இலங்கையில் எதிர்வரும் 11 ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படுமா?

எதிர்வரும் திங்கட்கிழமை ஊரடங்கு சட்டத்தை தளர்த்தி நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் இன்று தௌிவுபடுத்தியது.
தற்போதுள்ள நிலையில் கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய பாரிய அபாய வலயங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால், சமூக பரவல் ஏற்படாது என நம்புவதாக அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.
சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய, மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து பயணம், வர்த்தக நிலையங்களைத் திறப்பது தொடர்பில் அனைத்து நிறுவனங்களுடனும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வேறு நாடுகளில் தீவிரமாக நோய் பரவி வருகின்ற நிலையில், மரண எண்ணிக்கை இலங்கையை விட பல மடங்கு அதிகரித்துள்ள போதும், பொருளாதார சட்டங்களைத் தளர்த்துவதற்கு சர்வதேச நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றமையால், இலங்கையிலும் இலகுபடுத்த எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

வெசாக் நாட்களில் மும்மணிகள் ஆசியோடு நோய் அபாயம் அற்றுப்போனால், 11 ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது தொடர்பில் சுகதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் கொழும்பில் இன்று ஊடகவியலாளர்கள் வினவினர்.
11 ஆம் திகதிக்கு இன்னும் பல நாட்கள் உள்ளமையால், எதிர்வரும் நாட்களின் நிலையைப் பார்த்து தான் ஊரடங்கு சட்டத்தை நீக்குவது தொடர்பில் கூற முடியும் என பவித்ரா வன்னியாராச்சி பதிலளித்தார்.

கொழும்பில் வழங்கக்கூடிய பாதுகாப்புகளை வழங்கியுள்ளதாகவும் மக்கள் பாதுகாப்பாக செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தேர்தலை நடத்துவதில் அபாயங்கள் உள்ளனவா என சுகாதார அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

நாட்டின் சில பகுதிகளில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. நீங்கள் இவ்வாறான நேரத்தில் இவ்வாறான கேள்வியினை கேட்பது தவறு. மக்களின் ஆதரவுடன் தேர்தலை நடத்துவதற்கு இடமுள்ளது
என பவித்ரா வன்னியாராச்சி பதிலளித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *