உலகம் மோசமான கட்டத்திற்குள் நுழைய உள்ளது எச்சரிக்கும் பில்கேட்ஸ்!

கொரோனா பெருந்தொற்றின் மிகவும் மோசமான கட்டத்திற்குள் நுழைய இருக்கிறோம் என மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார். உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸின் பரவல் மிகவும் கவலைத்தரும் வகையில் இருப்பதால் பொதுமக்களை எச்சரிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டது:-

‘நாம் கொரோனா பெருந்தொற்றின் மிகவும் மோசமான கட்டத்திற்குள் நுழைய இருக்கிறோம். உலகம் முழுவதும் ஒமைக்ரான் பாதிப்பு அதிவேகமாக உயர்கிறது. எனக்கு நெருக்கமான நண்பர்கள் பலர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நான் எனது விடுமுறை திட்டங்கள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டேன்.

இதுவரை வரலாறு காணாத அளவுக்கு ஒமைக்ரான் வைரஸின் பரவல் வேகம் இருக்கிறது. விரைவில் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் இந்த வைரஸ் பரவி விடும். ஆனால் இது எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று இன்னும் நம்மால் கூறமுடியவில்லை. இந்த வைரஸ் அதிவேகமாக பரவும் தன்மையை கொண்டிருப்பதால் டெல்டா வைரஸை போன்று பாதி அளவு பாதிப்பை ஏற்படுத்தினால் கூட நிலைமை மிக மோசமாகிவிடும். அமெரிக்காவில் ஒரே வாரத்தில் ஒமைக்ரான் பாதிப்பு 3 சதவீதத்தில் இருந்து 73 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்த தொற்றில் இருந்து நாம் பாதுகாத்துக்கொள்ள அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மக்கள் கூடும் இடங்களை தவிர்க்கவும். தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும். பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொள்வது உங்களுக்கு சிறந்த பாதுகாப்பை கொடுக்கும்.

ஒமைக்ரான் அலையால் ஒரு நாடு பாதிக்கப்பட்டால் 3 மாதங்கள் வரை பாதிப்பு இருக்கும். பிறகு குறைந்துவிடும். ஒருநாள் இந்த பெருந்தொற்று முடிவுக்கு வரும். நாம் ஒருவருக்கொருவர் பாதுகாத்துக்கொண்டால் விரைவில் அந்த நாள் வரும்.

இவ்வாறு பில்கேட்ஸ் கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *