உழைப்பதுதான் இவ்வுலகை விதைப்பது!

– முன்சி பஸ்றி –

உடலுக்கு இதயம் போல் உலகுக்கு உழைப்பாளர்கள் வேண்டும். உழைப்பாளர்கள் ஒவ்வொருவரும் இவ்வுலகை விதைக்கும் விதையாளர்களே. வருடந்தோறும் உழைக்கும்  உழைப்பவர்களுக்கு உலகம் வழங்கிய அந்த ஒருநாள் – ‘மே 1’ உழைப்பாளர் தினம். கண்ணியமிக்க உழைப்பாளர்களுக்கான நாள்.

இந்த நாள் எவ்வாறு உருவாகியது என்ற வரலாற்றை நோக்கினால் 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 தொடக்கம் 18 மணித்தியாலங்கள் வரை கட்டாய வேலை செய்ய வேண்டும் என்று  நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கு எதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் தொடங்கியது.

அந்தவகையில் இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் அதில் முக்கிய கோரிக்கையாக வேலை நேரத்தை குறைப்பதாகும்.   இதேபோல் 1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் தினமும் 15 மணி நேரம் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதை ஏற்காத தொழிலாளர்கள் “ஜனநாயகம் அல்லது மரணம்” என்ற கோஷத்தை முன்வைத்து தனது எதிர்ப்பைப் பலமாக முன்வைத்தனர். இதன்படி ஆஸ்திரேலியா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் வேலை நேரத்தைக் குறைக்க வேண்டும் எனப் போராட்டங்கள் வலுவடைந்தன.

இவ்வாறு 1856ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டடத் தொழிலாளர்கள்  முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றியும் கண்டனர். இத்தகைய முதல் வெற்றி தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தில் மிகப்பெரிய சான்றாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து பல கட்டங்களில் போராட்டங்களும் வேலைநிறுத்தங்களும் நடைபெற்ற நிலையில் அமெரிக்காவில் உள்ள பல்வேறு தொழிலாளர்கள் அமைப்புகள் இணைந்து அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு என்ற இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்  இயக்கங்களை நடத்தியது.

அத்தோடு 1886ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி அன்று வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கம் மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.

இவை இவ்வாறு இருக்க 1886ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி சிகாகோ நகரில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அமைதியாக இடம்பெற்றிருந்த போராட்டத்தில் காவல்துறையினர் நுழைந்து கண்மூடித்தனமாகத் தாக்கினர். இதில் ஓர் உயிரிழப்பு உட்படப் பலர்  தாக்கப்பட்டனர். அதன் பின்னர் தொழிலாளர்களின் தலைவர்கள் சிலர் தூக்கிலிடப்பட்டனர். இவர்களது இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டனர். அன்றைய தினம்  அமெரிக்கா முழுவதும் கறுப்புத் தினமாக அனுஷ்டிக்கப்பட்டது.

பின்னர் 1889ஆம் ஆண்டு பாரிசில் சோசலிசத் தொழிலாளர்களின் சர்வதேச தொழிலாளர் நாடாளுமன்றம் கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர வேலைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாகக் கண்டித்ததோடு மே முதலாம் திகதி உலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விட்டது.

அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகளில் தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும் சிகாகோ தியாகிகளின் தியாகமும் தான் இப்போது மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினமாக நம்முன் உருவெடுத்து நிற்கின்றது.

இன்றைய உழைப்பாளர்கள் அவர்களுக்குரிய உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றுக்கொள்கின்றார்கள் என்றால் அதற்கு அன்றைய உழைப்பாளர்கள்தான்  காரணம்.

வியர்வைகளால் முத்துக்கள் செய்து முத்துக்களை பூமியில் விதைத்து முழு உலகையும் முத்தாய் ஜொலிக்க வைத்தவர்கள் உழைப்பாளர்கள்.  இவர்களது வியர்வை நாற்றம்தான் இவ்வுலகை மணக்கச் செய்யும். இந்த உலகின் கர்ப்பத்தில்  கருவாய் இருக்கும் எமது எதிர்கால சந்ததிகளுக்காக இந்த உலகைக் கட்டியெழுப்பும் உழைப்பாளர்கள் இவர்கள்.

உழைப்பாளர்களே!
உதிரத்தை தாய்ப்பாலாக்கும் தாயும்
உதிரத்தை வியர்வையாக்கும்
நீயும் ஒன்றுதான்.
உன்  உழைக்கும் கரங்கள்
ஓய்ந்து விட்டால் இவ்வுலகம்
இருண்டு விட்டது என்றல்ல
இறந்துவிட்டது என்றுதான் அர்த்தம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *