துணிக்கடை பொம்மைகளின் தலையை வெட்டி எறிய அதிரடி உத்தரவு!

துணிக்கடைகளில் உள்ள அலங்கார பொம்மைகளின் தலையை வெட்டி எறிய வேண்டும் என்று தலிபான்கள் உத்தரவிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து அங்கு கடந்த ஓகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார்கள்.

நாட்டை தங்களின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த தலிபான்கள் புதிய அரசாங்கத்தையும் அமைத்தனர். இதையடுத்து அவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தனர். குறிப்பாக பெண்களுக்கு கடும் நிபந்தனைகளை விதித்தனர்.

பள்ளிக்கு செல்லக்கூடாது. ஆண் உறவினர் துணை இன்றி வெளியே செல்லக்கூடாது என்பது போன்ற உத்தரவுகளை பிறப்பித்திருந்தனர்.

அதேபோல் திருமணத்தில் இசை நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது, சலூன் கடைகளில் தாடியை மழிக்கக்கூடாது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர்.

இந்நிலையில்,தற்போது துணிக்கடைகளில் உள்ள அலங்கார பொம்மைகளின் தலையை வெட்டி எறிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கின்றது.

இது குறித்து அந்நாட்டின் நல்லொழுக்கத்தை மேம்படுத்துதல் அமைச்சகத்தின் தலைவர் அஜிஸ் ரகுமான் கூறும்போது, ‘மனித உருவங்களை காட்சிப்படுத்துவது ஷரியத் சட்டத்துக்கு எதிரானது என்பதால் கடைகளில் உள்ள பொம்மைகளின் தலைகளை துண்டிக்குமாறு நாங்கள் உத்தரவிட்டுள்ளோம்.

அவர்கள் தலையை மட்டும் மூடி வைத்தாலோ அல்லது முழு பொம்மையை மறைத்து வைத்தாலோ அவர்களின் கடை மற்றும் வீடுகளில் கடவுள் ஆசீர்வதிக்க மாட்டார்’ என்று தெரிவித்துள்ளார்.

தலிபான்கள் உத்தரவை அடுத்து பொம்மைகளின் தலைகளை துணிக்கடைக்காரர்கள் துண்டித்து வருகிறார்கள். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி உள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *