மேற்கத்திய தீவுகளுக்கு எதிரான 2வது டெஸ்டில் பாகிஸ்தான் வெற்றி!

சபைனா பார்க்கில் நடைபெற்ற 2வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் ஷா அப்ரீடி 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதையடுத்து டெஸ்ட் போட்டியை வென்ற பாகிஸ்தான், மே.இ.தீவுகளுக்கு எதிராக தொடரை 1-1 என்று சமன் செய்தது.

பவாத் ஆலமின் அருமையான 124 நாட் அவுட்டினால் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 9 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் எடுத்தது, முன்னதாக ஷாகின் ஷா அப்ரீடியின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் மே.இ.தீவுகள் முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்குச் சுருண்டது, அப்ரீடி 51 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 2வது இன்னிங்ஸில் 176/6 என்று டிக்ளேர் செய்தது. 27 ஓவர்களில் இந்த ஸ்கோரை எடுத்து ஓவருக்கு 6.43 என்ற ரன் விகிதத்தில் பாகிஸ்தான் விளாசியது. இதனையடுத்து மே.இ.தீவுகளுக்கு 329 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் மே.இ.தீவுகள் 219 ரன்களுக்குச் சுருண்டது. பாகிஸ்தான் அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என்று சமன் செய்தது.

முதல் டெஸ்ட் போட்டியில் கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியாமல் தோற்ற பாகிஸ்தான் இந்த போட்டியில் எழுச்சி கண்டது.

49/1 என்று மே.இ.தீவுகள் தொடங்கியது. ஆனால் காலை இரண்டு மணி நேர ஆட்டத்திலேயே 4 விக்கெட்டுகளை இழந்து 113/5 என்று சரிவு கண்டது மே.இ.தீவுகள். என்க்ருமா போனர், ராஸ்டன் சேஸ் விரைவில் பெவிலியன் திரும்புவதை வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி உறுதி செய்தார்.

17 நாட் அவுட் என்று முதல் நாளில் இருந்த கேப்டன் பிராத்வெய்ட் தேநீர் இடைவேளைக்குப் பிறகு நவ்மன் அலி பந்தை கட் செய்து பாயிண்டில் கேட்ச் ஆகி 39 ரன்களில் வெளியேறினார்.

2வது இன்னிங்ஸிலும் ஷாகின் ஷா அப்ரீடி 43 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி மொத்தம் 94 ரன்களுக்கு இந்த டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஜேசன் ஹோல்டர், கைல் மேயர்ஸ் 46 ரன்கள் கூட்டணி அமைத்து சம்பிரதாயத்தை கொஞ்சம் தள்ளிப் போட்டனர் அவ்வளவே, மேயர்ஸ் 32 ரன்களிலும் ஜேசன் ஹோல்டர் டாப் ஸ்கோராக 47 ரன்களையும் எடுத்தனர், ஷாகின் அப்ரீடி விரைவில் டெய்ல் எண்டர்களை காலி செய்ய 219 ரன்களுக்குச் சுருண்டது மே.இ.தீவுகல், ஷாகின் அப்ரீடி தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தொடரை இழந்த வெஸ்ட் இண்டீஸ் பாகிஸ்தானுடன் டிரா செய்ததை பாசிட்டிவ் ஆகவே கருதுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *