அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் உடல்களை மனித நடமாட்டமற்ற பகுதியில் புதைக்கும் அவலம்

கொரோன வைரஸ் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மனித நடமாட்டமற்ற ஹார்ட் ஐலன்ட் என்ற பகுதியில் புதைக்கும் நடவடிக்கைகளை நியுயோர்க் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

இந்த உடல்களை புதைக்கும் நடவடிக்கைகளை தொழிலாளர்களை பயன்படுத்தி அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

19 ம் நூற்றாண்டு முதல் உறவினர்கள் எவருமற்ற அனாதைகளின் உடல்களை இந்த தீவிலேயே அதிகாரிகள் புதைத்து வந்துள்ளனர்.

வழமையாக வாரத்திற்கு 25 உடல்கள் இந்த தீவில் புதைக்கப்படும் என தெரிவித்துள்ள ரொய்ட்டர் சிறைக்கைதிகளிற்கு கூலியை வழங்கி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவது வழமை எனவும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் இந்த தீவிற்கு படகு மூலமே செல்ல முடியும் எனவும் ரொய்ட்டர் குறிப்பிட்டுள்ளது.

எனினும் கொரோனா வைரஸ் நியுயோர்க்கை தாக்க தொடங்கிய பின்னர் இங்கு எடுத்து வரப்படும் உடல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள ரொய்ட்டர், நாளாந்தம் 25 உடல்கள் எடுத்து வரப்படுவதாக உடல்கள் புதைக்கப்படுவதை கண்காணிக்கும் சீர்திருத்த திணைக்களத்தின் அதிகாரியொருவர் குறிப்பிட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் ஐந்து நாட்களும் உடல்கள் புதைக்கப்படுகின்றதாகவும், உடல்களை மூடுவதற்கான பைகளில் அவற்றை சுற்றிய பின்னர் பிரேதப்பெட்டியில் வைத்து அவற்றை புதைக்கின்றனர் எனவும் ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

இறந்தவர்களின் உடல்கள் பெட்டியில் எழுதப்படுவதுடன் ,வெட்டப்பட்ட புதைகுழிகளில் பிரேதப்பெட்டிகள் வைக்கப்படுகின்றன என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

இதேவேளை சமூக தனிமைப்படுத்தலிற்காகவும் பாதுகாப்பு காரணங்களிற்காகவும் சிறைக்கைதிகளை நாங்கள் பயன்படுத்தவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறியுள்ள ரொய்ட்டர், சுமார் 25 உடல்களுடன் குளிரூட்டப்பட்ட வாகனத்தை சுமந்தபடி பெரிய படகொன்று வருவதை பார்த்ததாகவும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *