மீண்டும் கதாநாயகனாக கார்த்திக்!

நவரச நாயகன் கார்த்திக் பேக் டு த பெவிலியன். தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கோலோச்சிய காதல் நாயகன், இப்போது  ‘தீ இவன்’ படத்தின் மூலம் மீண்டும் ஹீரோவாக ஆட்டத்துக்கு ரெடியாகிவிட்டார்.அவரை இயக்குபவர் டி.எம்.ஜெயமுருகன். முரளியின் ‘ரோஜா மலரே’, ஜெய் ஆகாஷ் நடித்த ‘அடடா என்ன அழகு’ படங்களை இயக்கியும், மன்சூர் அலிகான் நடித்த ‘சிந்துபாத்’தை தயாரித்தும் கலக்கியவர் இவர். 

‘‘1997ல முரளி நடிப்பில் ‘ரோஜா மலரே’ பண்ணினேன். முரளி படங்கள்லயே அதிக பட்ஜெட் படமா வந்துச்சு. அதாவது அப்பவே ஒண்ணேகால் கோடி ஆச்சு. படமும் நல்ல படமா வந்ததால பெயரும் கிடைச்சது. ஆனா, லாபமும் இல்ல. நஷ்டமும் இல்ல. தொடர்ந்து படமெடுக்கணும்னா, நம்ம கைல காசு நின்னாதானே அடுத்தடுத்து பண்ணமுடியும்? அதனால, ஊருக்கே திரும்பிப் போய் பிசினஸை கவனிச்சேன். 

சின்ன வயசுல இருந்து சினிமாதான் என் ஆசை, கனவு, லட்சியம் எல்லாமுமே. நாடகம் போட்டிருக்கேன். அதுல நடிச்சிருக்கேன். ஸோ, எனக்குள்ள முழுக்க சினிமா ஆக்ரமிச்சதால என்னால பிசினஸ்ல முழு மனசா ஈடுபட முடியல. மறுபடியும் இங்கே வந்து ‘அடடா என்ன அழகு’ பண்ணினேன். அதுவும் நல்லபடம்தான். ஆனா, ஏனோ ரீச் ஆகல. மறுபடியும் ஊருக்கு திரும்பினேன். அப்புறம், திரும்பி வந்து ‘சிந்துபாத்’ தயாரிச்சேன். இப்ப மறுபடியும் டைரக்‌ஷனை கைல எடுத்திருக்கேன். பாடலும், இசையும் கூட நானேதான் பண்ணியிருக்கேன்…’’ ஒளிவு மறைவில்லாமல் பேசுகிறார் டி.எம்.ஜெயமுருகன்.

எப்படி வந்திருக்கு படம்?

எங்க ‘தீ இவன்’ அழகான கிராமத்து மண்மணக்கும் கதை. நம்ம கலாசாரம், பண்பாடு, அண்ணன் தங்கை பாசம் எல்லாமும் சேர்ந்த படமா இருக்கும். 
ரத்தமும் சதையுமான உறவை சொல்லும் படம்கிறதால நல்லா பர்ஃபார்ம் செய்யும் ஹீரோவா தேடினோம். கார்த்திக் சார்தான் மனசுல வந்து நின்னார்.

அவருக்கு ஜோடியா சுகன்யா, அப்புறம் அபிதா, இளவரசு, ஜான் விஜய், சரவண சக்தி, சிங்கம்புலி, புதுமுகம் சுமன் ஜெ-னு கதைக்கான ஆட்கள் இருக்காங்க. திருப்பூர், பொள்ளாச்சி பகுதிகள்ல ஷூட்டிங் நடத்தினோம். போன வருஷம் இதே டைம்ல ஷூட் கிளம்பினோம். பத்து நாட்கள் ஷூட் போயிருக்கும். லாக்டவுன் வந்திடுச்சு. அப்புறம், ரெண்டாவது ஷெட்யூலை இப்பதான் முடிச்சோம். இன்னும் முப்பது பர்சன்ட் ஷூட் பேலன்ஸ் இருக்கு. 

இந்தப் படத்துக்குப் பிறகு கார்த்திக் சார், மறுபடியும் ஒரு ரவுண்ட் வருவார். அந்தளவு நேர்த்தியான நடிப்பை கொடுத்திருக்கார். என்னோட படங்கள்ல கேமராவுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பேன். நான் நினைக்கற கதைக்கு வடிவம் கொடுக்கறவர் ஒளிப்பதிவாளர்தான். அதனால, பெரிய டெக்னீஷியனாகத்தான் செலக்ட் பண்ணுவேன். இதுலேயும் அப்படித்தான் ஒய்.என்.முரளி ஒளிப்பதிவு செய்திருக்கார். விஜயகாந்த் நடிச்ச ‘சபரி’, சரத்குமார் நடிச்ச ‘கம்பீரம்’னு கலக்கினவர். இசையும் நானே என்பதால், கதைக்கான மூட் கொண்டு வந்திருக்கேன். 

கார்த்திக் ஷூட்டிங்கிற்கு ஒழுங்கா வரமாட்டார்னு சொல்வாங்களே..?

கார்த்திக் சார்கிட்ட இந்தக் கதையை சொன்னதும், முழுக்கதை யையும் உள்வாங்கிக் கேட்டுட்டு சந்தோஷமானார். நடிக்கவும் சம்மதிச்சார். அவரை வச்சு படம் பண்ணப் போறேன்னு தெரிஞ்சதும் பலரும் என்கிட்ட வந்து ‘அய்யய்யோ அவரா’னு சொல்லி  பயமுறுத்தினாங்க. 

ஆனா, எனக்கு பயமில்ல. இந்த விஷயத்தை சார்கிட்ட நேர்லேயே கேட்டுட்டேன். அவரோ ரொம்ப கூலா ‘இத பாருங்க… இதுவரை 135 படங்களுக்கு மேல பண்ணியிருக்கேன். என்கிட்ட சரியா நடக்காதவங்க, என்னை பயன்படுத்திக்க நினைச்சு ஏமாற்றம் அடைஞ்சவங்க பலரும் இப்படி கிளப்பிவிட்டிருக்காங்க. யாருக்குமே நான் கால்ஷீட் குடுக்காம தவிக்க விட்டிருந்தா எப்படி இவ்ளோ படங்கள் நடிச்சிருக்க முடியும்… முடிச்சிருக்க முடியும்’னு கேட்டார். 

அவர் எப்படிப்பட்ட பர்ஃபாமர்னு எல்லாருக்கும் தெரியும். நானும் கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, அதை ஸ்பாட்ல நேர்ல பார்த்ததும், அவ்ளோ எனர்ஜி வந்திடுச்சு. செம டேலன்ட்டானவர். ஒரு சென்டிமென்ட் சீனுக்கான டயலாக் எழுதியிருந்தேன். ஆனா, அவரோ டயலாக்கே இல்லாம அதை எக்ஸ்பிரஷன்ஸ்லேயே அந்த உணர்வு பூர்வமான நடிப்பை கொடுத்தார். ஒரு பைக் ஃபைட் இருக்கு. மிரட்டியிருக்கார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *