இங்கிலாந்தின் முதல் பள்ளிவாசல்!

இங்கிலாந்தின் முதல் முஸ்லிம் என அறியப்படும் வில்லியம் கிலியம் (இவர் குறித்து முன்னரே பதிவிட்டதுண்டு) ,ஆப்கான் அரசர் நஸ்ருல்லாஹ் கான் அவர்களின் உதவியில் லிவர்பூலில் தொடங்கிய இஸ்லாமிய கல்வி நிறுவனம் தான் முஸ்லிம்களுக்கான தொழுகையிடமாகவும் இருந்தது. ஆனால் அதே ஆண்டு, இந்தியாவின் மபி மாநிலத்தில் இருக்கும் போபால் ராஜ்தானியின் நவாப்ராணி சுல்தான் ஷாஜஹான் பேகம் அவர்களால் நிதியுதவி செய்யப்பட்டு
கிழக்கு லண்டனில் வோகிங் பகுதியில் முழுமையாக பள்ளிவாசலாகவே கட்டப்பட்டது தான் ஷாஜஹான் பள்ளி .

இங்கிலாந்தில் முஸ்லிம்களுக்கான தனி பள்ளிவாசல் வேண்டும் என்றெண்ணி அங்கு பள்ளிவாசல் அமைக்க திட்டமிட்டவர்
‘கொதலிப் வில்ஹம் லெய்தனர்’ என அறியப்படும் யூதர் தான். ஹங்கேரி நாட்டில் யூத வம்சாவளி பெற்றோருக்கு பிறந்த லெய்தனர் சிறு வயது முதலே பன்மொழிகள் கற்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். இந்த ஆர்வம் அவரை துருக்கி,அரபு உட்பட ஐம்பது மொழிகள் கற்க தூண்டியது. தம்முடைய எட்டாவது வயதில் துருக்கியும் அரபியும் கற்க காண்ஸ்டாண்டிநோபுள் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டார், பதினைந்தாவது வயதில் பிரிட்டிஷ் படைகள் சார்பாக யுக்ரேனின் கிரைம்யா நகருக்கு பணி செய்ய சென்றார், அங்கே நடைபெற்ற போருக்கு பிறகு தாம் ஒரு மதப்பிரசங்கியாக விரும்பியவர், இங்கிலாந்து திரும்பிய பிறகு லண்டன் கிங்ஸ் கல்லூரியில் சேர்ந்து இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் மத்திய தரைகடல், செமிதிக் கலாச்சாரங்களையும் மொழிகளையும் கற்றார்.

மத்திய தரைகடல் நாடுகளில் பிரயாணித்த போது தனது பெயரை ‘அப்துர் ரஷீத் சைய்யா’ எனவும் மாற்றிக்கொண்டார். தாம் கற்ற அனைத்து மொழிகளிலும் சரளமாக எழுதவும் பேசவும் கற்றுக்கொண்டவருக்கு 19 வயதில் அரபு,கிரேக்க மொழிகளில் விரிவுரையாளராக பணி கிடைத்தது. அதன்பின் அவரது 23வது வயதில் லண்டன் கிங்ஸ் கல்லூரியில் அரபுத்துறை பேராசிரியராகவும் இஸ்லாமிய சட்டங்களை கற்பிக்கும் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

கிபி 1864ல் லாகூரில் இருந்த அரசு கல்லூரி பல்கலையில் தாளாளர் பணி கிடைத்த போது தற்போதைய பாகிஸ்தானும் அப்போதைய பிரிட்டிஷ் ராஜ்ஜியமுமான லாகூருக்கு வந்து சேர்ந்தார். 1882ல் பஞ்சாப் பல்கலைக்கழகம் உருவாக நிறுவனராக இருந்தவரும் இவரே. மேலும் இந்திய துணைக்கண்டத்தில் பல பள்ளிகள், கல்லூரிகள், பத்திரிகைகள் மற்றும் இலக்கிய கழகங்கள் உருவாக காரணகர்த்தாவாகவும் இருந்துள்ளார். உருது மௌலவியான கரீமுத்தீன் (அம்ரிஸ்தரின் மாவட்ட கல்வித்துறை அதிகாரி) அவர்களுடைய உதவியால் உருது,அரபு மற்றும் இஸ்லாம் தொடர்பான இரு புத்தகங்களை இயற்றியுள்ளார். 1871 மற்றும் 1876ம் ஆண்டு பதிப்பில் ஏறிய இவரது புத்தகங்களை அங்கீகரித்து அப்போதைய பிரிட்டிஷ் ராணி விக்டோரியா இவருக்கு ‘கேசரி-இ-ஹிந்த்’ என்ற பட்டத்தை கொடுத்து கவுரவித்தார். 1886லேயே இவருக்கு இந்தியாவின் சிவில் சர்வண்ட் பணி முடிவுக்கு வந்துவிட்டது. மீண்டும் ஐரோப்பாவிற்கே திரும்பியவர் ஜெர்மனியின் ஹைடல்பர்க் பல்கலையிலும் , ஆஸ்திரிய மற்றும் புருஷ்யா நாடுகளில் அரசு அலுவலக பணிகளில் இருந்தார்.

நீண்ட நாட்களாக ஐரோப்பாவில் ஒரு Oriental languages, culture and history துறைகளுக்கான பாடசாலை அமைக்க வேண்டும் என்பதே அவரது திட்டமாக இருந்தது, 1883ல் அதற்கான இடத்தை தேர்வு செய்திருந்தார். தம்மிடம் பயிலும் முஸ்லிம் மாணவர்களுக்கான தொழுகையிடம் வேண்டுமென கருதிய அவர் அப்போது காலியாக இருந்த ராயல் டிரமாடிக் காலேஜ் கட்டிடத்தை வாங்கி அதனை இடித்துவிட்டு இந்தோ-சரசானிக் ஸ்டைலில் முதன்முதலாக ஒரு பள்ளிவாசலை கட்டினார் அதற்கு பண உதவி புரிந்த போபால் ராணி பேகம் ஷாஜஹான் சுல்தான் அவர்களது பெயரையே வைத்தார். ஷாஜஹான் பள்ளிவாசல் என்ற அடையாளத்துடன் இந்த பள்ளிவாசல் இப்போதும் இயங்கிக்கொண்டுள்ளது.

நவாப்ராணி ஷாஜஹான் பேகம் அவர்கள் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கும், ஹோசங்காபாத் ரயில்நிலையம் அமையும் பெரியளவு நிதியுதவி கொடுத்துள்ளார். இந்தியாவில் நவாப்களாக இருந்த ஆண்களுக்கு மத்தியில் ஒரே நவாப்ராணியாக இருந்து ஆளுகை செய்தவர் போபால் ராணி ஆவார். (இவரை குறித்த குறிப்புகள் பிறகு எழுதுகிறேன்)

இங்கிலாந்துக்கான முதல் பள்ளிவாசலை கட்டித்தந்தவர் ஒரு யூதர் என்பது நம்மில் பலருக்கு ஆச்சரியமாக இருந்தாலும், கல்வி என்ற அடிப்படையில் இஸ்லாமிய விழுமியங்களை நீக்கமற கற்ற பல கல்வியாளர்களும் அறிஞர்களும் உலகின் சில பகுதிகளில் இஸ்லாம் வளர காரணகர்த்தவாக இருந்துள்ளனர் என்பது மட்டும் மறுக்க முடியாத ஒன்று. டாக்டர்.லெய்தனர் ஐரோப்பிய சமூகத்தினருக்குள் இருந்த இஸ்லாமிய வேறுபாடுகளை களைந்து அங்கொரு Multiculturalismத்தை அமைக்க எண்ணினார் என்கிறது அவரது வாழ்க்கை குறிப்பு.

இவர் கட்டிய பள்ளிவாசலுக்கு உலகின் முக்கிய பிரமுகர்கள் பலர் வருகை தந்துள்ளனர் அவ்வகையில் சவூதி மன்னர் ஃபைசல், எத்தியிப்பிய அரசர் ஹெய்லா செலாசே, பாகிஸ்தான் ஜனாதிபதி முகமது அலி ஜின்னா, ஹைதராபாத் நிஜாம் மிர் உஸ்மான் அலி கான் அவர்களின் பிரதம மந்திரியாக இருந்த யூசுப் அலி கான், அகில இந்திய முஸ்லிம் லீக் உருவாக காரணமாக இருந்தவருள் ஒருவரான ஆகா கான் மற்றும் விக்டோரியா மகாராணியும் அவரது அந்தரங்க ஊழியர் அப்துல் கரீமும் கூட இப்பள்ளிவசலுக்கு வருகை தந்துள்ளனர். 1913ல் லெய்தனருடைய மரணத்திற்கு பிறகு பராமரிப்பின்றி இருந்த பள்ளிவாசலை பாகிஸ்தான் குடியேறிகள் பராபரித்து வருகின்றனர்.

படத்தில் : 1) தற்போது புனரமைகப்பட்ட பள்ளிவாசல்

2) டாக்டர் .லெய்தனர்

3) பஞ்சாபில் இருந்த போது தன்னை பஞ்சாபி போல உருவப்படம் வரைந்துகொண்டபோது

4) நவாப்ராணி ஷாஜஹான் பேகம்

5) ஷாஜஹான் பள்ளிவாசலின் ஆரம்பகட்ட தோற்றம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *