இலங்கையில் நாளைமுதல் சமூக இடைவெளியை பேணாதவர்கள் கைது செய்யப்படுவார்கள்

இரண்டு மாதங்களுக்கும் அதிக காலம், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அமுலாக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் நாளை முதல் தற்காலிகமாக தளர்த்தப்படுகிறது.
நாட்டின் ஏனைய பாகங்களுக்கும் அமுலாகும் வகையில், இரண்டு நாட்கள் அமுலாகும் ஊரடங்கு சட்டம், நாளை அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ள நிலையில், கொழும்பு, கம்பஹாவிலும் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது.
ஊரடங்கு சட்ட அமுலாக்கத்தில் தளர்வு ஏற்படுத்தப்பட்டாலும், நாடுமுழுவதும் உள்ள விருந்தகங்கள், உடற்பயிற்சி நிலையங்கள், வாராந்த சந்தைகள், நடைபாதை வர்த்தகம் என்பனவற்றுக்கு தொடர்ந்தும் அனுமதி வழங்கப்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
எவ்வாறிருப்பினும், கொழும்பு மாநகர அதிகார பகுதிகளில் அமைந்துள்ள சுற்றுலா சபையின் அனுமதி பெற்ற விருந்தகங்கள், உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிசாலைகளை நாளை முதல் திறப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

கடும் சுகாதார நிபந்தனைகளின் கீழ் அவற்றை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் வைத்திய அதிகாரி ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
சுற்றுலா சபையில் பதிவுசெய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து விருந்தகங்கள், உணவகங்கள் என்பனவற்றில் அங்கேயே வைத்து உணவுகளை உட்கொள்வதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும், சுகாதார அமைச்சு மற்றும் சுற்றுலா சபை என்பனவற்றினால் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை கடுமையாக பின்பற்றுமாறு விருந்தகங்களின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, தங்களின் வாடிக்கையாளர்களுக்காக வழமையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆசனங்களின் எண்ணிக்கைக்கு 50 வீதமோ அல்லது அதற்கு குறைவான அளவில் ஆசனங்கள் சமூக இடைவெளியுடன் ஏற்பாடு செய்யப்படல் வேண்டும்.

கைகளை கழுவுதல் மற்றும் கிருமிநீக்க திரவியம் பயன்படுத்துதல் உள்ளிட் கொவிட்-19 தடுப்பு ஒழுங்குவிதிகளுக்கு அமைய இந்த செயற்பாடுகளை முன்னெடுக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு நாளைய தினம் கொழும்பில் ஆறு குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் வைத்திய அதிகாரி ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாளைமுதல் சமூக இடைவெளியை பேணாதவர்களை கைதுசெய்வதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கவினால் விசேட சுற்றறிக்கை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.
நாளை தினம் முதல் நாடுமுழுவதும் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ள நிலையில் குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சமூக இடைவெளியை கடைபிடிக்காத நபர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் பதில் காவல்துறைமா அதிபருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறை தலைமையகம் விசேட சுற்றுநிரூபத்தை வெளியிட்டுள்ளதுடன், அது தொடர்பில் அனைத்து காவல்துறை பொறுபதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாளை முதல் விசேடமாக சமூக இடைவெளியை பேணாத நபர்கள் கைது செய்யப்படுவதுடன், அவர்களுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
பொது மக்களுக்கு இடையிலான சமூக இடைவெளி தொடர்பில் கண்காணிப்பதற்காக சிவில் உடையில் காவல்துறையினர் பயன்படுத்தப்படவுள்ளனர்.
இதன்போது சமூக இடைவெளியை பேணாதவர்களின் செயற்பாடுகள் காணொளியாக பதிவு செய்யப்படுவதுடன் சம்பந்தப்பட்டவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்படுவர்.
எனவே பொது மக்கள் நீண்ட வரிசசையில் காத்திருக்கும் சந்தர்ப்பங்களின் போது சமூக இடைவெளியை கட்டாயம் பேண வேண்டும்.
அவ்வாறு சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்ளுக்கு எதிராக நாளை முதல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விசாலமான மண்டபங்களில் திருமண நிகழ்வுகளை ஏற்பாடு செய்தாலும், நூற்றுக்கு மேற்பட்டோர் அழைக்கப்படுவது சட்டவிரோதமானது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் சுற்றுச்சூழல் சுகாதாரம், தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு பிரதி பணிப்பாளர் நாயகம், வைத்தியர் லக்ஷ்மன் கம்லத் இதனை தெரிவித்துள்ளார்.
இயன்றளவு குறைந்த அளவானவர்களை நிகழ்வில் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிகழ்வு இடம்பெறும் காலப்பகுதியில் சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய, நபர்களுக்கு இடையிலான இடைவெளியை பேணுவது அவசியம் என்பதால் சாதாரண நிலையை விட மண்டபத்திற்குள் நுழைவோரின் எண்ணிக்கை 40 சதவீததிற்கும் மேற்படாதவாறு இருக்க வேண்டும் அவர் அறிவுறுத்தியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *