வயதானால் குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாதா?

கல்வி, வேலைவாய்ப்பு, வசதி-வாய்ப்புகள் என்று பல்வேறு காரணங்களுக்காகத் திருமணத்தை தள்ளிப்போடும் வழக்கம் அதிகரித்துள்ள காலகட்டத்தில், ஒரு குறிப்பிட்ட வயது வரைதான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் ஆழமாக வேரூன்றியிருப்பதை என்னவென்று சொல்வது?
குறிப்பாகச் சொல்வதானால், 40 அல்லது 50களில் குழந்தை பெற்றுக் கொள்வோரைக் கேலியாக அணுகும் மனநிலை இப்போது பெருகியிருக்கிறது.
ஒரு மகன் கார்பரேட் நிறுவனத்தில் பணியாற்ற, இன்னொரு மகன் பள்ளி இறுதியாண்டு பயில, ஐம்பதுகளைத் தாண்டிய ஒரு ஆணும் பெண்ணும் மூன்றாவதாகக் குழந்தை பெற்றுக்கொள்வதில் சந்திக்கும் சங்கடங்களைச் சொன்னது ‘பதாய் ஹோ’ எனும் இந்தி திரைப்படம்.
அக்குழந்தையின் வரவு ஊரார் மத்தியில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை கூனிக் குறுக வைப்பதுதான் படத்தின் மையக்கரு.
சம்பந்தப்பட்ட தம்பதிகளுக்குச் சம்மதம் எனில், எந்த வயதிலும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாதவர்கள், இவ்விஷயத்தைக் கிண்டலாக அணுகுகின்றனர். தலை நரைத்தவுடன் ஆசையும் நரைக்க வேண்டுமென்று எதிர்பார்க்கின்றனர்.
இதனாலேயே, குழந்தைகள் பதின்பருவத்தை எட்டிவிட்டால் பெற்றோர் இருவருக்குமிடையே அரையடி அங்குலமாவது இடைவெளி இருக்க வேண்டுமென்ற கட்டாயம் உருவாகிவிட்டது. இதற்கு முன்னரும்கூட, இப்படியொரு சூழலே நிலவியது.
அப்போதெல்லாம் ஒருபக்கம் மூத்த குழந்தைகள் பள்ளிப்படிப்பை முடிக்கும் தருவாயில் இருக்க, இன்னொரு பக்கம் சிறு குழந்தைகள் தவழ்ந்து கொண்டிருந்தன.
சில வயது இடைவெளியில் ஐந்தாறு குழந்தைகள் ஒரே வீட்டில் இருப்பதோ, சகோதர சகோதரிகளுக்கான வயது இடைவெளி கிட்டத்தட்ட 15 முதல் 25 ஆண்டுகள் வரை இருப்பதோ பெரிய விஷயமில்லை.
இன்று, ஒரு வீட்டில் இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருப்பதே ஆடம்பரமாகி விட்டது. புதிய வகை நோய்களும் மாறிவரும் வாழ்க்கை முறைகளும், குழந்தை பிறப்பே தம்பதிகளின் ஆகப்பெரிய மகிழ்ச்சி என்றாக்கி வைத்திருக்கின்றன.
இப்படியொரு நிலையில், ஒரு குழந்தை வளர்ந்து பதின்பருவத்தை தொடும்போது பெற்றோரின் கட்டில்களுக்கு நடுவே விரிசல் பெரிதாகி விடுகிறது.
காமத்தை மறைவாகப் பேசுவதற்கான உறவு முறைகளையோ, அதனை வாழ்வின் இயல்பாகச் சுட்டிக் காட்டுவதற்கான சந்தர்ப்பங்களையோ அக்குழந்தை பெறுவதில்லை.
இதனால், அந்த குழந்தைக்கு காமக்கிளர்ச்சி துளிரிவிடும் வயதில் பெற்றோர் துறவு பூண்டுவிட வேண்டுமென்ற எண்ணம் தன்னையறியாமல் வேர்விடுகிறது.
இதனை மீறும் நடுத்தர வயதினரே, இது போன்ற குழந்தைகள் மத்தியில் பேசுபொருளாகின்றனர்.
ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் இருக்கும் பெரும்பாலான குடும்பங்களில் இதுதான் நிலை.
வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஒரே கூடத்தில் படுத்துறங்கிய நாட்களில் கூட, குடும்பத் தலைவனும் தலைவியும் காமம் சார்ந்து வறட்சியை எதிர்கொண்டதாகத் தகவல்கள் இல்லை அல்லது அப்படிப்பட்ட எண்ணங்களை வெளிப்படுத்த முடியாத அளவுக்கு கட்டுப்பெட்டித்தனமான சூழல் நிலவியது.
இன்று, எல்லாமே தலைகீழ். இதனால்தான், இத்தனை வயது வரைதான் காமம் கிளைக்க வேண்டுமென்று சமூகம் தன்னையறியாமல் வகுத்திருக்கிற கட்டுப்பாடுகள் மீறப்படுவது தொடர்கதையாகி விட்டது.
சில நேரங்களில் அவை வேடிக்கைச் செய்திகளாகவும், பல நேரங்களில் அருவெருக்கத்தக்க விஷயங்களாகவும் பார்வைக்கு வருகின்றன.
சரி, ஏன் இந்த விஷயத்தை இப்போது பேச வேண்டும்?
நேஹா
வாணி ராணி, நிறம் மாறாத பூக்கள், பாக்கியலட்சுமி, சித்தி-2 உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர் நேஹா.
சமீபத்தில் இவர் ஒரு சமூகவலைதளப் பக்கத்தில் தனக்கு தங்கை பிறந்திருப்பதாகத் தகவல் வெளியிட்டிருந்தார்.
அதற்குச் சில நாட்கள் முன்னதாக, தான் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்வதாக ‘சஸ்பென்ஸ்’ வைத்திருந்தார். விஷயம் தெரிந்தவுடன், சிலர் வாழ்த்து தெரிவித்தனர்.
‘உங்களது திருமணம் குறித்த தகவலாக இருக்குமென்று எதிர்பார்த்தோம்’ என்று ஒரு சாரார் பதிவிட, இன்னும் சிலரோ அவரது தாய் இன்னொரு குழந்தை பெற்றதைப் பற்றி கிண்டலாகக் கருத்துகளைப் பகிர்ந்தனர்.
இப்படிப்பட்ட பின்னூட்டங்கள் வருமென்று தான் எதிர்பார்த்திருந்ததாகவும், அதுபற்றிக் கவலைப்படப் போவதில்லை எனவும் பதில் தந்தார் நேஹா.
கிட்டத்தட்ட 50-களைத் தொடும் ஒரு பெண் குழந்தை பெற்றுக் கொள்வதைக் கேலியுடன் அணுகும் போக்கு முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டிய ஒன்று.
ஐம்பதாண்டுகளுக்கு முன்பு வரை, ஐம்பது வயதில் ஒரு ஆணோ, பெண்ணோ குழந்தை பெற்றுக்கொள்வது இயல்பாகக் கருதப்பட்டது.
இப்படிப்பட்ட குடும்பங்களில் மூத்த சகோதர்களும், சகோதரிகளும் அக்குழந்தைக்கு தாய் தந்தை போன்றிருப்பார்கள். அக்குழந்தை வளர்ந்து நல்ல நிலைமைக்கு வரும் வரை, அதன் வளர்ச்சியில் ஆர்வம் காட்டுவார்கள்.
அந்த காலகட்டத்தில், வாழ்க்கை முறையும் உணவுகளும் அவ்வளவு ஆரோக்கியமானதாக இருந்தன. பெண்கள் 14 அல்லது 15 வயதில் பூப்பெய்துவதும், 55 வயதுக்கு மேல் மாதவிலக்கு நிற்பதும் வழக்கமாக இருந்தது. விதிவிலக்குகள் மிக அரிது. இன்று, இதற்கு மாறான நிலைமை உள்ளது.
இன்றோ, குழந்தைகள் பள்ளிக்குச் செல்லத் தொடங்கிவிட்டாலே அடுத்த குழந்தை வேண்டாம் என்ற எண்ணம் பெற்றோர்களிடம் அதிகரித்துள்ளது. வெறுமனே குழந்தை பிறப்பு சார்ந்து மட்டுமல்ல, சாதாரணமாகவே காமம் தவிர்க்கப்படும் அபாயமும் இதன் பின்னிருக்கிறது.
அதேபோல, மிக இளம்வயதில் திருமணம் செய்துகொண்டவர்கள் கூட நாற்பதுகளில் மீண்டும் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவது வாடிக்கையாகிவிட்டது.
ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் வெறுமையான மனநிலையை வெற்றிகொள்ள, இதுவும் ஒரு வழி என்றே பலரும் நினைக்கின்றனர்.
கி.ராஜநாராயணன் எழுதிய ‘நாட்டுப்புறப் பாலியல் கதைகள்’ தொகுப்பில், மரணத்தருவாயில் கிடக்கும் ஒரு பெரியவரின் கதை இடம் பெற்றிருக்கும்.
முன்னாட்களில் அப்பெரியவரின் காமக் கிழத்தியாக இருந்த பெண்ணொருத்தி தனியே அவரைச் சந்திப்பதாகவும், அதன்பின் அவர் மரணிப்பதாகவும் கதை முடியும்.
இது உண்மையா புனைவா என்பதைவிட, மரணத்தருவாயிலும் பாலியல் சார்ந்த விருப்பங்கள் ஒருவரது மனதில் உழன்று கொண்டிருக்கும் என்ற கருத்து மேலெழுவதையே நாம் காண வேண்டியிருக்கிறது.
‘நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சியில் நித்திலன் இயக்கிய ‘புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்’ எனும் குறும்படத்தில், 70களைத் தாண்டிய கணவர் மரணிக்க 60களை தாண்டிய அவரது மனைவி அக்கருவைச் சுமப்பதாக கதை நீளும்.
இத்தகவலைக் கேட்டதும், ‘பேத்திக்கும் பாட்டிக்கும் ஒரே நேரத்தில் பிரசவமா’ என்று அப்பெண்ணை நிர்க்கதியாக விட்டுவிடுவார் அவரது மகன்.
‘தழுவாத கைகள்’ உட்படப் பல திரைப்படங்கள் முதிர்வயதில் நிகழும் காதலைப் பேசியிருக்கின்றன. என்ன பேசினாலும், மீண்டும் முதலில் இருந்து தொடங்குவது சிலரது வாடிக்கை.
காமத்துக்கு திரையிட முனைவதோ, கிச்சுகிச்சு மூட்டும் வகையில் அதனைக் கிண்டலடிப்பதோ தவறல்ல; அதை அழுத்திப் புதைக்க முயன்றால் மிகுந்த விசையுடன் பீறிட்டுப் பாயும்.
தெரிந்தோ தெரியாமலோ அத்தவறைச் செய்ய முயல்வது, தலைக்கு மேலே நேராக அண்ணாந்து பார்த்து எச்சில் துப்புவது போலாகும்.