லொரி மீது சொகுசு கார் மோதியதில் ஐந்து இன்ஜினியரிங் மாணவர்கள் உயிரிழப்பு!

சென்னை அருகே வண்டலூரில் சாலையோரம் நின்ற லொரி மீது சொகுசு கார் மோதி நொறுங்கியதில் இன்ஜினியரிங் மாணவர்கள் ஐந்து பேர் உடல்நசுங்கி பரிதாபமாக பலியானார்கள். இன்று அதிகாலை நடந்த கோர விபத்து பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சேலம் மேட்டூரை சேர்ந்தவர்கள் நவீன் (23), ராஜா ஹாரீஸ் (22), திருச்சியை  சேர்ந்தவர் அஜய் (23)மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்தவர் ராகுல் (22). இவர்கள் அனைவரும் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்துள்ளனர். இதன்பிறகு சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்ட மேற்கண்ட அனைவரும் சென்னையில் தன்னுடன் படித்த நண்பர்களை சந்தித்து பேசுவதற்காகவும் சென்னை தி.நகரில் பொருட்கள் வாங்குவதற்காகவும் ஒரு சொகுசு காரில் நேற்று சென்னைக்கு வந்துள்ளனர். பின்னர் இவர்கள் அனைவரும் நண்பர் அரவிந்த் சங்கர் (23) மற்றும் தங்களுடன் படித்த சில நண்பர்களுடன் காரப்பாக்கத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கிவிட்டு தி.நகரில் பொருட்கள் வாங்கிவிட்டு மீண்டும் விடுதிக்கு திரும்பினர்.

இதையடுத்து விடுதியில் சில மணி நேரம் பேசிவிட்டு நள்ளிரவு 12 மணி அளவில் நண்பர்கள் அனைவரும் காரில் வண்டலூர் பகுதியில் சுற்றிவந்துள்ளனர். அந்த காரை நவீன் ஓட்டியுள்ளார். இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் உள்ள தனியார் ஐடி நிறுவனம் அருகே வந்தபோது அந்த கார், ஒரு வாகனம் மீது  மோதியது. இதில் அந்த காரின் கதவு உடைந்து விழுந்ததில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறான வேகத்தில் சென்ற கார், அங்கு சாலையோரம் இரும்பு கம்பி லோடுகளுடன் நிறுத்தப்பட்டிருந்த லொரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியதில் கார் அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்தது. இந்த விபத்தில் காரில் வந்த நவீன், ராஜாஹாரிஸ், அஜய், ராகுல், அரவிந்த் சங்கர் ஆகியோர் உடல் நசுங்கி நிகழ்வு இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து பார்த்ததும் அப்பகுதியில் மக்கள் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு நிலவியது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் தாம்பரம் போலீசாரும் தாம்பரம் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்பளம்போல் நொறுங்கிக் கிடந்த காருக்குள் சிக்கியிருந்த 5 பேரின் சடலங்களை மீட்டு சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து பற்றி குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விபத்து நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதுபற்றி போலீசார் கூறுகையில், ‘‘அதிகாலையில் நடந்த விபத்து பற்றி விசாரணை நடத்தி வருகிறோம். மாணவர்கள் அனைவரும் குடிபோதையில் இருந்தார்களா என்பது தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகுதான் தெரியவரும். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்’’ என்றனர். சென்னையில் இன்று அதிகாலை நடந்த கோர விபத்தில் 5 பேர் பலியானது பெரும் அதிர்ச்சியையும்  சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *