இலங்கைப் பிரச்சினையை சர்வதேசத்திற்கு காட்டி கொடுத்தவர் மஹிந்தவே

போர் முடிவடைந்த பின்னர் ஐ.நா. செயலாளருடன் இணைந்து எமது நாட்டின் அரச தலைவர் (மஹிந்த ராஜபக்ச) வெளியிட்ட கூட்டு அறிக்கையே உள்நாட்டு விவகாரத்தை சர்வதேச மயப்படுத்தியதுடன், வெளிநாட்டு தலையீடுகளுக்கும் வழிசமைத்துக்கொடுத்தது.

எனவே, போர்முடிவடைந்து 4 நாட்களுக்குள் நாட்டை இவ்வாறு அப்பட்டமாகக்காட்டிக்கொடுத்தவர்கள், இன்று எதிரணியிலுள்ளவர்களுக்கு துரோகி முத்திரை குத்தி – தம்மை தேசப்பற்றாளர்களாக காண்பிப்பதற்கு முயற்சிக்கின்றனர்.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது.

பிரதான சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், ஜெனிவா தீர்மானத்திலிருந்து விலகும் அரசாங்கத்தின் முடிவை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன சபைக்கு தெளிவுபடுத்தினார்.

இதன்பின்னர் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் கூறியதாவது,

” இலங்கையில் உள்நாட்டுப்போர் 2019 மே 19 ஆம் திகதி முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் மே 23 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் அப்போதைய பொதுச்செயலாளர் பான் கீ மூன் இலங்கைக்கு வந்திருந்தார். அ

வருடன் இணைந்து அப்போதைய அரச தலைவர் ( மஹிந்த ராஜபக்ச) கூட்டறிக்கை வெளியிட்டார்.

சர்வதேச மனித உரிமை சட்டத்திட்டங்கள் மீறப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் ஐ.நா. செயலாளர் சுட்டிக்காட்டியிருந்த நிலையில், அது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என குறிப்பிட்டு, சர்வதேச மனித உரிமை சட்டம் மீறப்பட்டுள்ளமை அரசாங்கமே ஏற்றுக்கொண்டது.

குறித்த கூட்டறிக்கையின் ஊடாகவே உள்நாட்டு பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டது. இங்குதான் முதல் தவறும் அப்போதைய அரசால் இழைக்கப்பட்டது.

கூட்டறிக்கையின் ஊடாக இலங்கை அரசால் வழங்கப்பட்ட உறுதிமொழியின் பிரகாரமே ஐ.நா. உட்பட சர்வதேச நாடுகள் இலங்கைமீது பார்வையை செலுத்தின.

இதன்காரணமாகவே நல்லிணக்க ஆணைக்குழு, பரணகம ஆணைக்குழு போன்ற குழுக்களைக்கூட நியமிக்கவேண்டிய நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டது.

போர் முடிவடைந்து 5 நாட்களில் கூட்டு உடன்படிக்கை கைச்சாத்திட்டு நாட்டை காட்டிக்கொடுத்தது மட்டுமல்லாமல், இறையாண்மையையும் தாரைவார்த்தனர்.எனவே, தவறு எங்குள்ளது என்பதை அரசாங்கம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

அதேவேளை, நாட்டின் ஒருமைப்பாடு, இறையாண்மை ஆகியவற்றை பாதுகாப்பதற்கு நாம் முன்னின்று செயற்படுவோம். அரசுக்கு தேவையான ஒத்துழைப்புகள் வழங்கப்படும்.” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *