உலகமெங்கும் 15 கோடி மக்கள் கொடிய வறுமையில் தள்ளப்படுவார்கள்!

கொரோனாவால் அடுத்த ஆண்டுக்குள் உலகமெங்கும் 15 கோடி பேர் கொடிய வறுமையில் தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கி அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் கோரப்பிடியில் உலகம் சிக்கி தவித்து வருகிறது. 3 கோடியே 63 லட்சத்து   91 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  இந்த தொற்று பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.  இது மட்டுமின்றி தொடர் ஊரடங்கு, பொதுமுடக்கத்தால் தொழில், வர்த்தகம் முடங்கின. பல கோடி பேர் வேலை இழப்புக்கு ஆளாகி உள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் அடுத்த ஆண்டுக்குள் உலகமெங்கும் 8.8 கோடி பேர் முதல் 15 கோடி பேர் வரை கொடிய வறுமைக்கு ஆளாவார்கள் என்று உலக வங்கி கூறுகிறது. பொருளாதார பாதிப்பின் எதிரொலிதான் இது.

கொரோனா மட்டும் தாக்காமல் இருந்திருந்தால் நடப்பு ஆண்டில் வறுமை விகிதம் 7.9 சதவீதமாக குறைந்திருக்கும் என்றும் உலக வங்கி சொல்கிறது.
இதையொட்டி உலக வங்கி தலைவர் டேவிட் மாஸ்பாபாஸ் கூறுகையில், “கொரோனா வைரஸ் பெருந்தொற்றும், உலகளாவிய பொருளாதார மந்த நிலையும் உலக மக்கள் தொகையில் 1.4 சதவீதத்தினரை கொடிய வறுமையில் தள்ளிவிடும்” என குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறும்போது, “இந்த கடுமையான பின்னடைவை மாற்றி அமைத்து, வளர்ச்சியில் முன்னேற்றம், வறுமை குறைப்பு போன்றவற்றை அடைவதற்கு கொரோனாவுக்கு பின்னர் உலக நாடுகள் மாறுபட்ட பொருளாதாரத்துக்கு தயாராக வேண்டும். மூலதனம், தொழிலாளர் திறன் மற்றும் புதுமைகளை புதிய தொழில்கள் மற்றும் துறைகளில் செல்ல அனுமதிக்க வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டார்.
ஏற்கனவே அதிக வறுமை விகிதங்களை கொண்ட நாடுகளில்தான் புதிய ஏழைகள் இருப்பார்கள் என்றும், நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் கணிசமான மக்கள் தீவிர வறுமைக்கோட்டுக்கு கீழே செல்வதை காண முடியும் என்றும் உலக வங்கி கூறுகிறது.

இதையொட்டிய அறிக்கையில் இந்தியாவுக்கான சமீபத்திய தரவுகள் இல்லாததால், அது உலகளாவிய வறுமையை கண்காணிக்கும் திறனை கடுமையாக தடுக்கிறது எனவும் கூறப்பட்டுள்ளது.

தீவிர ஏழைகளை பெருமளவு கொண்ட பொருளாதார நாடுகளில் ஒன்றான இந்தியா குறித்த சமீபத்திய தகவல்கள் இல்லாமல் இருப்பது, உலகளாவிய வறுமையின் தற்போதைய மதிப்பீடுகளை சுற்றி கணிசமான நிச்சயமற்ற தன்மையை உருவாக்குகிறது என்று உலக வங்கி குறிப்பிடுகிறது.

பயனுள்ள அணுகுமுறைகளாலும் மற்றும் சமூக உறுப்பினர்களின் திறன்களாலும், அர்ப்பணிப்பாலும், தாராவியில் கொரோனா வைரசின் அதிவேக பரவலை மாநகராட்சி அதிகாரிகளால் தடுக்க முடிந்தது எனவும் உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *