விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நடிகை சமந்தா!

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடந்த இவர்களின் திருமணத்திற்குப் பிறகு சமந்தா ஹைதராபாதில் வசித்து வருகிறார். சமந்தா ரூத் பிரபு என்று இருந்த தனது சமூக வலைதள பக்கங்களின் பெயரை நாக சைதன்யாவின் குடும்பப் பெயரான அக்கினேனியை சேர்த்து ‘சமந்தா அக்கினேனி’என்று மாற்றினார். இந்த நிலையில், சமந்தா அக்கினேனி என்ற பெயரை நீக்கிவிட்டு வெறும் ‘S’ என்று தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் சமீபத்தில் மாற்றியது நாக சைதன்யா – சமந்தா ஜோடி விவாகரத்து செய்யவிருக்கிறார்கள் என்ற வதந்தியை பரப்பியது. அதேசமயம், தற்போது ‘சகுந்தலம்’ படத்தில் நடித்து வருவதால் ‘s’என மாற்றினார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், இன்று சமந்தாவின் மாமனாரும் நடிகருமான நாகர்ஜுனாவின் பிறந்தநாளுக்கு சமந்தா வாழ்த்து சொன்னால் விவாகரத்து செய்யவிருக்கிறார்கள் என்பது வதந்திதான் என்று கருத்திட்டு வந்தார்கள் ரசிகர்கள். அவர்களின் கருத்தை மெய்ப்பிக்கும் விதமாக சமந்தா நாகர்ஜுனாவின் பிறந்தநாளையொட்டி, இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ”உங்கள் மீதான எனது மரியாதையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. என்றும் எப்போதும் உங்களுக்கு மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் நிறைந்திருக்க வாழ்த்துகிறேன் மாமா” என்று உற்சாகமுடன் வாழ்த்தியுள்ளார். இதனை, சமந்தா – நாக சைதன்யா ரசிகர்கள் ரீட்விட் செய்து ‘விவாகரத்தெல்லாம் வதந்தி’என்று கொண்டாடி வருகிறார்கள். மேலும், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் நாக சைதன்யா – சமந்தா ஜோடி ஒருவருக்கொருவர் பாலோவ் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *