கொரோனா வைரஸ் காரணமாக குடும்ப வன்முறையால் ஆயிரம் பெண்கள் படுகொலை

மெக்சிகோ நாட்டில் கொரோனா பரவிய கடந்த 3 மாதங்களில் குடும்ப வன்முறையில் சுமார் 1,000 பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது.
வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் குற்றங்கள் அதிகளவில் நடப்பதுண்டு. அங்கு குற்றச்செயல்கள் நடக்காத நாளே கிடையாது. இந்த நிலையில் கடந்த பெப்ரவரி மாத கடைசியில் கொரோனா வைரஸ் மெக்சிகோ நாட்டிற்குள் நுழைந்தது.
மார்ச் 2ஆவது வாரத்துக்கு பிறகு கொரோனா வீரியமாக தாக்கத் தொடங்கியது. இதனால் அந்நாட்டின் அதிபர் லோபஸ் ஒப்ரடார் ஊரடங்கை அறிவித்தார்.

இதுவரை அங்கு கொரோனாவால் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியும் உள்ளனர்.
இதனால் தற்போது ஊரடங்கு வருகிற 30 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டு இருக்கிறது.
ஊரடங்கு காரணமாக மக்கள் வெளியே செல்ல முடியாததால் 24 மணி நேரமும் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். இது, பல்வேறு வழிகளில் குடும்ப வன்முறையை அதிகரிக்க செய்துள்ளது.
கணவன் மனைவி, திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வோர் தினமும் சண்டை பிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுபோன்ற மோதல்களால் கடந்த 3 மாதங்களில் மட்டும் சுமார் 1,000 பெண்கள் வரை படுகொலை செய்யப்பட்டிருக்கும் திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது.
அதாவது கடந்த பெப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களில் மட்டும் மெக்சிகோவில் 988 குடும்பத் தலைவிகள், இளம்பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மெக்சிகோ நாட்டின் மகளிர் அமைப்புகள், சமூக தொண்டு நிறுவனங்கள் தெரிவிக்கையில், “பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகளும், கொலைக்குற்றங்களும் நாட்டில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க அதிபர் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று கோரிக்கை விடுத்தன.
ஆனால் மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ரடார் இதை மறுத்துள்ளார். “பெண்களுக்கெதிரான குற்றங்கள் எப்போதும் போல நடந்தவாறுதான் உள்ளது. ஊரடங்கு காலத்தில்தான் பெண்கள் அதிகமாக படுகொலை செய்யப்படுவதாக கூறுவது தவறு. அரசியல் எதிரிகள் எனது செல்வாக்கை சீர்குலைக்கும் விதமாக மகளிர் அமைப்புகளை தூண்டிவிடுகின்றன“ என குற்றம் சாட்டுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *