தென்கிழக்கு ஆசியாவில் இந்தியாவில் அதிகளவு தற்கொலைகள் !

இந்தியாவின் தலைச்சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்லி வருகிறார். அப்படியென்றால் கடந்த 2 ஆண்டுகளாக தற்கொலையில் இந்திய அளவில் தொடர்ந்து தமிழகம் இரண்டாவது இடத்தில் இருப்பது ஏன்? குடும்பம், குடும்பமாக தற்கொலை செய்து கொள்வதில் தமிழகம் முதலிடத்திற்கு முன்னேறியிருப்பது ஏன் என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. தென்கிழக்கு ஆசியாவில் இந்தியாவில் தான் அதிகளவு தற்கொலைகள் நிகழ்வதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவிக்கிறது. உலகம் முழுவதும் ஆண்டுக்கு சுமார் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதாவது, ஒவ்வொரு 40 நிமிடங்களுக்கு ஒரு தற்கொலை நடக்கிறது.

தற்கொலையில் தான் சாதனை

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு லட்சம் பேர் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர். கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 1,39,123 தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. இது, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 3.4% அதிகம். 2018 மற்றும் 2019ம் ஆண்டுக்கு இடையேயான தற்கொலை விகிதமும் 0.2% உயர்ந்துள்ளது. 2020ம் ஆண்டு ஆண்டு செப்டம்பர் மாதம் தேசிய குற்றப்பிரிவு ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள பட்டியலில் இந்திய அளவிலான தற்கொலையில் தமிழகம் மீண்டும் 2வது இடத்தைப் பிடித்துள்ளது. அந்த புள்ளிவிபரப்படி இந்தியாவில், 2019ம் ஆண்டு தினமும் சராசரியாக 381 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த ஒரு ஆண்டில் மட்டும் 1,39,123 பேர் தற்கொலை செய்து கொண்டனர். 2017, 2018ம் ஆண்டுகளில் நடந்த தற்கொலைகளை விட 2019ம் ஆண்டில் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக அந்த புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. 2018ம் ஆண்டு 1,34,516 பேரும், 2017ம் ஆண்டு 1,29,887 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலையில் தொடர்ந்து மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அங்கு 18,916 பேரும், தமிழகத்தில் 13,493 பேரும், மேற்கு வங்கத்தில் 12,665 பேரும், மத்திய பிரதேசத்தில் 12,457 பேரும், கர்நாடகாவில் 11,288 பேரும் 2019ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்தியாவில் உள்ள இந்த 5 மாநிலங்களில் மட்டும் தற்கொலை விகிதம் 49.5 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற 24 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன்பிரதேசங்களில் தற்கொலை விகிதம் 50.5 சதவீதம்.

சென்னை முதலிடம்

இதில் அதிர்ச்சிகரமான செய்தி, தமிழக தலைநகரமான சென்னை நகரில் தான் இந்தியாவிலேயே தற்கொலை அதிகம் நடந்ததாக தேசிய குற்ற ஆவண பதிவேடு தெரிவிக்கிறது. இந்தியாவில் உள்ள 53 நகரங்களில் சென்னை தான் தற்கொலையின் தலைநகரமாக திகழ்கிறது. அதாவது நாட்டில் நடந்த மொத்த தற்கொலைகளில் சென்னையில் மட்டும் 11 சதவீதம் பதிவாகியிருக்கிறது. சென்னையில் கடந்த 2018ம் ஆண்டு 2,102 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2019ல் அந்த எண்ணிக்கை 2,461 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்ததாக, டெல்லியில் 2,423, பெங்களூருவில் 1,081, மும்பையில் 1,229 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் அதிகமாக ஆண்கள் என்பதோடு 68.4 சதவீதம் பேர் திருமணமானவர்கள். தமிழகத்தில் மதுரையில் 345, கோவையில் 338, திருச்சியில் 188 என தற்கொலைகள் நிகழ்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

காரணம் என்ன?

கடந்த 5 ஆண்டுகளில் வேலையின்மை விகிதம் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக மத்திய தொழிலாளர் அமைச்சகம் கூறியுள்ளது. மே 31ம் தேதி மத்திய அரசின் தரவுகளின் படி வேலையின்மை விகிதம் 2017-18-ல் 6.1% ஆக உள்ளது, இது கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமான வேலைவாய்ப்பின்மை விகிதமாகும்.  இந்தியா முழுவதும் வேலையில்லாமல் தவிக்கும் ஆண்களின் விகிதம் 6.2% ஆகவும் பெண்களின் விகிதம் 5.7% ஆகவும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பசி, பட்டினி அதிகரித்துள்ளது. தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் 49.8% அதிகரித்து தேசிய சராசரியான 23.5 சதவீதத்தை விட இரட்டிப்பாக்கியுள்ளதாக திமுக தலைவரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் குறிப்பிட்ட விஷயம் மிக முக்கியமானது. 2 ஆண்டுகளுக்கு முன் தமிழக சட்டமன்றத்தில் துப்புரவு பணிக்கு ஆட்கள் தேர்வு செய்ய வெளியிட்ட அறிவிப்புக்கு, முதுநிலை பட்டிப்புகள் படித்துள்ள எம்பிஏ, எம்டெக், எம்எஸ்சி மற்றும் பிஇ, பிடெக் உள்ளிட்ட ஏராளமான பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தது  வேலையில்லா திண்டாட்டத்தை வெளிச்சம் போட்டு காட்டியது.

வேலையின்மையால் தற்கொலை

தற்கொலைகளுக்கு குடும்ப பிரச்னை காரணம் என்று அதிகம் கூறப்பட்டாலும் வேலையின்மையால் அதிகம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். குறிப்பாக, 2018ம் ஆண்டை விட 2019ம் ஆண்டில் வேலையின்மை பிரச்னையால் 2,851 பேர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் 18 வயதிலிருந்து 30 வயதுக்குட்பட்டவர்கள். 2018 ஆம் ஆண்டில், வேலையின்மை காரணமாக 2,741 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இன்னும் அதிகரிக்கும்

கடந்த 2 ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, வேலையின்மையின் காரணமாக தற்கொலை பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த தமிழகம், சமீபத்திய கொரோனா தற்கொலைகளால் முதலிடத்தை நோக்கி வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. கடந்த 5 மாதங்களாக தமிழகத்தில் தற்கொலை செய்தி இல்லாத  நாளே இல்லை. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியாற்றிய  இளம் மருத்துவர் தற்கொலை, ஆரணி அருகே வறுமையில் வாடிய நெசவு தொழிலாளி  தற்கொலை, மதுரை கொரோனா மையத்தின் மாடியில் இருந்து குதித்து முதியவர்  தற்கொலை, சேலம் கொரோனா தனிமைப்படுத்தும் முகாமில் பெண் தற்கொலை, சென்னை  மதுராவயல் கொரோனா முகாமில் சிகிச்சை பெற்று வந்த பெண் தற்கொலை, தேனி கொரோனா  முகாமில் இளைஞர் தற்கொலை, சென்னையில் கொரோனாவால் தனிமையில் இருந்த  வருமானவரித்துறை அதிகாரி தற்கொலை, விருதுநகரில் கொரோனாவால் கணவர் இறந்த  துக்கத்தில் மனைவி தற்கொலை, மதுரை வில்லாபுரத்தில் கொரோனாவால் தந்தை இறந்த  சோகத்தில் இளம்பெண் தற்கொலை, நெல்லை அல்வா கடை உரிமையாளர் தற்கொ லை என இந்த  பட்டியல் நீள்கிறது. கொரோனா தற்கொலையை தடுத்து நிறுத்த வேண்டும் என வழக்கு  போடும் அளவிற்கு தமிழகத்தில் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்துள்ளதை உணர  முடியும்.

வறுமையால் தற்கொலை

புயலுக்கு  பின் தான் அது ஏற்படுத்திய சேதத்தை அறிந்து கொள்ள முடியும். அது போலத்தான்  கொரோனா ஏற்படுத்திய வேலையிழப்பும், பாதிப்பும் தமிழகத்தில் அதிக  உயிரிழப்புகளுக்கு காரணமாகி விட்டது. கும்பகோணத்தில் ஊரடங்கால் வருமானத்தை  இழந்ததால் மனைவியை கொன்று கணவன் தற்கொலை, திண்டுக்கல் மாவட்டம்,  சின்னாளபட்டியை சேர்ந்த சிகை திருத்தும் தொழிலாளி வேலையின்மையால் மனைவியோடு  தற்கொலை, வியாபாரம் பாதிக்கப்பட்டதால் ஈரோட்டில் பெண் தற்கொலை,  செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் அருகே வறுமையால் குழந்தைகளுக்கு விஷம்  கொடுத்து தொழிலாளி தற்கொலை, கும்பகோணத்தில் ஆட்டோ ஓட்டுநர் கடன் சுமையால்  தற்கொலை, நாமக்கல்லில் தறித்தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை என்று கொரோனா  பலி வாங்கியவரின் எண்ணிக்கை வெகுநீளம்.

வேலையிழப்பும் அதிகரிப்பு

கொரோனா காலத்தில் மட்டும் இந்தியாவில் 41 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை இழந்திருப்பதாக ஐ.நாவின் சர்வதேச தொழிலாளர் நிறுவனமும், ஆசிய வளர்ச்சி வங்கியும். இணைந்து வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. இந்த வேலையிழப்பை சந்தித்துள்ள குடும்பங்களில் 83.4 சதவீதத்தினர் தினக்கூலி பணியாளர்கள், 13.3 சதவீதத்தினர் தனியார் நிறுவனங்களில் மாதச்சம்பளம் பெறும் பணியாளர்கள் என்றும் தெரியவந்துள்ளது. கோவை மாவட்டத்தில் 38 சதவீத குடும்பங்களில் வேலையிழப்பு ஏறப்பட்டுள்ளது. ஆனால், மிக அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 67 சதவீத குடும்பங்களில் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம், மத்தியில் ஊரடங்கு காரணமாக ஏப்ரல் – ஜூலை மாதங்கள் வரை சம்பள ஊழியர்கள் 1.89 கோடி பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டதே என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 5 மாதங்களாக கொரோனா ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடி இன்னும் பல மாதங்களுக்கு நீடிப்பதுடன், அதன் மூலம் இன்னும் ஏராளமானோர் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதனால் ஏற்படும் தற்கொலைகள் அடுத்த ஆண்டு தமிழகத்தை இந்தியாவின் முதல் இடத்திற்கு கொண்டு சென்று விடும் என்பதே பொருளாதார ஆய்வாளர்களின் எச்சரிக்கையாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *