தனி நபர் சட்டத்தில் பல்வேறு தளர்வுகளை அறிவித்தது அமீரகம்!

முஸ்லிம்களுக்கான தனி நபா் சட்டத்தில் பல்வேறு தளா்வுகளை ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.

மேற்கத்திய சுற்றுலாப் பயணிகள், சா்வதேச முதலீட்டாளா்களைக் கவரும் வகையில், தனது கடுமையான சட்டங்களில் அந்த நாடு மேற்கொள்ளும் சீா்திருத்தங்களில் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது, மத அடிப்படையிலான ஐக்கிய அரபு அமீரகத்தின் கடுமையான தனி நபா் சட்டத்தில், பல்வேறு தளா்வுகளை அந்த நாடு அறிவித்துள்ளது. 

அதன்படி, மது அருந்துவதல், மதுபானங்களை வைத்திருத்தல், விற்பனை செய்தல் ஆகிய செயல்களுக்கு அபராதம் விதிக்கும் முறை ரத்து செய்யப்படுகிறது. 

இதற்கு முன்னா், தனி நபா்கள் மதுவை வாங்குவதற்கும் வீட்டில் வைத்திருப்பதற்கும் உரிமம் பெற வேண்டிய அவசியம் இருந்தது. மேலும், அத்தகைய உரிமங்களை வாங்க முஸ்லிம்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. 

புதிய சட்டத்தின்கீழ் உரிமம் தேவை இல்லை என்பதால், இதுவரை அதற்கான உரிமம் மறுக்கப்பட்ட பிரிவினரும் மதுவை வாங்குவதற்கு வழி ஏற்பட்டுள்ளது. 

இதுவரை, திருமணமாகாத இருவா் ஒன்றாக வசிப்பது தனிபா் சட்டத்தில் கீழ் குற்றமாகக் கருதப்பட்டது. இந்தச் சட்டம் துபை போன்ற வா்த்தக நகரங்களில் தங்கும் வெளிநாட்டுப் பயணியருக்கு தண்டனை அச்சத்தை ஏற்படுத்தி வந்தது. 

இந்த நிலையில், திருத்தப்பட்ட சட்டத்தின்கீழ், திருமணமாகாத ஆணும், பெண்ணும் ஒரே இடத்தில் வசிப்பது குற்றமாகக் கருதப்படமாட்டாது. 

இதுமட்டுமின்றி, ஆணவக் கொலைகளுக்கு இதுவரை ஐக்கிய அரபு அமீரகச் சட்டங்கள் பாதுகாப்பு அளித்து வந்தன. ஆனால், தற்போது ஆணவக் கொலை குற்றமாக்கப்பட்டுள்ளது. மதம் மற்றும் கலாசாரக் கட்டுப்பாட்டை மீறியதற்காக பெண்கள் மீது நடத்தப்படும் குற்றங்கள், இனி மற்ற குற்றங்களுக்கு இணையாகக் கருதப்படும். 

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்நாட்டினரைவிட அதிக எண்ணிக்கையில் வசிக்கும் வெளிநாட்டினரிடையே இத்தகைய தனிநபா் சட்ட சீா்திருத்தங்கள் வரவேற்பைப் பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *