நான்காவது டோஸ் தடுப்பூச்சியும் பாதுகாப்பானதாக இல்லை ஆய்வாளர்கள் தகவல்!

கொரோனா தடுப்பூசியின் நான்காவது டோஸ் கூட ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படுவதைத் தடுக்க போதுமானதாக இல்லை என இஸ்ரேல் ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

முதற்கட்டமாக 270 சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு ஆய்வு முன்னெடுக்கப்பட்டது. இதில் மூன்று டோஸ் போட்டுக்கொண்டவர்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறிய அளவில் ஆன்டிபாடிகளை அதிகரிக்க செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும் நோய் பாதிக்கப்படுவதிலும் சொல்லும்படியான வேறுபாடு உணர முடியவில்லை என்கிறார் ஆய்வாளர்கள். இந்த ஆய்வு முடிவு ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளுக்கு பொருந்தும் எனவும், இந்த ஆய்வு முடிவால் தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் நிலை ஏற்படுமா என்ற விவாதம் எழலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்காவது தடுப்பூசி போட்டும் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு லேசான அறிகுறிகள் அல்லது அறிகுறியே காணப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

ஓமிக்ரான் பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு நான்காவது தடுப்பூசியால் பலனிருக்குமா என்பது தொடர்பில் முன்னெடுத்த ஆய்வு இதுவெனவும் இஸ்ரேல் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே, தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூச்சி போட்டுக்கொள்வதால் பலனேதும் இருக்காது எனவும், மாறாக நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தலாம் என கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றிய சுகாதார அமைப்பு கூறியிருந்தது.

மட்டுமின்றி, சில மாதங்களுக்கு ஒருமுறை தடுப்பூசி போடும் நிலைக்கு மக்களை தள்ளாமல் இருக்க கொரோனா மாறுபாடுகளை தடுக்கும் திறன்கொண்ட தடுப்பூசியை வடிவமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தடுப்பூசி நிறுவனங்களுக்கு உலக சுகாதார அமைப்பும் முன்வைத்துள்ளது.

கொரோனா தொற்றுக்கான பூஸ்டர் அல்லது மூன்றாவது தடுப்பூசியை நாட்டு மக்களுக்கு செலுத்திய உலகின் முதல் நாடு இஸ்ரேல்.

மட்டுமின்றி, இரண்டாவது தடுப்பூசியை இதுவரை முழுமையாக மக்களுக்கு அளிக்க முடியாமல் தடுமாறும் நாடுகளுக்கு மத்தியில் கடந்த மாதம் நான்காவது தடுப்பூசியை மூத்த குடிமக்களுக்கு செலுத்தியுள்ளது இஸ்ரேல்.

இதுவரையான ஆய்வுகளில், மூன்று தடுப்பூசி போட்டுக்கொண்டாலே 88 சதவீதம் அளவுக்கு மருத்துவமனையை நாடுவதில் இருந்து தப்பலாம் என்றே தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *