நடிகர் விஜயின் வீடுகளில் நடைப்பெற்ற சோதனைகளில் ரூபா 300 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு

சென்னை: பிகில் படத்திற்காக நடிகர் விஜய் ரூ.30 கோடி சம்பளம் பெற்றதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். நடிகர் விஜய், மனைவி சங்கீதாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் வாக்குமூலம் பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை அருகே நடிகர்  விஜய்யின் பனையூர் இல்லத்தில் 18 மணி நேரத்திற்கு மேலாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தி.நகரிலுள்ள கல்பாத்தி அகோரத்தின் அலுவலகத்தில் சோதனையிட்டபோது, `பிகில்’ படத்திற்குச் செலவழித்த கணக்கு விவரங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இதில், `பிகில்’ படத்திற்காக நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்ட சம்பளத்தொகை குறிப்பிடப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், நடிகர் விஜய்யிடம் விளக்கம் பெற வருமானவரித்துறை அதிகாரிகள் முடிவு செய்ததாகவும், இதற்காகத்தான் நெய்வேலியில் ‘மாஸ்டர்’ திரைப்படப் படப்பிடிப்பில் இருந்த விஜய்யிடம் விசாரணை நடத்தியதாகவும் தெரிகிறது. மேலும், நடிகர் விஜய்யை மேல் விசாரணைக்காக சென்னை அழைத்து வருகின்றனர். தனது சொந்த ஜாக்குவார் காரில் ஏற முற்பட்ட விஜய்யை தடுத்த வருமானவரித்துறை அதிகாரிகள், தங்களது இன்னோவா காரில் ஏற்றி சென்னை அழைத்து வருகின்றனர். விஜய்யின் சாலிகிராமம் வீட்டிலும் வருமானவரி சோதனை நடைபெற்றது.

இந்நிலையில் தொடர்ந்து நடிகர் விஜய், ஏஜிஎஸ் சினிமாஸ், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் உள்ளிட்டோரது வீடு மற்றும் அலுவலகங்களில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். பிகில் பட வருமான விவகாரத்தில் குளறுபடி நடந்துள்ளதாக கூறி ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனத்திற்கு சொந்தமான வீடு, அலுவலகம் என 20 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று நடிகர் விஜய்யிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் பணியில் வருமான வரித்துறையினர் தீவிரம் காட்டி வந்தனர். சென்னை அடுத்த பனையூரில் உள்ள வீட்டில் 6 வருமானவரித்துறை அதிகாரிகள் விஜய்யிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பிகில் திரைப்படத்தில் நடித்ததற்கு ரூ.30 கோடி சம்பளம் பெற்றது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

வருமானவரித்துறை அறிக்கை

சென்னை மற்றும் மதுரையில் கடந்த 2 நாளாக நடந்த சோதனை பற்றி வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் 38 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருமான வரி சோதனையில் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பைனான்சியர் அன்புசெழியன், நடிகர் விஜய், அவரது நண்பன் சரவணன் ஆகியோர் வீட்டில் சோதனை நடந்ததை வருமான வரித்துறை உறுதி செய்தது. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாகவும் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *