மனிதர்கள் ஆடை அணியும் பழக்கம் 1 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம்!

மனிதர்களையும் ஆடைகளையும் பிரித்துப் பார்க்க முடியாது. ஆடை அணியும் வழக்கம் நாகரீக காலத்துக்கு முன்பிருந்தே இருந்து வந்திருக்கிறது. ஆனால், அது 1,20,000 ஆண்டுகளுக்கு மேல் இருந்து வருகிறது என்பதை வட ஆப்பிரிக்காவின் மொராக்கோ நாட்டில் கிடைத்த ஆதாரங்கள் காட்டுகின்றன.

முதன் முறையாக ஆடை செய்வதற்குத் தேவையான கருவிகள் அங்குக் கிடைத்துள்ளன. அவற்றைக்கொண்டு தோல் ஆடைகளையும், கம்பளி ஆடைகளையும் மனிதர்கள் உருவாக்கிப் பயன்படுத்தியுள்ளனர்.

மொராக்காவில் உள்ள ‘கடத்தல்காரர்கள் குகையில்’ அகழாய்வு செய்த மொராக்கோ நாட்டுத் தொல்லியல் துறை இந்த கருவிகளைக் கண்டுபிடித்துள்ளது. ஆடை செய்வதற்கான 60 கருவிகள் அங்குக் கிடைத்துள்ளன.
இந்த குகையில் கிடைத்த கருவிகள் குறைந்தது 30,000 ஆண்டுகள் பயன்பட்டு வந்திருக்கின்றன. ஆடையைத் தயார் செய்யும் அறிவு சமூக அறிவாக/ நினைவாக மாறிவிட்டதை இது காட்டுகிறது. தலைமுறையாக இக்கருவிகள் பயன்பட்டு வந்திருக்கின்றன. சமூக அறிவு நிலை எட்டப்படுவது மானுட முன்னேற்றத்தில் மிகவும் முக்கியமான படிக்கட்டாகும்.

அந்த குகையில் கடல் சிப்பிகளிலிருந்து செய்யப்பட்ட ஆபரணங்களும் கிடைத்திருக்கின்றன. இந்த பண்பாட்டு முன்னேற்றத்தை இன்னமும் ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது.

மொரோக்கோவில் குறிப்பிடத்தக்க தொல்லியல் தடயங்கள் கிடைத்து வருகின்றன. கடந்த 22 செப்டம்பர் அன்று வடிவம் ஒழுங்குபடுத்தப்பட்ட கடல் நத்தை ஓடுகள் 30 கிடைத்துள்ளன. அவற்றின் காலம் 1 லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகளாகும். உலகத்தில் கிடைத்துள்ள மிகவும் பழமையான ஆபரணமாக அந்த கடல் நத்தை கூடு ஆபரணம் உள்ளது.

இதற்கு முன்புவட ஆப்பிரிக்காவில் கை கோடாலி உற்பத்தி செய்யும் இடம் ஒன்றைக் கண்டுபிடித்தனர். இது தொல் கற்காலத்தைச் சேர்ந்ததாகும். 13 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ எரெக்டஸ் வகையைச் சேர்ந்தவர்கள் இப்பகுதியில் கை கோடாலி உற்பத்தியில் ஈடுபட்டுவந்திருக்கின்றனர். ஹோமோ எரெக்டஸ் என்பது ஹோமோ சேப்பியன் என்ற வகைப்பட்ட நமது மனித குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானதாகும். இவ்வகை மனிதர்கள் அழிந்துபோய்விட்டனர்.

2017ல் நமது இனமான ஹோமோ சேப்பியனின் எலும்புக் கூடுகள் மொரோக்கோவில் கிடைத்தன. அவற்றின் வயது 3 லட்சம் ஆண்டுகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *