விக்னேஸ்வரனின் புது அவதாரத்தால் அநாதையாக்கப்படுமா தமிழ் தேசியக் கூட்டமைப்பு?

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் உதயம் தமக்கு சவாலாக அமையாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறி வருகிறது.
சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள கூட்டணி தொடர்பில் இன்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அரசியல் ரீதியாக அங்கம் வகித்தவர்களின் கூட்டாகவே தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.
இதுவரை நான்கு கட்சிகள் இந்தக் கூட்டணியுடன் உத்தியோகபூர்வமாக இணைந்து செயற்படுகின்றன.
புதிய கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வின்போது ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தவறான தலைவர்களின் கைகளில் உள்ளதாகக் கூறியிருந்தார்.
எனினும், இந்த கருத்தை ஏற்க முடியாதென்பதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களின் நிலைப்பாடாகும்.
சில புத்திஜீவிகளின் கருத்து புதிய கட்சியின் வரவால் பெரும்பாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு சவாலாக இருக்கும் இதனால் வாக்குகள் சிதறடிக்க வாய்ப்புள்ளது என்கின்றனர்.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் உருவாக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால அரசியலை பாதிக்காது என இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர் சி.வி.கே.சிவஞானம் குறிப்பிட்டார்.
மலையக அரசியல் கட்சிகளும் மக்களும் தம்முடன் கைகோர்க்க வேண்டும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி விடுத்துள்ள வேண்டுகோள் தொடர்பில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரத்திடம் ஊடகவியலாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர்.
தாம் அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணி மலையகத்தில் தனித்துவமாக இயங்குவதாகக் குறிப்பிட்ட அவர், வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் பிரிந்திருக்கக் கூடாது என வலியுறுத்தினார்.
மேலும், சி.வி.விக்னேஸ்வரனும் சம்பந்தனும் ஒன்றாக சேர்ந்து வாக்குக் கேட்டால் தான் தமிழ் மக்களின் பலம் அதிகரிக்கும் என குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *