கணவனுடனேயே உயிரைவிட விரும்பிய மனைவிக்கு உதவிய மருத்துவருக்கு சிக்கல்!

நோய்வாய்ப்பட்ட தன் கணவருடன், தானும் இணைந்து வாழ்வை முடித்துக்கொள்ள விரும்பிய ஒரு பெண் கருணைக்கொலை செய்துகொள்வதற்கு உதவினார் சுவிஸ் மருத்துவர் ஒருவர்.

2019ஆம் ஆண்டு, ஓய்வு பெற்ற மருத்துவரும், கருணைக்கொலை அமைப்பான Exit என்ற அமைப்பின் சுவிஸ் பிரிவின் துணைத் தலைவராக இருந்தவருமான மருத்துவர் Pierre Beck என்பவரிடம் கருணைக்கொலைக்காக ஒருவர் வந்துள்ளார். நோய்வாய்ப்பட்டிருந்த அவரைக் கருணைக்கொலை செய்ய முடிவான நிலையில், அவரது மனைவி, தன் கணவர் இறந்தபின் வாழ்வதற்கு தனக்கு விருப்பம் இல்லையென்றும், தன்னையும் கருணைக்கொலை செய்யுமாறும் கோர, Beck அந்த பெண் உயிரை விடுவதற்கும் உதவியுள்ளார்.

மயக்க மருந்து ஒன்றை அதிக அளவில் கொடுத்து, அந்த 86 வயது பெண் உயிரை விட Beck உதவியுள்ளார். ஆனால், அந்த பெண்ணுக்கு எந்த உடல் நல பிரச்சினையும் கிடையாது, அவர் ஆரோக்கியமாக இருந்தார் என்பது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கதாகும்.

ஆனால், அவர் மருந்துப் பொருட்கள் தொடர்பான பெடரல் சட்டத்தை மீறியதாகக் கூறி, அவருக்கு 120 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது, அவர் தானே அந்த முடிவை எடுத்திருக்காமல், மற்ற மருத்துவர்களின் ஆலோசனையையும் கேட்டிருக்கவேண்டும் என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் தற்போது ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த தீர்ப்பை நேற்று Lausanneஇலுள்ள பெடரல் நீதிமன்றம் மாற்றிவிட்டது. வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகளில் இருவர் ஒருவிதமாகவும், மூவர் வேறு விதமாகவும் முடிவு செய்ய, மருந்துப் பொருட்கள் தொடர்பான பெடரல் சட்டத்தின்படி Beck குற்றவாளி அல்ல என நீதிபதிகளில் மூவர் என தெரிவித்துள்ளனர்.

ஆனாலும், மீண்டும் இந்த வழக்கு ஜெனீவா மாகாண நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவேண்டும் என்றும், போதை ஏற்படுத்தும் மற்றும் Psychotropic Substances என்ற வகை பொருட்கள் குறித்த பெடரல் சட்டப்படி அந்த வழக்கு விசாரிக்கப்படவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அந்த பெண்ணை அமைதியாக அவரது கணவருடன் உயிர் துறக்க அனுமதிப்பதா அல்லது ஒரு பயங்கரமான ஒரு தற்கொலை நடக்க அனுமதிப்பதா என்று யோசித்து, அந்த பெண் கருணைக்கொலை செய்யப்படுவதே சிறந்தது என தான் முடிவு செய்ததாக தெரிவித்துள்ளார் Beck.

இன்னொரு முறை இதே முடிவை எடுக்க நேர்ந்தாலும் எடுப்பேன் என்று கூறிய அவர், ஆனாலும், அப்போது மற்ற மருத்துவகளின் ஆலோசனைகளையும் கேட்டுக்கொள்வேன் என்றும் கூறியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *