தந்தையுடன் 1,200 கிமீ பயணித்த 15 வயது சிறுமி, மாரடைப்புக்கு தந்தையை பறிகொடுத்த சோகம்!

பீகாரின் ‘சைக்கிள் பெண்’ என்று புகழ் பெற்ற ஜோதி குமாரி, கொரோனா முதல் அலை லாக்டவுன் போது புலம் பெயர் தொழிலாளியான தன் தந்தையை சைக்கிளில் வைத்து 1200 கிமீ பயணம் செய்து ஊர் திரும்பி அப்போது ஆச்சரியப்பட வைத்தார்.

இன்று இரண்டாவது அலை நாட்டை உலுக்கி வரும் நிலையில் ஜோதி குமாரி தன் தந்தையை மாரடைப்பு நோய்க்கு பறிகொடுத்த சோகம் நடந்தேறியுள்ளது.

மோகன் பாஸ்வான் என்ற நபர்தான் ஜோதிகுமாரியின் தந்தை. பீகார் மாநிலத்தின் தார்பங்கா மாவட்டத்தில் தன் சொந்த ஊரில் மாரடைப்பு காரணமாக இறந்தார்.

கடந்த ஆண்டு திட்டமிடப்படா லாக் டவுனினால் ஏகப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடைபயணமாகவும் சைக்கிளிலும் பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணித்தனர், இதில் பலர் இறந்தே போயினர். அப்படி ஹரியானாவின் குருகிராமிலிருந்து தன் மகள் ஜோதி குமாரி சைக்கிளை மிதிக்க பின்னால் அமர்ந்து 1200 கிமீ வரை பயணித்தார் தந்தை மோகன் பாஸ்வான். அப்போது ஜோதி குமாரி பெயர் நாடு முழுதும் பிரபலமானது.

மே 10ம் தேதி தங்கள் சைக்கிள் பயணத்தை தொடங்கிய தந்தையும் மகளும் தங்கள் கிராமத்துக்கு மே 16ம் தேதி திரும்பினர். ஒருநாளைக்கு 30-40 கிமீ சைக்கிளில் இருவரும் பயணித்ததை அப்போது ஜோதி குமாரி தெரிவித்தார், இடை இடையே லாரியில் லிப்ட்டும் கேட்டு வந்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட விபத்தினால் மோகன் பாஸ்வான் இ-ரிக்‌ஷா ஓட்ட முடியாமல் முடங்கிப் போனார். அவர் தங்கியிருந்த அறையின் உரிமையாளரும் வாடகை பாக்கிக்காக நெருக்கடி கொடுக்கத் தொடங்கினார். லாக் டவுன் நீண்டு கொண்டே போக வீட்டுக்காரரின் தொல்லையும் தாங்க முடியாமல் போனது.

மோகன் பாஸ்வானின் மனைவி பீகார் கிராமத்தில் 4 குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள 15 வயது ஜோதி குமாரி தன் தந்தையுடன் ஹரியாணாவில் இருந்து வந்தார், இந்நிலையில் தான் உடல்நலமில்லாத தன் தந்தையை சைக்கிள் கேரியரில் அமர வைத்து 1200 கிமீ பயணித்துள்ளார் இந்த சிறுமி ஜோதி குமாரி.

இந்நிலையில் திங்களன்று மாரடைப்பினால் மோகன் பாஸ்வான் உயிரிழக்க, குடும்பமே தற்போது சோகத்தில் தத்தளித்து வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *