தனிச் சிங்களத்தில் தேசிய கீதம் பாடி கோட்டா தலைமையில் சுதந்திர தினம்! – கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பிரதான நிகழ்வு

தனிச் சிங்களத்தில் மாத்திரம் தேசிய கீதம் இசைத்து இலங்கையின் சுதந்திர தினத்தின் பிரதான நிகழ்வு இன்று நடைபெற்றது.

‘பாதுகாப்புக்கான தேசம் – சௌபாக்கியமான நாடு’ என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தின் பிரதான நிகழ்வு இன்று காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.

சர்வமத வழிபாடுகளின் பின்னர் காலை 8 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் சுதந்திர தின நிகழ்வு ஆரம்பமாகியது.

இலங்கையின் தேசியக் கொடி ஏற்றப்பட்டு – தனிச் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு – மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன.

தொடர்ந்து ஜனாதிபதியின் சுதந்திர தின உரை இடம்பெற்றது. .

அதன்பின்னர் முப்படை, பொலிஸ், விசேட அதிரடிப்படை, சிவில் பாதுகாப்புத் துறை மற்றும் தேசிய மாணவர் படையணி அடங்கலாக 8 ஆயிரத்து 260 பேரைக் கொண்ட மரியாதை அணிவகுப்புக்கள் நடைபெற்றன. அத்துடன், பல்வேறு கலாசார மரியாதை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்தப் பிரதான நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பிரதம நீதியரசர், சட்டமா அதிபர், பதில் பொலிஸ்மா அதிபர், முப்படைத் தளபதிகள், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், சர்வமதத் தலைவர்கள், வெளிநாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *