நாயின் பிறந்தநாளை கொண்டாட 30 இலட்சம் ரூபா செலவு செய்த பெண்!

பொதுவாக மக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பிறந்தநாளை மிகவும் ஆடம்பரமாக கொண்டாடுவதை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம் நேரில் கூட பார்த்திருப்போம். ஆனால் சமீபத்தில் தனது செல்ல நாயின் பிறந்தநாளை லட்சக்கணக்கில் செலவழித்து கொண்டாடிய பெண் ஒருவர் சர்வதேச அளவில் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக மாறி இருக்கிறார். மேலும் இவரது நாயின் பிறந்தநாள் கொண்டாடட்டங்கள் தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களிலும் வைரலாகி இருக்கிறது. சீனாவில் தான் பெண் ஒருவர் தனது ஆசை நாயின் 10-வது பிறந்தநாளை கொண்டாட பல லட்சம் ரூபாயை செலவழித்து ஆன்லைனில் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட பெண் தனது நாயின் 10-வது பிறந்தநாளை கொண்டாட, கிட்டத்தட்ட 1,00,000 யுவான் அதாவது இலங்கை மதிப்பில் சுமார் ரூ. 30 லட்சம் பணத்தை ட்ரோன்களுக்காக செலவழித்துள்ளார். செல்லப்பிராணி பிரியரான அந்த பெண் ட்ரோன்களை பயன்படுத்தி நாயின் பிறந்தநாளை ட்ரோன் லைட் ஷோ (DRONE LIGHT SHOW) மூலம் கொண்டாட 100,000 யுவான் பணத்தை செலவழித்து உள்ளார்.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட்டின் அறிக்கையின்படி, சாங்ஷாவில் உள்ள சியாங்ஜியாங் ஆற்றின் மீது வானத்தில் “டூடோவுக்கு 10-வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் (HAPPY 10TH BIRTHDAY TO DOUDOU) ” என்ற எழுத்துக்களையும், நாயின் உருவத்தையும் லைட் ஷோ மூலம் வெளிப்படுத்த சுமார் 520 ட்ரோன்களை அந்த பெண் வாடகைக்கு எடுத்ததாக கூறப்படுகிறது. தவிர எலெக்ட்ரானிக் ஃபிளையிங் மெஷின்கள் பர்த்டே கேக் மற்றும் ஜாக்-இன்-தி-பாக்ஸ் போன்ற பிற வடிவங்களை உருவாக்கி அப்பகுதி மக்களை திகைக்க வைத்தன. ஆனால் ஆற்றங்கரையில் ட்ரோன்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியில் அந்த பெண் தன் நாயின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

பெண்ணின் இந்த கொண்டாட்டம் சட்டத்திற்கு அப்பாற்பட்டது என்பதால் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உள்ளூர் பொலிசார் இந்த மகிழ்ச்சி கொண்டாட்டம் நீண்ட நேரம் நீடிக்காத வகையில் தடுத்து நிறுத்தி விட்டனர். பின்னர் பொலிசார் கூறிய தகவல்களில், பறக்கக்கூடாத பகுதியிலும் பல உயரமான அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அருகிலும் ட்ரோன்கள் பறக்க விடப்பட்டது சட்டத்திற்கு புறம்பானது. ஏனென்றால் நகரத்தின் விமான போக்குவரத்து விதிகள் அத்தகைய பகுதிகளை பறக்கக்கூடாத பகுதிகளாகக் குறிப்பிடுகின்றன. வானத்தில் பறக்கும் போது ட்ரோன்களை பார்த்திருந்தால் கண்டிப்பாக சுட்டு வீழ்த்தி இருப்போம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் அனைத்து குடிமக்களும் குடியிருப்பு பகுதிகளில் ஆளில்லா விமானங்களை பறக்கவிடுவதற்கு முன் காவல்துறையில் உரிய அனுமதி பெற வேண்டும் என்றும் உள்ளூர் பொலிசார் கூறி இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *