சமத்துவம் (இருக்கு ஆனால் இல்லை)

– பஸ்றி ஸீ. ஹனியா
LL.B (Jaffna)

மரபுகளையும் சமூக வழக்காறுகளையும் மையமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கும் சட்டமானது யாவருக்கும் சமமான அங்கீகாரத்தையும் சுயகௌரவத்தையும் வழங்கவேண்டிய பாரிய பொறுப்புடமைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் சட்டம் பற்றிய பல அதிருப்திகள் சாதாரண சமான்ய மக்களிடையே மட்டுமன்றி பல பழுத்த சட்டநியாயாதிக்கவாதிகளிடையேயும் நிலவி வருகின்றது. “நாய் என்றால் குட்டை இருக்கும், சட்டம் என்றால் ஓட்டை இருக்கும.”

இவ்வாறான பல விமர்சனங்களுக்கு மத்தியில்தான் சட்டம் இன்றைக்கு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. இருந்தபோதிலும் இலங்கை சட்டம் தொடர்பான பல சர்ச்சைகளும், விடையில்லா வினாக்களும் எழுந்துகொண்டேதான் இருக்கின்றன.

குறிப்பாக தேசவழமைச் சட்டம் இலங்கைத் தீவில் குறிப்பாக வடபுலத்தில் பெண்ணடிமைத் தனத்தையும் சமூக வேறுபாடுகளையும் தொடர்ந்தும் இருப்புச் செய்வதற்கான விசேட பண்புகளைக் கொண்டிருப்பதனால் இவை நவீன காலணித்துவ அரசியல் சித்தாந்தங்கள் மிகவும் எழுச்சியாக பேசப்படும் இக்காலகட்டத்தில் இவை தொடர்ந்தும் தேவைதானா என்கின்ற கேள்வியை சாமானியர்கள் மத்தியில் அவிழ்த்து விடுகின்றது.

இதற்கான பதிலை ஆழ்ந்து ஆராய்வதற்கு முன்னர் தேசவழமைச் சட்டம் என்றால் என்ன? என்பது தெரிந்திருக்க வேண்டும். மேலும், தேசவழமைச் சட்டமானது இலங்கையில் எவ்வாறு இத்தனை தாக்கத்தைச் செலுத்தக்கூடிய சட்டமாக இருக்கின்றது என்பதற்கான பதிலும் அறிந்திருத்தல் முதற்கட்டமானது.

நாம் ஆளப்பட்டுக் கொண்டிருக்கும் 1978ஆம் ஆண்டு இலங்கையின் சோசலிச குடியரசானது தனது 16(1) சரத்திலே எழுதப்பட்ட எழுதப்படாத எல்லாச் சட்டங்களும் இலங்கையில் நடைமுறை இருக்கும் என்பதற்கும் மேலாக யாப்பு சட்டத்துக்கும் இந்த எழுதப்படாத எழுதப்பட்ட சட்டங்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் ஏற்படும் போது தனியார் சட்டங்களை மேலோங்கும் என்பதனை உள்ளங்கை நெல்லிக்கனி ஆகிவிட்டது.

ஆகவேதான் தனியார் சட்டங்களான முஸ்லிம் சட்டம், தேசவழமை சட்டம், கண்டிய சிங்களச் சட்டம் என்பன இற்றைக்கு இலங்கை எனும் வாகனத்தில் சக்கரங்களாக விளங்குவதற்கு பிரதான காரணம் யாப்பில் யாப்பு தனக்குத்தானே வைத்துக்கொண்ட சூனியமே ஆகும்.

தனியார் சட்டமான தேசவழமைச் சட்டம் எவ்வாறு ஆண் – பெண் சமத்துவத்தை பேணி இருக்கின்றது என்பதைப் பின்வருமாறு ஆராய்ந்து பார்ப்போம்.

தேசவழமைச்சட்டம் என்பது இலங்கையின் வடபுலத்தில் வாழும் தமிழ் மக்களின் மரபுசார் பாரம்பரிய சட்டமாகும். இலங்கைத் தீவின் வடபுலத்தமிழர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான தனித்துவ மரபுகளைக் கொண்ட இனக்குழுமம் ஆகும். இவர்களின் மரபுகளினதும் வழக்காறுகளினதும் (Customs) தொகுப்பே தேசவழமைச்சட்டமாகும். ஒல்லாந்த ஆட்சியாளர்களினால் 1707 இல் தொகுக்கப்ட்ட இச்சட்டம் 1806 முழுமையான அமுழுக்கு வந்தது.

இருப்பினம் இந்தச் சட்டம் சொத்து மற்றும் திருமணம் தொடர்பான விடயங்களில் மட்டுமே நியாயதிக்கம் (Jurisdiction) செலுத்துகின்றது. சிவஞானசிங்கம் எதிர் சுந்தரலிங்கம் என்கின்ற வழக்கு தேசவழமைச் சட்டத்தின் முழுமையான பிரயோகத்தை விரிவாக விபரிக்கின்றது.

எது எப்படியாயினும் தேசவழமைச் சட்டம் பெண்களின் உரிமையை பாதுகாப்பதில் பாரிய கேள்வி எழுகின்றது

ஈழத்தமிழர் பண்பாட்டில் பெண்களுக்கான அங்கீகாரம் பல இடங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் தமது சுயநிர்ணய உரிமை போராட்டத்தில் (Self Determination) கூட பெண்களின் பங்கு அபரிதமாக இருப்பினும் தேசவழமைச் சட்டம் அவர்களுக்கான உரிமையைப் பாதுகாக்கின்றதா?  ஏனைய சட்ட முறைமைகளான கண்டியன் சட்டம் , முஸ்லிம்களின்  சட்டம் என்பன ஒடுக்குமுறைகளை கொண்டிருந்த போதிலும்  தேசவழமை மிகப் பரந்த அளவில் பெண்களின் சொத்துரிமையை குறுக்கியுள்ளதோ என்பது பின்வரும் இடங்களில் தோன்றுகின்றது.

Jaffna Marriage and  Registration ordinance  

பிரிவு 3, தேசவழமையில் பிறந்த பெண்ணொருவர் தேசவழமைச் சட்டத்தால் ஆளப்படாத ஆணை திருமணம் செய்யும்போது தேசவழமை சார்ந்த எத்தனை உரிமைகளை இழக்கின்றார் என்பது மாபெரும் மனித உரிமை மீறலாகும்.

பிரிவு 6 திருமணம் செய்த பெண் ஒருவர் தனது சொந்தச் சொத்தை விற்பது என்றால் கூட கணவனின் சம்மதம் வேண்டுமென வலியுறுத்துகின்றது.

இப்படியான வழமை நெறி பிறந்தகால கட்டத்திலே இருந்த சமுதாய நிலை வேறு. இன்றைய நிலை வேறு. அன்றைய தேசவழமை மனைவி கல்வியறிவற்ற பேதையாக, உலகறிவு இல்லாத மடந்தையாக இருந்திருப்பாள். இன்று தேசவழமை மனைவிமார் பலர் சட்டத்தரணிகளாகத் தொழில் பார்க்கிறார்கள். அத்தகைய பெண் சட்டத்தரணிகள் மற்றவர்களுக்கு (ஆடவர்களுக்கும் கூட) பின்னவரின் சட்ட உரிமைகளைப் பற்றி ஆலோசனை வழங்குகிறார்கள். ஒப்பந்தங்கள், உறுதிகள் தயாரித்து அத்தாட்சிப்படுத்துகின்றார்கள். ஏனையோருக்காக நீதிமன்றங்களில் வழக்காடுகின்றார்கள். அவ்வாறான பெண் சட்டத்தரணிகளில் ஒருவர் இன்று நீதிபதியாகவும் பொறுப்பேற்று இருக்கின்றார். இந்தநிலையில் தேசவழமை மனைவிமாரை இன்னும் பராயமறியாப் பாலகர் நிலைக்குத் தள்ளி கணவர்களின் ஆதிக்கத்துக்குக் கட்டுப்பட்டவர்களாக்குதல் நியாயமானதாகாது.

நம் நாட்டின் அரசமைப்பும் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனமும் மட்டுமல்ல பாட்டுக்கொரு புலவன் பாரதி முதல் இன்றைய தமிழ் இலக்கியங்கள் கூட பெண்ணை ஆணுக்கு நிகராகக் கணிக்கின்ற இன்றைய கால கட்டத்தில் தேசவழமை இன்னும் ஒரு மணமான பெண்ணைப் பராயமற்ற பிள்ளை நிலைக்குத் தள்ளுவது எவ்விதத்திலும் நீதியாகாது என்பதை எவரும் ஏற்பர். எனவே, தேசவழமைச் சட்டத்தின் இந்த அம்சம் பொருத்தமான முறையில் திருத்தப்பட வேண்டும் என்பது இங்கே தெளிவு.

சட்டத்துக்கு முன் சகலரும் சமம் என்று தம்பட்டமடிக்கும் சட்டம், சில நேரங்களில் இனக்குழுக்களினதும் பிரதேசங்களினதும் தனித்துவத்தைப் பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் சமத்துவத்தை மறந்து விடுகின்றது. யாவும் களையப்படும் வரை பெண்ணடிமைத்தனமும், பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளும் தவிர்க்க முடியாத அவலங்களாகத் தொடர்ந்தும் நிகழும் என்பதே நிதர்சனம். ஆகவேதான் சட்டங்கள் தானாகத் திருந்தாது ;அவை திருத்தப்பட வேண்டும். அவை திருத்தப்பட வேண்டும் என்றால் அதற்கான உந்தல்கள் வழங்கப்பட வேண்டும். அந்த உந்தல்களை வழங்குவதற்கு எம்மை விட சிறந்த ஆயுதம் எங்கேயும் கிடையாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *