பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி கிடைத்தால் 19ஆவது திருத்தத்தை மாற்றியமைப்போம்

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி கிடைத்தால் 19ஆவது திருத்தத்தை முழுமையாக மாற்றியமைத்து பெரும்பான்மைப் பலம் கொண்ட அரசை உருவாக்கி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியுடனான நிர்வாகக் கட்டமைப்பை நிச்சயம் தோற்றுவிப்பேன்.”

– இவ்வாறு சூளுரைத்தார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் அமையவுள்ள பெரும்பான்மைப் பலம் கொண்ட அரசின் ஊடாக செயற்படுத்தப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

ஓரும் இலட்சம் கிலோ மீற்றர் இடை வீதிகளைப் புனரமைக்கும் வேலைத்திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கலஹாவில் இன்று ஆரம்பமானது. இதில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பாதுகாப்பான நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று ஜனாதிபதித் தேர்தலின்போது மக்கள் கோரக்கை விடுத்தனர். அதற்கமைய தேர்தலுக்குப் பின்னரான 3 மாதக் காலப்பகுதியில் பாதுகாப்புத் துறைக்கு தேவையான அனைத்து அதிகாரங்களையும் வழங்கியுள்ளதுடன், நாட்டின் பாதுகாப்புக்காக பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட பாதுகாப்புத்துறை அனைத்துக்கும் சிறந்த பாதுகாப்பு அதிகாரிகளையும் நியமித்து பாதுகாப்புத் துறையை முழுமையாக மாற்றியமைத்து தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளேன்.

நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமில்லை என்பதை உறுதியாகக் கூறுகின்றேன்.

அதேபோன்று போதைப்பொருட்களுக்கு அடிமையாகும் மாணவர்களை மீட்பதற்குத் தேவையான முக்கிய செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளோம்.

அனைவருக்கும் சட்டம் சாதாரண முறையில் நடைமுறைப்படுத்தாவிட்டால் நீதிமன்றத்தின் சுயாதீனம் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள். அதனால், நீதிமன்றங்கள் சுயாதீனமாகச் செயற்படுவதற்கு இடமளித்துள்ளோம்.

ஜனாதிபதித் தேர்தலில் என்னுடைய வெற்றிக்குப் பின்னர் சிறுபான்மைப் பலம் கொண்ட அரசையே உருவாக்கியுள்ளோம், ஆகவே, பெரும்பான்மைப் பலம் கொண்ட எங்களுடைய தனி அரசை உருவாக்கும் வரை புதிய வரவு – செலவுத் திட்டமொன்றை நிறைவேற்ற முடியாது. ஆனால், இந்த நாட்டிலுள்ள வறுமையை நீக்குவதற்கு முதல் ஒரு இலட்சம் குடும்பங்களில், குடும்பத்தில் ஒருவருக்கு அரச வேலைவாய்ப்புப் பெற்றுக்கொடுக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.

ஆகவே, தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்த அனைத்தையும் நிறைவேற்றுவது பிரதான எதிர்பார்ப்பு.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கப் பலமானதொரு அரசு தேவை. குறிப்பாக, 19 ஆவது அரசமைப்பு திருத்தத்தால் கடந்த 5 வருடங்களில் அரச இயந்திரத்தின் பலம் மற்றும் அதிகாரங்கள் என அனைத்தும் சீர்குலைக்கப்பட்டுள்ளன.

ஆகவே,19 ஆவது திருத்தத்தை மாற்றியமைத்து மீண்டும் பலமிக்கதொரு அரசு மற்றும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் மூலம் மக்களுக்கு சேவையாற்றக் கூடிய ஓர் அரசை உருவாக்குவோம்.

கடந்த ஆட்சியில் அரச அதிகாரிகள் சுயாதீனமாக முடிவெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். தற்போது எவ்வித அச்சமுமின்றி மக்களுக்குத் தேவையான சேவையை வழங்குவதற்கு சுயாதீனமாக முடிவெடுக்கும் அதிகாரங்களை அவர்களுக்கு வழங்கியுள்ளோம்.

இன்று சர்வதேசத்துக்கு மத்தியில் எங்கள் நாட்டின் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. இந்தியா, சீனா மற்றும் ஆசிய நாடுகள் உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு இலங்கை அரசு மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளமையால் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ளன.

ஆகவே, எதிர்காலத்தில் பலமானதொரு அரசை உருவாக்குவதற்காக எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் ஆதரவை வழங்க வேண்டும். குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில் என் மீது நம்பிக்கை வைத்து மாபெரும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது போன்று பலமானதொரு அரசை உருவாக்குவதற்கு உங்கள் ஆதரவை வழங்க வேண்டும்” – என்றார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, மத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.டப்ளியு.ஆர்.பேமசிறி ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *