வவுணதீவில் அடிகாயங்களுடன் தமிழ்ப் பொலிஸின் சடலம் மீட்பு! – சந்தேகத்தில் இருவர் கைது

மட்டக்களப்பு மாவட்டம், வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள ஆயித்தியமலை மூன்றாம் கட்டைப் பகுதியில் அடிகாயங்களுடன் தமிழ்ப் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மட்டக்களப்பு, புதூர் 7ஆம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான தம்பாப்பிள்ளை சிவராசா (வயது – 55) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று வவுணதீவுப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் சார்ஜன்ட் நேற்று மாலை வவுணதீவு, மூன்றாம் கட்டைப் பகுதியிலுள்ள தனது பண்ணையைப் பார்வையிடச் சென்றிருந்த நிலையில், இன்று காலை அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் நேற்றிரவு 11 மணியளவில் தனது பண்ணையில் இருந்து வீதிக்கு வந்தபோது அங்கு இருவர் பதுங்குவதைக் கண்டு யார் எனக் கேட்டபோது அவர்கள் தாம் மது அருந்துவதாகத் தெரிவித்துள்ளனர்.

இதன்போது பொலிஸ் சார்ஜன்ட், “இல்லை நீங்கள் மாடு களவு எடுக்க வந்துள்ளீர்களா?” எனக் கேட்டபோது அவர்கள் குறித்த சார்ஜனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்போது பொலிஸ் சார்ஜன்ட் மீது இருவரும் அங்கிருந்த பொல்லால் தலையில் தாக்கியதையடுத்து அவர் வீதியில் விழுந்து உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரின் உடலை இழுத்து வீதியின் ஓரத்தில் போட்டுவிட்டு இருவரும் தப்பியோடியுள்ளனர் என்று விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட அரிசி ஆலை ஒன்றில் வேலை செய்துவரும் ஆயித்தியமலை, தேவாலய வீதியைச் சேர்ந்த முகமட் அஸ்மி, வவுணதீவு, நாவற்குடா – ஈச்சந்தீவைச் சேர்ந்த குணசேகரன் சுரேந்திரன் என்பவர்களிடம் பொலிஸார் நடத்திய ஆரம்ப விசாரணையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

பொலிஸ் சார்ஜனின் தாக்குதலில் முகமட் அஸ்மியின் (வயது – 31) உடலில் அடிகாயங்கள் காணப்படுகின்றன எனவும் பொலிஸார் தெரிவித்தனர் .

இதேவேளை, சம்பவ இடத்தை கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜெயவர்த்தன, மட்டக்களப்பு உதவிப் பொலிஸ்மா அதிபர் லக்சிறி விஜயசேகர, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவன் மெண்டிஸ் ஆகியேர் சென்று பார்வையிட்டனர். அத்துடன், விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு பொலிஸாருக்கு அவர்கள் ஆலோசனைகளையும் வழங்கினர்.

மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் ஏ.சி. றிஸ்வான் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைப் பார்வையிட்டதுடன் சடலத்தைப் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் உத்தரவிட்டார்.

இதையடுத்து சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவுப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *