சீனாவில் நாளாந்தம் உயிரிழப்புகள் அதிகரிப்பால் உலக நாடுகளிலிருந்து ஒதுக்கப்படும் சீனா

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தினமும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 304 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஹூவய் மாகாணத்தில் மட்டும் 294 பேர் இறந்துள்ளனர். அதேபோல வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளவர்களின் எண்ணிக்கையும் 14,380 ஆக அதிகரித்துள்ளது.
உலக நாடுகளில் 23 நாடுகளுக்கு இந்த வைரஸ் தாக்கம் பரவியுள்ளது. சீனாவிலிருந்து சொந்த சொந்த நாடுகளுக்கு திரும்பியவர்களுக்கு இந்த வைரஸ் தாக்குதல் இருப்பது தெரியவந்துள்ளது.
உலக சுகாதார நிறுவனமும் சீனாவின் கொரோனா வைரஸ் தாக்குதலை சர்வதேச சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கொரோனா வைரஸ் தாக்குதலை முறியடிப்பதற்கான சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்த உதவும்.

உலக சுகாதார நிறுவன தலைவர் கேப்ரியேசஸ் கூறும்போது:-

குறைவான சுகாதார வசதியுள்ள நாடுகளில் இந்த வைரஸ் பரவுவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளது என்பதே எங்களின் மிகப்பெரிய கவலையாக இருக்கிறது” என்றார்.
சர்வதேச சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டது குறித்து சீனா வெளியுறவு அமைச்சக செய்திதொடர்பாளர் ஹுவா சுன்யிங் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்தே சீனா அரசாங்கம் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கையை எடுத்துவருகிறது. மக்களின் சுகாதாரம் முக்கியமென்ற பொறுப்பின் காரணமாக மிகவும் விரிவான, அதிதீவிரமான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற பல நடவடிக்கைகளை சர்வதேச சுகாதார ஒழுங்குமுறையின் தேவைகளுக்கு அப்பாற்பட்டவையாக இருக்கின்றன. இந்த தொற்றுநோய் தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றிபெறுவோம் என்ற உறுதியும், முழு நம்பிக்கையும் சைனாவுக்கு இருக்கிறது.
உலக சுகாதார நிறுவனத்துடன் சீனா அரசாங்கம் நெருங்கிய தகவல் தொடர்பில் இருப்பதுடன், சிறந்த ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறதென்று கூறினார்.
இதற்கிடையே அமெரிக்கா தனது பிரஜைகளை சீனாவுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சு இதுதொடர்பாக 4ம் நிலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது:-
அமெரிக்கர்கள் சீனாவுக்கு பயணம் செய்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றும்
சீனாவில் இப்போதிருக்கும் எந்த நாட்டை சேர்ந்தவரும் வர்த்தக விமானத்தில் புறப்படுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது.
UKயில் முதல் முறையாக 2 பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் உறுதியாகியுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.
அவர்கள் அதி தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களால் மற்றவர்களுக்கு வைரஸ் பரவுவதை தடுக்கும் முயற்சியும் UKயில் எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *