நான் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டேன்

ஐக்கிய மக்கள் சக்தி என்ற அரசியல் கூட்டணி, கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் வைத்து, அதன் தலைவர் சஜித் பிரேமதாஸவால் உத்தியோகப்பூர்வமான அறிவிக்கப்பட்டது.
தமிழ் முற்போக்கு கூட்டணி , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் , ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் , ஜாதிக்க ஹெல உறுமய உட்பட்ட கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் இந்த அரசியல் கூட்டணி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.
10 அரசியல் கட்சிகள், 20 தொழிற்சங்கங்கள், 18 சிவில் அமைப்புகள் இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.
இந்த நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் பங்கேற்கவில்லை.
நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றுகையில், இந்தக் கூட்டணி தேர்தல் கால அரசியல் கூட்டணியல்ல என்றும், தொலைநோக்கு கொண்ட கூட்டணியாகும் என்றும் கூறியுள்ளார்.
அவர் அங்கு உரையாற்றுகையில், “இலங்கை அரசியல் வரலாறில் முக்கியமான நாள் இது. ஐக்கிய தேசியக் கட்சி உட்பட்ட கட்சிகள் அடங்கிய இந்த முன்னணி முக்கியமான ஒன்று. எதிர்வரும் நாடாளுமன்ற மாகாண உள்ளூராட்சி தேர்தல்களை நாங்கள் வெற்றிகொள்வோம்.
நாட்டின் இறையாண்மை , சுயாதீனம், பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கி இதர மத இனங்களுக்கு சம அந்தஸ்து வழங்கி சுதந்திர ஜனநாயக நாடொன்றை ஏற்படுத்த வேண்டும்.
இனவாதம் , தீவிரவாதம் என்பவற்றுக்கு எம்மிடம் இடமில்லை.சகல உயிர்களும் நலமுடன் இருக்க வேண்டும் என்ற பௌத்த கொள்கையை நாம் முன்னெடுப்போம்.
ஐக்கிய மக்கள் சக்தி ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழுவால் அங்கீகாரம் பெற்றது.
எனவே நான் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டேன். அன்று எனது தந்தையார் பிரஜைகள் முன்னணி என்ற ஒன்றை அடித்தட்டு மக்களுக்காக ஆரம்பித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி அதே நோக்கில் தனிமனித சக்திகளின் கட்டுப்பாட்டில் இல்லாமல் இயங்கும். இது உங்களின் கட்சி.
தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குவோம். அதனை உறுதிப்படுத்துவோம். தேசிய பொருளாதாரம் முன்னேற்றப்பட வேண்டும். தேசிய வளங்களை சூறையாட இடமளிக்கமாட்டோம் .
ஐக்கிய தேசியக் கட்சி உட்பட இதர கட்சிகள் நாட்டை கட்டியெழுப்பும் எமது இந்த பயணத்தில் இணைய வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *