பஸிலின் வருகையால் விமல், கம்மன்பில விடைபெறுவார்கள்?

இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் பாராளுமன்றம் வருவதற்கு அமைச்சர்களான விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். எனினும், இரட்டைக் குடியுரிமையுடைய பஸில் பாராளுமன்றம் வரவுள்ளார். அப்படியானால் மேற்படி அரசியல் தலைவர்கள் என்ன செய்யப்போகின்றார்கள்? அவர்கள் அரசிலிருந்து விடை பெறுவார்களா? என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.

இதன்படி ,பஸில் ராஜபக்சவின் பாராளுமன்ற வருகை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே எதிர்க்கட்சி உறுப்பினரான சமிந்த விஜேசிறி இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:-

மேலும் ,“வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டும். அதற்கான சக்திவாய்ந்த பிரமுகரே பஸில் ராஜபக்சவென பரப்புரை முன்னெடுத்து, நாடகமாடி அவரைப் பாராளுமன்ற உறுப்பினராக்கி, அமைச்சுப் பதவியை வழங்குவதற்கான முயற்சியில் ஆளுங்கட்சி ஈடுபட்டு வருகின்றது.

இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கும், அரச கட்டமைப்பில் உயர் பதவிகளை வகிப்பதற்கும் விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் கடந்தகாலங்களில் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். தற்போது இரட்டை குடியுரிமையுடைய பஸில் பாராளுமன்றம் வந்து அமரப்போகின்றார். எனவே, மேற்படி மூவரும் எவ்வாறான அரசியல் முடிவை எடுக்கப்போகின்றனர் என்பது தொடர்பில் அறிய நாமும் நாட்டு மக்களும் ஆர்வமாக உள்ளோம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *