தலிபான்களின் கைகளுக்குச் சென்ற பயோமெட்ரிக் கருவிகள்!

பயோமெட்ரிக் கருவிகளின் தரவுகள் மூலம் தங்களுக்கு எதிராக செயற்பட்ட ஆப்கான் மக்களை தலிபான்கள் அடையாளம் காண கூடும் என்று அஞ்சப்படுகிறது.

தலிபான் தீவிரவாதிகள் கடந்த மாதம் 15ம் திகதி ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் தங்கள் வசமாக்கினர். அதேநேரம் ஏற்கனவே அவர்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி நேற்று முன்தினம் அமெரிக்க இராணுவம் ஆப்கானிஸ்தானை விட்டு முழுமையாக வெளியேறியது.

எனினும் ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றியதால் ஏற்பட்ட குழப்பம் மற்றும் பதற்றத்திற்கு மத்தியில் அமெரிக்கப் படைகள் அங்கு இருந்து வெளியேறியதால் விமானங்கள், உலங்கு வானூர்திகள் உள்ளிட்ட ஏராளமான இராணுவ தளவாடங்களை அங்கேயே விட்டு விட்டுச் சென்றன.

அவை அனைத்தும் தற்போது தலிபான்கள் வசம் சென்றுள்ளன. இந்த இராணுவ தளவாடங்கள் மட்டுமின்றி அமெரிக்க இராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு வந்த பயோமெட்ரிக் கருவிகள் சிலவும் தலிபான்களின் கையில் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க இராணுவத்தோடு பணிபுரிபவர்களை அடையாளம் காண, அந்த கருவிகள், அமெரிக்க படையினரால் பயன்படுத்தபட்டு வந்தன.

அந்த வகையில் அந்த பயோமெட்ரிக் கருவிகளில் ஆப்கானிஸ்தான் மக்கள் பலரின் கை ரேகை, கண்விழி ரேகை மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்ட தரவுகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த கருவிகள் தற்போது தலீபான்கள் வசம் சென்றிருப்பதால் அதில் உள்ள தரவுகள் மூலம் தங்களுக்கு எதிராக செயல்பட்ட ஆப்கான் மக்களை அவர்கள் அடையாளம் காண கூடும் என அஞ்சப்படுகிறது.

அப்படி அவர்கள் தங்களை அடையாளம் கண்டால் தங்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என அமெரிக்க படைகளுக்கு ஆதரவு அளித்து வந்த ஆப்கான் மக்கள் பலரும் அச்சத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *