ஊரடங்கில் கல்வி கற்க வந்த 17 மாணவருடன் ஆசிரியை தப்பி ஓட்டம்!

அரியானாவில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தன்னிடம் பாடம் கற்க வந்த 17 வயது மாணவருடன் விவாகரத்தான ஆசிரியை ஒருவர் மாயமானார். அரியானா மாநிலம் பானிபட் அடுத்த தேஸ்ராஜ் காலனியில் வசிக்கும் பெண் ஒருவர், தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். திருமணமாகி விவாகரத்தான இவர், தனது தாய் வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் அதேபகுதியை சேர்ந்த 17 வயது மாணவனின் (11ம் வகுப்பு படிக்கிறார்) தந்தை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் கொடுத்த புகாரில், ‘எனது மகன் வழக்கம் போல் கல்வி கற்பதற்காக கடந்த மே 29ம் தேதி மதியம் 2 மணிக்கு ஆசிரியையின் வீட்டிற்குச் சென்றான்.

ஆனால், அன்றிரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. எனவே, ஆசிரியைதான், எனது மகனை கடத்திச் சென்றிருக்க வேண்டும்’ என்று புகார் அளித்திருந்தார். அதேபோல், ஆசிரியையின் குடும்பத்தினரும், தங்களது பெண்ணை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தனர். இருவரும் எங்கு சென்றனர் என்பதும், இருவரது மொபைல் போன்களும் அணைத்து வைக்கப்பட்டும் உள்ளன. இவ்விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘கடந்த இரண்டு ஆண்டுகளாக, மைனர் மாணவருக்கு ஆசிரியை தனது வீட்டில் பாடம் சொல்லிக் கொடுத்து வந்துள்ளார்.

தற்போது ஊரடங்கு என்பதால், தினமும் நான்கு மணிநேர படிப்பதற்காக ஆசிரியையின் வீட்டிற்கு மாணவன் சென்று வந்துள்ளான். இந்த நிலையில் இருவரும் மே 29ம் தேதி மாயமாகினர். இதில், சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இருவரும் அவரவர் வீட்டிலிருந்து எந்த பொருட்களையும் எடுத்து செல்லவில்லை. ஆசிரியை தனது கையில் ஒரு மோதிரம் மட்டும் அணிந்திருந்தார். இருவரையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்’ என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *