இலங்கையில் யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாறு!

யாழ்ப்பாணம் தைக்கா பள்ளி வாசலின் வரலாறு 1520 ஆம் ஆண்டு போத்துக்கீசர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய பொழுது முஸ்லிம்களில் ஒரு சில குடும்பங்கள் அப்போது வண்டிப் பாதையாக பெரிய வீதியாக ‘பெரிய தெரு’ என அழைக்கப்பட்ட நாவலர் வீதியில் ஒரு சில குடும்பங்களும் – மானிப்பாய் வீதி பெரிய முகைதீன் பள்ளிவாசல் அண்டிய பகுதிகளில் மேலும் சில குடும்பங்களும் – வசித்து வந்தன.

போத்துக்கீசர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியவுடன் முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி பூநகரி, முல்லைத்தீவு, நாச்சிக்குடா, வவுனியா, விடத்தல்தீவு, புத்தளம், குருநாகல், கண்டி போன்ற பிரதேசங்களில் சென்று  குடியேறினர்.

போத்துக்கீசருக்கு யாழ்ப்பாணத் தில் மக்கள் இல்லாமையால் எந்தவித வருமானமும் கிடைக்க வில்லை! அதனால் காடுகளில் வசித்த முஸ்லிம்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை யாழ்ப்பாணத்தில் மீண்டும் குடியேறும்படி வேண்டிக் கொண்டனர்.

அவர்களின் வேண்டுகோளை ஏற்று ஒரு சில குடும்பங்கள் யாழ்ப்பாணப் பட்டினத்தில்  குடியேறின.
அப்பொழுது ‘காட்டுப்பள்ளி’ என அழைக்கப்பட்ட பெரிய பள்ளி வாசலும், ‘பழைய பள்ளி’ என அழைக்கப்பட்ட பெரிய முகைதீன் பள்ளிவாசலும் திரும்பக் கட்டப் பட்டன.

முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்த பொழுது தைக்கா பள்ளியும் பின்னர் உருவாக்கப் பட்டது. இவ்வாறிருக்க,இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரள முஸ்லிம்கள் யாழ்ப்பாணத் துச் சனங்களுடன் தொடர்பு கொண்டு போத்துக்கீச படைக் கெதிராக பல தாக்குதல்களை மேற்கொண்டனர்.
அதேவேளை இன்னொரு கூட்டம் கதிர்காமம் பள்ளிவாசலுக்கு செல்வதற்காக யாழ்ப்பாணம் ஊடாக பிரயாணங்கள் செய்தனர்.

இவ்வாறானவர்கள் தாக்குதலில் இருந்து தப்பிக் கொள்வதற்காக – யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் கள் வெளியேறவும், உள்நுழைய வும் தடை விதித்தனர். அந்தக் காலத்தில் ‘பக்கிரிசா’மார் என வந்தவர்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற முடியாமல் அங்கேயே சிக்கிக்கொண்டனர். இவ்வாறு இரண்டு தசாப்தங்கள் ஓடின.

அக்காலத்தில் இந்தியாவில்
இருந்து வரும் உலமாக்களை நம்பியே யாழ்ப்பாணம் முஸ்லிம் கள் தமது மார்க்கக் கடமைகளை நிறைவேற்றி வந்தனர்.

உலமாக்கள் வருகை தடைபட்ட தால் ஏற்கனவே இங்கிருந்த ‘பக்கிரிசா’மார்களில் மக்கள் நம்பிக்கை கொண்டு – அவர்கள் சொல்வதெல்லாம் மார்க்கம் என்று நம்பத் தொடங்கினர்.

இந்த பக்கிரிசாக்கள் அரைகுறை இஸ்லாமிய அறிவையே கொண்டிருந்தனர். இதனால் அவர்கள் தாம் அறிந்து நம்பிக் கையாண்ட சில வழிமுறைகளை இஸ்லாத்துக்குள்ளே மார்க்கம் என்று சொல்லிப் புகுத்தினர்.

அவற்றில், ‘பல்லாக்கு தூக்குதல்’, ‘காவடி ஆடுதல்’, ‘தீ மிதித்தல்’ போன்றன இலங்கையின் தென்பகுதியில் நடைமுறையில் இருந்தது.

ஆனால் யாழ்ப்பாண முஸ்லிம்கள் மார்க்க விடயங் களை ஓரளவு அறிந்திருந்த காரணத்தினால் – யாழ். இந்துக்கள் மத்தியில் காணப்பட்ட ‘காவடி ஆடுதல்’, ‘தீ மிதித்தல்’ போன்ற செயற்பாடு களை யாழ்ப்பாணத்தில் செய்யவில்லை.

ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் ‘பல்லக்கு தூக்குதல்’ மட்டும் முஸ்லிம்களிடம் காணப்பட்டது. இது மார்க்கத்தில் இல்லாத செயல் என்பதை – வெளியுலக தொடர்புகள் இன்றி உலமாக்க ளின் வருகை இன்றி – போர்த்துக் கீசர் காலத்தில் முப்பத்தி எட்டு வருடங்களும், தொடர்ந்து ஒல்லாந்தர் காலத்தில் 150 வருடங்களும் – வாழ்ந்த முஸ்லிம் கள் அறிந்து கொள்ளவில்லை! (அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக.)

அதேவேளை, சிறிய கொட்டி லாக இருந்த தைக்கா பள்ளிவாசல் 18ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் தற்போதுள்ள தோற்றத்திற்கு கட்டப்பட்டது. இந்த பள்ளிவாசலும் முல்லைத்தீவு ‘மகபூப் சுபஹானி’ பள்ளிவாசலும் ஒரே நபரால் கட்டப்பட்டதாக வரலாறு உள்ளது.

இந்தப் பள்ளிவாசலில் ‘திக்ர்’, ‘ராத்திபு’ போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்று வந்தன. அக்காலத் தில் மக்கள் இஸ்லாத்தை குறைவாகவே அறிந்திருந்தனர்.
கூட்டுச் சேர்ந்து இறைவனை திக்ரு செய்வது, இறைவனை ஞாபகப்படுத்துவது போன்றன – மார்க்கத்திலுள்ள விடயங்களாக இருந்தபோதிலும் – அது கையாளப்பட்ட சில முறைகள் கேள்விக்கு உட்படுத்தப்பட்டது . மார்க்க அறிவு மீண்டும் வளர, வளர பல்லக்குத் தூக்குவதும் பின்னர் முற்றாக நிறுத்தப்பட்டது.

புது மாப்பிள்ளை, மணமகள் வீட்டுக்கு செல்லும் பொழுது இந்த தைக்காவுக்கு சென்று பாத்திஹா ஓதி சிற்றுண்டி வழங்கி,  அதன் பிறகே அவர் மணமகள் வீட்டுக்கு செல்வார். அதேபோன்று புதிய வாகனங்கள் வாங்கியவர்கள் அவ்வாறு பாத்திஹா ஓதி சிற்றுண்டி வழங்கி அதன் பின்பே வாகனங்களை இயக்குவது வழமையாக இருந்தது. இவையும் 1809ஆம் ஆண்டிற்குப் பிற்பாடு வெகுவாக குறைவடைந்தது.

இந்தக் காலப்பகுதியில் சிலர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் சென்று திரும்பி இருந்ததால் – அவர்கள் அங்கிருந்த மார்க்க விடயங்களை யாழ்ப்பாணத்து மக்களுக்கு சொன்ன பொழுது – அவர்களில் பலர் இவ்வாறான பழக்க வழக்கங்களை கைவிட்டனர்.

இந்த விடயத்தில் உலமாக்களின் பங்களிப்பும், தப்லீக் ஜமாத்தின் பங்களிப்பும் பாராட்டத்தக்கது. சீனித்தம்பி ஆலிம்ஷா, மீரா முகைதீன் ஆலிம்ஷா, அப்துல் ரசாக் ஆலிம்ஷா உட்பட வெளியூர் உலமாக்கள் இவ்வாறான புதிய சம்பிரதாயங்களுக்கு ஆதரவு வழங்கவில்லை.
எந்த நிகழ்வை தொடங்குவதற் கும் முன்பு, குர்ஆன் ஓதுவது என்பது தவறான ஒரு செயற்பாடு அல்ல. எந்த ஒரு செயற்பாட்டுக் கும்  முன்னால் ஒரு ‘சதக்கா’ செய்வது ஒரு நல்ல செயல் என்று இஸ்லாத்தில் வரவேற்கப்பட்ட செயலாகும்.

வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையை மட்டும் மக்கள் தொழுது வந்த ஓர் அறியாமை காலகட்டத்தில் – அல்குர்ஆனை ஓதி பிரார்த்தனை செய்வது என்பது – எந்தத் தவறும் இல்லை. ஆனால் ‘பல்லக்கு தூக்குவது’, ‘தீ மிதித்தல்’, ‘காவடி ஆடுதல்’ போன்றன, இஸ்லாத்திற்கு விரோதமான செயற்பாடுகள் என்பதை மறுக்க முடியாது.
‘திக்ரு மஜ்லிஸ்’ போன்றவைதான் ஒருகாலத்தில் இஸ்லாத்தை பாதுகாக்க உதவியது.

ஆனால் ஒரு சிலர் தர்ஹாக்களில் புதைக்கப்பட்டுள்ள இறந்த உடல்களின் மேல் கட்டிடங்களை கட்டி – அதன்மேல் துணிகளைப் போர்த்தி அதையெல்லாம் பெரும் விழாக்களாக்கி – அந்த இறந்த உடல்களையும் சிலர் துவா கேட்க செய்கின்றனர்.

இதுவும் இஸ்லாத்தில் இல்லாத ஒரு செயல்பாடு ஆகும். இது ‘இணை வைத்தல்’ என்ற இறை நிராகரிப்புப் குற்றமாகும்.

இந்த தைக்கா பள்ளி 2002ம் ஆண்டு காலப்பகுதியில் முழுமை யாக இருந்தது. அதற்கு முன்பு இந்தப் பள்ளியில் பல்லாக்குத் தூக்குதல் நிகழ்வு இடம் பெறாத காரணத்தால் – இது ஒரு சார்ந்த பள்ளிவாசலுக்கு ஒத்த தன்மைக ளைக் கொண்டு காணப்பட்டது.

இந்த கட்டிடம் மீண்டும் இங்கு உருவாக்கப்பட வேண்டும். இந்தக் கட்டிடத்துக்கு அருகாமையில் ‘சிவலை பள்ளிவாசல்’ ‘காவல் மஹால் பள்ளிவாசல்’, ‘சின்ன முஹிதீன் பள்ளிவாசல்’ போன்ற மூன்று பள்ளிவாசல்கள் காணப் படுவதன் காரணமாக, இந்த இடத்தில் ஒரு மத்ரஸாவை அமைத்து அல்-குர்ஆன், ஹதீஸ் போதனைகளை இங்கு மேற்கொள்ள முடியும்.
அவ்வாறு செய்வதன் ஊடாகத் தான் இந்த காணியை அல்லாஹ் வுக்காக ‘வக்ப்’ செய்தவர்கள் தொடர்ந்து நன்மைபெற முடியும்.

முன்னர் இந்தப் பள்ளிவாசலை அல்லாஹ்வுக்காக வக்பு செய்தவர்களின் குடும்பத்தினர் யாராவது இருந்தால் அவர்கள் இந்த இடத்தில் மீண்டும் மார்க்க சம்பந்தமான ஒரு கட்டிடத்தை செயற்படுத்தி தமது மூதாதையர் இருக்கும் தமது குடும்பத்தினருக் கும் தமது சந்ததிகளுக்கும் நன்மைகளைச் சேர்த்துக் கொள்ளட்டும்.

நன்றி : Jan Mohamed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *