இலங்கை வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் கைகுலுக்குதல் மற்றும் புகைப்படம் எடுத்து கொள்ள மாட்டார்களாம்

கொரோனா வைரஸை கருத்திற்கொண்டு, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாதுகாப்பு திட்டங்களை செயற்படுத்தவுள்ளதாக இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட் (Joe Root) தெரிவித்துள்ளார்.

அதன்படி இங்கிலாந்து வீரர்கள் போட்டியின்போது இலங்கை வீரர்களுடன் கைகுலுக்குதல், புகைப்படம் எடுத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளவுள்ளனர்.

இலங்கையில் நிலவும் வெப்பத்துடனான வானிலைக்கு ஏற்றவாறு தமது அணி வீரர்கள் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் தொடரில் திறமையை வெளிப்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாகவும் ஜோரூட் மேலும் கூறியுள்ளார்.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 19 ஆம் திகதி காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்தத் தொடருக்காக நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பின் போதே ஜோரூட் இவ்வாறு கூறியுள்ளார்.

இதனிடையே, இங்கிலாந்து தொடருக்காக சிறப்பான முறையில் தயாராகியுள்ளதாகவும் கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெறுவது முக்கியமானது எனவும் இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பின் நிமித்தம் இங்கிலாந்து வீரர்களின் இந்தத் தீர்மானம் வரவேற்கத்தக்கது எனவும் திமுத் கருணாரத்ன இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இத்தாலி தேசிய கால்பந்தாட்ட வீரரும் கழகமட்ட போட்டிகளில் தற்போது ஜூவான்டர்ஸ் அணிக்காக விளையாடுபவருமான “டானியலே ருஹானி” கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஏனைய வீரர்களமிடமிருந்து டானியலே ருஹானி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஜூவான்டர்ஸ் கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவும் இத்தாலி லீக் கால்பந்தாட்டத்தொடரில் பங்கேற்றுள்ளதுடன் அவர் ஜூவான்டர்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *