ஜீவனுக்கு அமைச்சுப் பதவியா? மொட்டுக்குள் மோதல்!

இ.தொ.காவின் இளைஞர் அணி பொதுச் செயலாளர், ஜீவன் தொண்டமானுக்கு அமைச்சுப் பதவி பெற்றுக்கொடுப்பதாக வெளியான செய்தியினால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தரப்பினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘ஜீவன் தொண்டானுக்கு அமைச்சுப் பதவி பெற்றுக்கொடுப்பேன்’ என்று இ.தொ.கா வேட்பாளர் ராமேஸ்வரன் மருதபாண்டி அண்மையில் பொதுவெளியல் அறிவித்திருந்தார். இந்த செய்தி சிங்கள மொழியில் அதிகமாக பகிரப்பட்டுள்ளதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி ராஜபக்ச தரப்பினரின் காதுகளுக்குச் சென்றுள்ளதால், இ.தொ.கா மீது ராஜபக்ச தரப்பினர் அதிருப்தியடைந்துள்ளதாக தெரியவருகிறது.

குறிப்பாக ஜீவனுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படும் என்று மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்திருந்த நிலையில், இந்த செய்தியை நுவரெலியா மாவட்ட மொட்டுக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் சி,பீ. ரத்னாயக்க, பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அத்துடன், எஸ்.பி.திஸாநாயக்கவும் இதனை கட்சியின் உயர்மட்டத்தின் காதுகளில் ஓதியுள்ளார்.

இதுவரை பிரதேச சபை உறுப்பினராகக் கூட பதவி வகிக்காத ஜீவன் தொண்டமானுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படும் என்ற பேச்சுக்கள் முட்டாள் தனமானது என்றும் இதனால் நுவரெலியா மாவட்டத்தில் மொட்டுக்கான வாக்குகள் கூட சரிவடையும் என்றும் முறையிடப்பட்டுள்ளது.

ஜீவன் தொண்டமான் வேட்பு மனுவில் கையெழுத்திடுவதற்கு முன்னரே ஏன் இவ்வாறான அறிவிப்புக்களை வெளியிட்டு, சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்வதாக அந்தக் கட்சியின் உயர் மட்டங்களில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

அத்துடன், அமைச்சரவை அந்துஸ்துள்ள அமைச்சுப் பதவிக்கு சீ.பீ. மற்றும் எஸ்.பீ ஆகியோர் பனிப்போர் நடத்தி வரும் நிலையில் இந்த விவகாரம் வெடித்துள்ளது.

எவ்வாறாயினும், சீ.பீ. மற்றும் எஸ்.பீ. ஆகியோர் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் அவற்றைப் பார்த்துக் கொள்ளலாம் என்ற போதிலும், இ.தொ.காவிற்கு அமைச்சுப் பதவி வழங்குவதாக இருந்தால் அனுபவமே இல்லாத ஜீவன் தொண்டமானுக்கு வழங்குவதற்கு எவ்விதத்திலும் உடன்பட முடியாது என்று கட்சி சிரேஸ்ட உறுப்பினர்கள் தரப்பில் முறையிடப்பட்டுள்ளது.

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகளுக்கு அனுமதி எடுப்பதில் ஜீவன் தொண்டமான், சுகாதார அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்த செய்தி கேட்டு, ஜனாதிபதி அதிருப்தியுள்ள நிலையில், தற்போது அமைச்சுப் பதவி குறித்த செய்தி மேலும் கோபத்தை அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.

சுகாதார அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததன் காரணமாகவே சனி, ஞாயிறு தினங்களில் ஊரடங்குச் சட்டம் பிறப்பக்கப்பட்டதாக ஜனாதிபதித் தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.

அத்துடன், இரங்கல் உரையாற்றுவதற்கு நுவரெலியா மாவட்டத்தின் மொட்டுச் சின்னத்தைச் சேர்ந்த சீ.பீ. மற்றும் எஸ்.பீ. ஆகியோருக்கு வாய்ப்பு வழங்காது, நவீன் திஸாநாயக்கவிற்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டதையும் கட்சி அதிருப்தியோடு அவதானித்துள்ளது.

இவை அனைத்தும் தற்போதுஇலங்கைத் தொழிலாளர் காங்கிரசிற்கு ராஜபக்ச தரப்பில் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தேர்தலுக்கு பின்னரே அமைச்சுப் பதவிகள் குறித்து பேசப்படும் என்று கட்சி உயர்மட்டம் அறிவித்திருந்த நிலையில், வேட்புமனுவில் கையெழுத்திட முன்னரே இதுகுறித்து பொதுவெளியில் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதால் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசிற்கான அமைச்சுப் பதவிகள் அனைத்தும் கேள்விக்குறியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *