வேலை நாட்கள் குறைத்தால் தகுந்த பதிலடி செந்தில் எச்சரிக்கை!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேலை நாட்கள் குறைக்கப்பட மாட்டாதெனத் தெரிவித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான், அதையும் மீறி வேலை நாட்களைக் குறைக்கும் நடவடிக்கையில் பெருந்தோட்ட நிறுவனங்கள் ஈடுபடுமாக இருந்தால், அதற்கு பதிலடி கொடுக்க இதொகா தயாராக இருக்கிறது என்றும் அந்தப் பதிலடி, ஆயிரம் ரூபாய் நாள் சம்பளத்தை வழங்குவதையும் விட மோசமான பாதிப்பைக் கம்பனிகளுக்கு ஏற்படுத்திவிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனில் இன்று (09) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த செந்தில் தொண்டமான், “பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் நாள் சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்ற, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் விருப்பம், நேற்று (08) நிறைவேறியுள்ளது.

இந்த வெற்றிக்கு மத்தியில், ஆயிரம் ரூபாய் நாள் சம்பளத்துடன், 13 நாள்கள் மாத்திரமே பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதான பெரும் புரளியொன்று எழுப்பப்பட்டுள்ளது. இதனால், இவ்விடயம் தொடர்பில், பலருக்கும் பலவாறான கேள்விகள் உள்ளன என்று குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானும் தானும், ராமேஸ்வரன் எம்.பியும் கலந்துரையாடியதாகத் தெரிவித்த அவர், இந்தப் 13 நாட்கள் வேலை விடயம் தொடர்பில், பெருந்தோட்டக் கம்பனிகள் இதுவரையில் எங்கும் குறிப்பிடவில்லை என்றும் சில தொழிற்சங்கங்களே, பெருந்தோட்டக் கம்பனிகளின் ஊடகப் பேச்சாளர்களாக மாறி, இவ்வாறான வதந்திகளைப் பரப்பி வருகின்றன என்றும் தெரிவித்தார்.

இதற்கு முன்னரும், கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்காத சில தொழிற்சங்கங்கள், கூட்டு ஒப்பந்தம் என்பது ஒரு மரண சாசனம் என்றும் அவ்வாறான கூட்டு ஒப்பந்தத்திலிருந்து தொழிற்சங்கங்கள் வெளியேற வேண்டுமென்றும் வலியுறுத்தி வந்தன என்று தெரிவித்த செந்தில் தொண்டமான், இன்று அதே தொழிற்சங்கங்கள், கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறக் கூடாதென்று தெரிவிக்கின்றன என்றும் இதன்மூலம், மேற்படி தொழிற்சங்கங்களின் இரட்டை முகம் வெளிப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது, பெருந்தோட்டக் கம்பனிகள் சில, வெளியாட்களைக் கொண்டு, தேயிலைத் தூள்களைப் பொதியிட்டு எடுத்துச்செல்ல நடவடிக்கை எடுத்தன என்றும் இது பற்றி அறிந்துகொண்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தேயிலைத் தூள்களைக் கொண்டுசென்ற லொறிகளைத் தடுத்து நிறுத்தியதால், கம்பனிகளுக்கு பாரிய நட்டம் ஏற்பட்டது. இது, சம்பள நிர்ணயப் பேச்சுவார்த்தையின் போது, அவர்களுக்குப் பெரும் அழுத்தமாகவும் இருந்தது. அத்துடன், சம்பள அதிகரிப்பை கம்பனிகள் ஏற்றுக்கொள்வதற்கு, பாரிய காரணமாகவும் அது அமைந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களை விட, இம்முறை நடப்பட்ட போராட்டத்துக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவளித்ததால், சம்பள நிர்ணயச் சபையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றிக்கு வழிவகுத்தது என்றும் அவர் கூறினர்.

இந்தச் சம்பளத் தீர்மானத்தால், கூட்டு ஒப்பந்தத்தில் இருந்த தொழிலாளர்களுக்கான வரப்பிரசாதங்கள் அனைத்தும் இல்லாமலாக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.

அந்த வகையில், கூட்டு ஒப்பந்தத்தில் வரப்பிரசாதங்கள் இருந்த விடயம் அவர்களுக்கு இப்போது தான் தெரிந்திருக்கிறது என்று தெரிவித்த செந்தில் தொண்டமான், அமரர்களான சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரை, இந்தக் கூட்டு ஒப்பந்தத்தை வைத்து விமர்சித்தவர்கள் அனைவரும், இன்று அந்த ஒப்பந்தத்தில் வரப்பிரசாதங்கள் இருக்கின்றன என்பதை ஏற்றுக்கொண்டு பேசுகின்றனர் என்றார்.

அந்த வகையில், இவ்வளவு காலமும் அவர்கள், இதொகா மீது பொய்யான குற்றச்சாட்டுகளைத்தான் முன்வைத்து வந்திருக்கிறார்கள் என்பது வெளிப்படையாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
13 நாள்கள்தான் தொழிலாளர்களுக்குக் கம்பனிகள் வேலை வழங்குமாக இருந்தால், மிகுதி 17 நாள்களுக்கும், வெளித் தோட்டங்களில் இருந்தேனும் தொழிலாளர்களை அழைத்துவந்து அவர்களுக்கு வேலை வழங்க வேண்டும்.

அவ்வாறு வெளித் தோட்டங்களிலிருந்து அழைத்து வந்தால், ஆயிரம் ரூபாய் சம்பளத்தோடு தொழிலாளர்களுக்கான போக்குவரத்து, உணவுக்கான செலவுகளையும் ஏற்று, ஒரு நாளைக்கு ஒரு தொழிலாளிக்கு 1,500 ரூபாய்க்கும் மேற்பட்ட தொகையைச் செலவளிக்க, எந்தக் கம்பனி தயாராக இருக்கும்?
அதையும் மீறி, மேற்படி தொழிற்சங்கங்கள் கூறுவதைப் போன்று கம்பனிகள் நடந்துகொள்ளுமாக இருந்தால், அதை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. அதனால், அந்த 13 நாள்களுக்கு மாத்திரம் குத்தகையைச் செலுத்துமாறும் ஏனைய 17 நாள்கள், தொழிலாளர்களின் பெயர்களில் குத்தகையைச் செலுத்தி, தோட்டங்களை நடத்துவோம் என்றும் மிகுதி 17 நாள்களும், கம்பனிகள் தோட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும், கம்பனிகளுக்கு செந்தில் தொண்டமான் எச்சரிக்கை விடுத்தார்.
எவ்வாறாயினும், இத்தனை நாள்கள் வேலை வழங்க வேண்டுமென்று, கூட்டு ஒப்பந்தத்தில் உள்ளது. அந்த வழமையைக் கம்பனிகள் மாற்ற முடியாது.

இன்றைய நிலைமைக்கேற்ற வேலைக்குத்தான் நாங்கள் இந்தச் சம்பளக் கோரிக்கையை முன்வைத்திருக்கிறோம். கூடுதல் வேலையாக இருந்தால், கூடுதல் சம்பளத்தைக் கோரியிருப்போம் என்றும் அவர் எடுத்துரைத்தார்.
அப்படி அவர்கள் வழமையை மாற்றினால், 16 கிலோகிராம் பறிக்கப்படும் கொழுந்து 6 கிலோகிராமாகவும் 18 கிலோகிராம் பறிக்கப்படும் கொழுந்து 8 கிலோகிராமாக மாறும். இதனால், கம்பனிகளின் உற்பத்தியே பாதிக்கப்படும் என்றும், செந்தில் தொண்டமான் எச்சரித்தார்.

எவ்வாறாயினும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு, போராட்டம் என்பது புதிதல்ல. அதனால், எப்படியேனும், மக்களுக்குக் கொடுக்க வேண்டியதை, இதொகா பெற்றுக்கொடுக்கும் என்றும் குறிப்பிட்ட அவர், தோட்டத் தொழிலாளர்களின் வேலை நாட்கள் தொடர்பில், அமைச்சர்களான நிமல் சிறிபால டீ சில்வா, ரமேஸ் பத்திரன ஆகியோரிடம் பேசியுள்ளதாகவும் எக்காரணம் கொண்டும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேலை நாட்கள் குறைக்கப்பட மாட்டாதென அமைச்சர்கள் உறுதியளித்துள்ளனர் என்றும் கூறினார்.

இவ்வாறானதொரு நிலையில், ஜப்பானிலிருந்து ஆட்களை வரவழைத்து, மிகுதி 17 நாட்களில் கொழுந்து பறிக்க முடியாது என்று சுட்டிக்காட்டிய அவர், வேறு தோட்டங்களிலிருந்து ஆட்களை வரவழைத்து கொழுந்து பறிக்க, அந்தந்தத் தோட்டங்கள் இடமளிக்கப் போவதில்லை என்றும் வேறு துறையினரை அழைத்துவந்து பறிக்கச் செய்ய முடியாது என்றும் எடுத்துரைத்ததோடு, அந்தந்தத் துறைகளில் அனுபவம் வாய்ந்தவர்களைக் கொண்டுதான் அந்தந்த வேலைகளைச் செய்யவேண்டும் என்றார்.

சம்பள அதிகரிப்பைப் பெற்றுக்கொடுத்தார்கள் என்ற நல்ல பெயர் அரசாங்கத்துக்குக் கிடைக்கக் கூடாது என்ற ஒரே நோக்கத்தில் தான், எதிர்க் கட்சிகளில் இருக்கும் தொழிற்சங்கங்கள், இவ்வாறான பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன என்றும் தெரிவித்த செந்தில் தொண்டமான், எவ்வாறாயினும், கூட்டு ஒப்பந்தத்திலிருக்கும் தொழிலாளர் நலன்சார் விடயங்களிலிருந்து, இதொகா விலகப்போவதில்லை என்ற உறுதியான தீர்மானத்தில் இருப்பதாகவும் அதையும் மீறி கம்பனிகள் செயற்படுமாக இருந்தால், அதை எதிர்கொள்ள இதொகா தயாராக இருக்கின்றது என்றும் அந்தப் பதிலடி, ஆயிரம் ரூபாய் நாள் சம்பளத்தை வழங்குவதையும் விட மோசமான பாதிப்பைக் கம்பனிகளுக்கு ஏற்படுத்திவிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *