ஆசிய நாடுகளின் பொருளாதாரம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமாகப் பாதிக்கப்படும் !

உலக நாடுகள் இருவகையான யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒன்று கண்களுக்குப் புலப்படாத நுண்கிருமி கொரோனாவிற்கு எதிரான மருத்துவ யுத்தம். இரண்டாவது பசி, பட்டினி மற்றும் வாழ்வாதாரத்திற்கான பொருளாதார யுத்தம். இந்த இரண்டு வகையான யுத்தத்திலும் வெற்றி பெற்றேயாக வேண்டிய கட்டாய காலகட்டத்தில் அனைத்து நாடுகளும் தள்ளப்பட்டிருக்கின்றன. இந்த இரண்டில் எந்த ஒன்றை இழந்தாலும் அது மாபெரும் இழப்பாகவே இருக்கும். இதுகுறித்து Startup Xperts Business Consulting Pvt. Ltd நிறுவனர் மற்றும் பொருளாதார நிபுணர் ஷியாம் சேகர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்…

‘‘கொரோனாவால் ஆசிய நாடுகளின் பொருளாதாரம், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமாகப் பாதிக்கப்படும் என உலக வங்கி தெரிவித்திருந்தது. கொரோனா வைரசால் இந்தியா உட்பட உலக நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என கணிப்புகள் வெளியாகின. பொருளாதார வளர்ச்சிக் குறியீடான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) இந்தியாவில் நடப்பு நிதியாண்டில் 2 சதவீதமாக இருக்கும் என பிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனமும் ஜிடிபி 1.6 சதவீதமாக குறையும் என கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனமும் மதிப்பீடு செய்துள்ளன. இதுபோல், உலக வங்கியும் பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டது.
இதில், கொரோனா பாதிப்பால் தெற்காசிய நாடுகளில் உள்ள 8 நாடுகளின் பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) இந்த ஆண்டில் 1.8 சதவீதம் முதல் 2.8 சதவீதத்துக்குள் இருக்கும். கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத மோசமான சரிவாக இது இருக்கும் என தெரிவித்தது.கடந்த 6 மாதம் முன்பு வெளியிட்ட கணிப்பில், ஆசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என தெரிவித்திருந்தது.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 1.5 சதவீதம் முதல் 2.8 சதவீதத்துக்குள் இருக்கும். இந்தியாவில் அமலில் உள்ள ஊரடங்கு காரணமாகப் பல லட்சம் பேர் வேலை இழப்பார்கள். சிறிய மற்றும் பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் பலர், நகரங்களிலிருந்து தங்கள் சொந்த ஊருக்கு இடம்பெயர வேண்டிய நிலை உருவாகும் என உலக வங்கி தெரிவித்ததை நாம் சாதாரணமாகக் கடந்துபோய்விட முடியாது.

அத்தனையும் நம் கண்முன்னே நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.’’ என்றவர் தொழில்துறையின் நிலவரம் பற்றியும் விவரித்தார்.
‘‘தொழில்துறை என்று வரும்போது தமிழ்நாட்டின் முதுகெலும்பாக உள்ளது MSME என்று சொல்லக்கூடிய சிறு, குறு தொழில் நிறுவனங்கள்தான். இவை உற்பத்தி & சேவைகள் (Manufacturing & Services Industry) துறையைச் சார்ந்தவை.தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ஏழு லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பதிவாகியுள்ளன. இந்தியாவிலிருக்கும் சிறு, குறு தொழில்களில் கிட்டத்தட்ட 15 % தமிழ்நாட்டில் உள்ளது. இதற்கு அரசாங்கம் ஊக்கம் தந்தால் குறுகிய காலத்திலேயே எழுந்து நிற்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இன்னும் 3 அல்லது 6 மாத காலத்திற்கு மந்தநிலையாக காணப்படுவதுபோல் தெரிகிறது. அதனால் இந்த காலகட்டத்தைத் தாங்குவதற்கு சிறு குறு தொழில்கள் மூடப்படும் நிலையில் உள்ளதால் அரசாங்கம் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்து உயிர்பெற செய்யவேண்டும். இவற்றைச் சார்ந்து சுமார் 10 கோடி பேர் வேலையில் (Direct/ Indirect) உள்ளனர்.’’ என்று சொல்லும் ஷ்யாம் ஒரு சில தொழில்கள் சந்திக்கக்கூடிய பிரச்னைகளையும் பட்டியலிட்டார்.

‘‘அடுத்து நாம் கவனிக்க வேண்டியது எந்தெந்தத் துறைகள் எப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன? எதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளன? என்று பார்ப்போம். தானியங்கி (Automotive) தொடங்கி பொழுதுபோக்கு, சில்லறை வணிகம், பயணம், விருந்தோம்பல், ஜவுளி இவை மாதிரி பல துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனங்கள் வாங்குவது தற்போது தள்ளிவைக்கப்படும் என்று கணக்கிடப்படுகிறது. காரணம், பொருளாதார நிலைமையால் எது மிக மிக அவசியத் தேவையோ அதை மட்டுமே வாங்குவார்கள். அதே சமயம் புதிதாக வாங்கக்கூடிய பொருட்கள் ஒரு 6 அல்லது 9 மாத காலத்திற்கு மேலும் தள்ளி வைக்கபடலாம். இந்தத் துறைகள் வளர்வதற்கு மேற்கொண்டு நாளாகும். பொழுதுபோக்கு என்றால் அதில் மால்கள் (Malls), திரை அரங்குகள் இவையெல்லாம் இருக்கின்றன.

இதில் மக்கள் அதிகமாக வந்துபோவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஏனென்றால் தற்சமயம் இருக்கும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் அதிகமாக கூடும் இடங்களை தவிர்ப்பார்கள். அதேபோல சில்லறை வணிகம், விருந்தோம்பல், (hospitality, retail industry) என்று பார்த்தால் பல கடைகள் ஊரடங்கால் பல நாட்கள் மூடப்பட்டிருந்தன. இதில் நல்ல விஷயம் என்னவென்றால் சிறு மளிகைக் கடைகள் முன்பு இருந்ததைவிட நன்றாக வியாபாரம் செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது. ஷோரூம்களை பொறுத்தவரை மக்கள் தேவைப்பட்டால் மட்டுமே வருவதற்கு யோசிப்பார்கள். துணி (Textile Industry) சார்ந்த தொழில் நிறுவனங்களும் 6 – 9 மாத காலத்திற்குள் மீண்டும் எழுச்சி பெற வாய்ப்புள்ளது. அதேபோல் மின்னணு, நுகர்வோர் பொருட்களெல்லாம் (Electronic Consumer Durable) மக்கள் தேவைப்பட்டால் ஒழிய தற்சமயம் வாங்கமாட்டார்கள். ஏனென்றால் வேலையின்மை என்ற இன்னொரு பெரிய சவால் நம்மை எதிர்கொண்டிருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில் மத்திய அரசு தற்சார்புப் பொருளாதாரம் என்று ஒரு திட்டத்தை கொண்டுவந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அந்தத் திட்டத்தின்படி மத்திய அரசு அறிவித்திருக்கும் 20 லட்சம் கோடி நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 10 % ஆகும். இந்த 20 லட்சம் கோடி நிவாரண தொகுப்பு 5 பகுதிகளாக அறிவிக்கப்பட்டது . பகுதி 1-ல் 5,94550 கோடியில், சிறு குறு, நடுத்தரத் தொழில்களுக்கு 3 லட்சம் கோடியும் (இதனால் 45 லட்சம் தொழில்கள் பயனடைவதற்காக), மின்சார  விநியோக நிறுவனங்களுக்கு நீர்மை நிறைக்கு 90,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது பகுதியாக 3,10000 கோடியில், புலம்பெயர் தொழிலாளர்களுக்காக 3,500 கோடி, முத்ரா திசு கடனுதவியாக 1,500 கோடியும் சாலையோர விற்பனையாளர்களுக்கு 5,000 கோடி கடனுதவியும், மலிவு வீடு வசதி கடனுதவிக்காக 70,000 கோடியும், பழங்குடியினருக்கு 6,000 கோடி, சிறு விவசாயிகளுக்கு 30,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது பகுதி – 1,50000 கோடியில், 1 லட்சம் கோடி விவசாயம் உள்கட்டமைப்பிற்கும், மைக்ரோ உணவு நிறுவனங்களுக்கு 10,000 கோடியும், கடல்மீன் பிடிப்பு தொழிலை மேம்படுத்த 20,000 கோடியும் ஒதுக்கியுள்ளதுநான்காவது மற்றும் ஐந்தாவது பகுதியில் 48,100  கோடியில், முக்கியமான துறைகளான நிலக்கரி, கனிமவளம், பாதுகாப்பு உற்பத்தி, வான்வெளி மேலாண்மை, சமூக உள்கட்டமைப்புத் திட்டங்கள், மின்சார விநியோகம், விண்வெளித்துறை, அணு ஆற்றல், இது தவிர கல்வி மற்றும் ஆரோக்கியத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்தத் திட்டங்கள் நன்றாக இருந்தாலும், மிகச் சரியாகவும், துல்லியமாகவும், திறமையாகவும் நிர்வகித்தால் மட்டுமே உரிய பயனாளர்களுக்குத்ட தகுந்த நேரத்தில் சென்றடைந்து இந்தியாவை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு சேர்க்கும். அது மட்டுமில்லாமல் சீனாவிலிருந்து வெளியேற நினைக்கும் பல நிறுவனங்களை ஈர்ப்பதற்கு  இந்த சரியான தருணத்தில் சிறந்த முயற்சியை மேற்கொள்ளவேண்டும். இப்படியெல்லாம் திட்டமிட்டு முறையாகச் செயல்பட்டால் மட்டுமே இந்தியா மீண்டும் பழைய நிலையை அடையமுடியும்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *