கொழும்பில் மறைந்திருக்கும் கொரோனா நோயாளிகள்?

சர்ச்சைக்குரிய மினுவாங்கொட தொழிற்சாலையில் பணியாற்றிய பலர் கொழும்பில் ஒளிந்திருப்பதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியம் இருந்தும் தற்போது விலாசத்தை மாற்றி மறைந்திருக்கும் பிரென்டிக்ஸ் தொழிற்சாலை ஊழியர்கள் உடனடியாக தன்னார்வாக முன்வந்து தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு இராணுவ தளபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

மேல் மாகாணத்திற்கு வெளியே சென்று இருக்கும் ஊழியர்கள் 495 பேர் வரையில் உரிய முகவரியில் இல்லை எனவும், கொழும்பின் ஏனைய பிரதேசங்களில் அவர்கள் மறைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா கொத்தணி அடையாளம் காணப்பட்ட பிரென்டிக்ஸ் தொழிற்சாலையில் பணியாற்றிய அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையத்தில் அல்லது வைத்தியசாலையில் மாத்திரமே இருக்க வேண்டுமே தவிர வீட்டில் இருக்க கூடாதென இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இது தேசிய பொறுப்பாக கருதி பாதுகாப்பு பிரிவு மற்றும் சுகாதார பிரிவிற்கு அறிவித்து உடனடியாக தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு அவர் கூறியுள்ளார்.

தனிமைப்படுத்தல் செயற்பாட்டை புறக்கணிக்கும் நபர்களை தேடி புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் பிரென்டிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய தனது காதலியை சந்திக்க சென்ற வேறு தொழிற்சாலையின் ஊழியர் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளமையினால் அந்த தொழிற்சாலை ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அண்மையில் பிரென்டிக்ஸ் தொழிற்சாலைக்கு சென்றவர்கள் அல்லது அங்கு பணியாற்றியவர்கள் உடனடியாக சுகாதார பிரிவிற்கு தெரிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறித்த தொழிற்சாலையில் பணியாற்றிய ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொழும்பில் மறைந்திருக்கும் 495 பேரில் பலருக்கும் கொரோனா தொற்று இருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *