யுத்தத்தின் போது பிரபாகரனை உயிருடன் பிடிக்க முயற்சிக்கவில்லை

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் தொடர்பில் புத்தகம் எழுதவுள்ளேன். இன்னும் ஓரிரு வருடங்களுக்குள் அப்பணியை செய்துமுடிக்க உத்தேசித்துள்ளேன்.” – என்று இறுதிப்போரை வழிநடத்திய முன்னாள் இராணுவத்தளபதியான பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
அத்துடன், பொட்டம்மான் உட்பட புலிகள் அமைப்பின் எந்தவொரு தளபதியும் இறுதிக்கட்டபோரின்போது தப்பிச்செல்லவில்லை என்றும் அவர் கூறினார்.

இலத்திரனியல் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே பொன்சேகா இந்த தகவலை வெளியிட்டார்.

அவர் கூறியவை வருமாறு,

போரின் இறுதிகட்டம்வரை பிரபாகரன் களத்தில் இருந்தார். தீவிரவாதியாக இருந்தாலும் ஒரு தலைவராக இறுதிவரை அவர் போரிட்டதையிட்டு – ஒரு இராணுவ அதிகாரியாக நான் அவருக்கு மதிப்பளிக்கின்றேன்.
யுத்தத்தின்போது பிரபாகரனை உயிருடன் பிடிப்பதற்கு முயற்சிக்கவில்லை. கடைசிவரை போரிட்டு அவரை கொன்றதே சரியான செயல் என கருதுகின்றேன். ஏனெனில் கே.பி., கருணா அம்மான் போன்றோர் தற்போது சுதந்திரமாக அரசியல் செய்கின்றனர். கருணா அம்மான் யாருடன் அரசியல் செய்கிறார் என்பது மக்களுக்கு தெரியும்.
பிரபாகரனையும் உயிருடன் பிடித்திருந்தால், போர் முடிவடைந்திருந்தாலும் அவரும் பிரபல நபராகியிருப்பார். வடக்கையும், கிழக்கையும் ஆளும்நிலையை அரசியல் ரீதியில் உருவாக்கியிருப்பார். அதற்கு அப்போதைய அரசியல்வாதிகளும் அனுமதி வழங்கியிருக்ககூடும். எனவே, பிரபாகரனை கொன்றதே சரியென நினைக்கிறேன். அவர் உயிருடன் வேண்டும் என எங்கிருந்தும் உத்தரவு வரவில்லை.
பிரபாகரன் இராணுவத்தின் பலவீனத்தை தெரிந்துகொண்டார். எம்மைவிடவும் குறைந்த ஆளணிபலம் இருந்தும் தாக்குதல் நடத்தினர். பிரபாகரன் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர். சிறிய வாய்ப்பு கிடைத்தால்கூட தாக்குதல் நடத்தி இலக்கை நோக்கி நகரமுயற்சிப்பார். தனக்கு எதிரான அரசியல்வாதிகளை கொன்தொழித்தார். தற்கொலை படையைக்கூட உருவாக்கினார்.
புலிகளே போரை ஆரம்பிப்பார்கள். அவர்கள் தாக்குதல் நடத்திய பின்னரே முகாம்களை பாதுகாப்பதற்கு பதிலடிகொடுக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் நான் போர்வியூகத்தை மாற்றியமைத்தேன்.வீதிகளில் பயணிக்காமல் கஷ்டமாக இருந்தாலும் இராணுவத்தை காட்டுக்குள் குழுக்களாக களமிறக்கினேன். புலிகளின் பலமான பகுதிகளில் அதிரடியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
புலிகளின் பகுதிகளை கைப்பற்றுவது எனது இலக்காக இருக்கவில்லை. அவர்களை ஒழிக்கவேண்டும். அவ்வாறு செய்யும்போது புலிகள் தாமாகவே பின்நோக்கிச்சென்றனர்.
புலிகளின் தளபதிகளுள் ஒருவரான பால்ராஜ் மாரடைப்பதால் இறந்தார் என அவ்வமைப்பினர் கூறினாலும், பரந்தனில் இடம்பெற்ற தாக்குதலொன்றின்போதே அவர் கொல்லப்பட்டிருக்கலாம்.
போரின் இறுதிகட்டத்தில் புலிகள் தப்பியோடமுடியாத வகையில் கடல் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. அவர்கள் தப்பியோட முயற்சித்தபோது இராணுவத்தினரால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்போது பொட்டு அம்மான், தற்கொலை குண்டை வெடிக்கச்செய்து உயிரிழந்தார் என கே.பி. தகவல் வெளியிட்டிருந்தார். இந்த விடயத்தை ஊடகங்கள் வாயிலாக பார்த்தேன். எனவே, புலிகள் அமைப்பின் எந்தவொரு தளபதிகளும் தப்பிச்செல்லவில்லை.
போரை நிறுத்தும் நிலைப்பாட்டில் இந்தியா இருக்கவில்லை. அதேபோல் யுத்தத்துக்கு உதவிகளை வழங்கவும் இல்லை. பாகிஸ்தான் ஒத்துழைப்பு வழங்கியது. சீனாவில் இருந்து ஆயுதங்கள் எடுத்துவரப்பட்டன. ஆனால், மேற்குலக நாடுகள் போரை எதிர்த்தன. அதாவது யுத்தத்தை எவராலும் முடிவுக்கு கொண்டுவரமுடியாது. இறுதியில் மனித உயிரிழப்புகள்தான் ஏற்படும் என கருதியதாலேயே அந்நாடுகள் எதிர்த்தன என நினைக்கின்றேன். அதேபோல் கடைசிநேரத்தில்கூட போர்நிறுத்த உடன்படிக்கையை செய்து கொள்வது சம்பந்தமாக சில மேற்குலக நாடுகளின் தூதுவர்கள் பேச்சு நடத்தினர்.
அதேவேளை, போர் முடிவடைந்த பின்னர் புத்தகம் எழுதுவதற்கு எனக்கு நேரம் இருக்கவில்லை. தற்போது எதிரணியில் இருக்கின்றேன். இனி நேரம் கிடைக்கும் என நம்புகின்றேன். புத்தகம் எழுதுவேன். ஓரிரு வருடங்களில் முடிக்கலாம். பல அனுபங்களையும், தகவல்களையும் பகிரக்கூடியதாக இருக்கும்.” – என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *