மேற்குலகத்தின் தலையீட்டால் கானல் நீரானது இடைக்கால அரசு! – மஹிந்த தரப்புக்குப் பெரும் ஏமாற்றம்

மஹிந்த அணியின் ஏற்பாட்டில் இடைக்கால அரசொன்று இலங்கையில் இப்போது அமைவதை அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட்ட மேற்குலகம் விரும்பவில்லை.

இதனை அந்த நாடுகள் கொழும்பில் உள்ள தமது இராஜதந்திரிகள் ஊடாக ஜனாதிபதி மைத்திரியிடமும் பிரதமர் ரணிலிடமும் கூறியிருக்கின்றன…

“இப்போதுள்ள நிலைமையில் இடைக்கால அரசு வருவதை நாங்கள் விரும்பவில்லை. அரசின் பட்ஜட் கூட தோற்கடிக்கப்படக் கூடாது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசில் இருந்து விலகுமானால் ரணில் தனித்து ஆட்சியமைக்கட்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பதவிகளை எடுக்காமல் வெளியில் இருந்து அதற்கு ஆதரவளிக்கட்டும். அதனை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம். புதிய அரசியலமைப்பு உட்பட்ட பல விடயங்களை நிறைவேற்ற இந்த அரசு தொடர வேண்டும்” என்ற செய்தி ஜனாதிபதி மைத்திரியிடம் சொல்லப்பட்டுள்ளது.

இராஜதந்திரிகளின் இந்தத் திடீர் அழுத்தத்தால் அதிர்ந்து போயிருக்கின்றது கொழும்பு அரசியல்.

மறுபுறம் எதிர்வரும் திங்கட்கிழமை தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டு புதுடில்லி செல்லவுள்ள பிரதமர் ரணிலை இந்தியப் பிரதமர் மோடி சந்திக்கவுள்ளார்…

இப்போதுள்ள நிலையில் கொழும்பு அரசியல் நிலைமை மாறுவதை புதுடில்லி விரும்பவில்லை என்ற செய்தியுடன் அப்படி ஒரு நிலைமை வருமாயின் ரணில் ஆட்சியைத் தொடர வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை மோடி இதன்போது சொல்வார் என அறியமுடிகின்றது.

இப்போதிருக்கும் நிலைமையைப் பார்த்தால் கொழும்பு அரசியலில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை.

மைத்திரியும் மஹிந்தவும் ஒருவருக்கொருவரை சந்தேகிப்பதும் இதற்கான மற்றுமொரு காரணம்.

வழமைபோல் பட்ஜட் வெற்றியுடன் இந்த அரசு தனது பயணத்தைத் தொடரும் என்றே நிலைவரங்கள் கட்டியம் கூறுகின்றன. ஆனால், அரசியலில் எதுவும் நடக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *