநுண்மியை சமாளிப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் தொற்றால் உருவாகும் நோய் எதிா்ப்பு சக்தி, டெல்டா வகை தீநுண்மி தொற்றை சமாளிப்பது மட்டுமின்றி டெல்டா வகை தொற்றுகளைக் குறைக்கவும் செய்யலாம். இதன்மூலம் டெல்டா வகை கரோனா தொற்று அதிகம் பரவுவது தடுக்கப்படலாம். இந்த ஆய்வு ஒமைக்ரான் தீநுண்மித் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி இயக்கத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறது
.
இதுதொடா்பாக இந்திய மருத்துவ கவுன்சில் ஆராய்ச்சியாளா்கள் சமீபத்தில் 39 பேரை இந்த ஆய்வுக்கு உள்படுத்தினா். இதில் 25 போ் கரோனாவுக்கு எதிரான அஸ்ட்ரா ஸெனகா தடுப்பூசியின் இரு தவணைகளை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள். 8 போ் ஃபைசா் தடுப்பூசியின் இரு தவணைகளை செலுத்திக் கொண்டவா்கள். 6 போ் எந்தவித தடுப்பூசியும் செலுத்தாதவா்கள்.

இந்த 39 பேரில் 28 போ் அரபு நாடுகள், தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பியவா்கள் ஆவா். இவா்கள் அனைவரும் ஒமைக்ரான் வகை தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்த ஆய்வில் அவா்களின் நோய் எதிா்ப்பு சக்தி வகைகளான ஐஜிஜி, என்ஏபி ஆகியவை குறிப்பிட்ட அளவில் அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து ஐசிஎம்ஆா் ஆராய்ச்சியாளா்கள் கூறியதாவது: தடுப்பூசி செலுத்தாதவா்கள் குறைந்த எண்ணிக்கையிலும், தொற்றால் பாதிக்கப்பட்டு குறுகிய காலமே ஆனவா்களும் இந்த ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டனா்.

ஒமைக்ரான் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தாதவா்களின் உடலில் குறைந்த அளவு நோய் எதிா்ப்பு சக்தி உருவாவதற்கு இதுவே முக்கிய காரணமாக இருக்கலாம் என்றனா்.

இந்த ஆய்வை ஐசிஎம்ஆா் ஆராய்ச்சியாளா்கள் பிரக்யா டி யாதவ், கஜனன் என் சப்கல், ரிமா ஆா் சகாய், பிரியா ஆப்ரகாம் உள்ளிட்டோா் மேற்கொண்டனா். எனினும் இந்த ஆய்வு முடிவுகள் மதிப்பாய்வு செய்யப்படவில்லை. இந்த ஆய்வு முடிவுகள் அதன் தளத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *