சமவுரிமை கேட்பது இனவாதக் கூச்சலா? – ரத்ன தேரருக்கு சரா எம்.பி. பதிலடி

“இந்த நாட்டில் சமவுரிமையைக் கேட்பது இனவாதமா? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்களுக்கான உரிமைகளை, உரித்துக்களைக் கேட்கின்றது. அது இனவாதமா?”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கேள்வி எழுப்பினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இந்து பௌத்த பேரவை மற்றும் வடக்கு மாகாண தேசிய இரண்டாம் மொழிக் கற்கை நிலையம் என்பன இணைந்து கடந்த புதன்கிழமை நடத்திய சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் அதிதியாகக் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய தேரர் ஆற்றிய உரை வாசனையூட்டப்பட்ட நச்சுப்புகை போன்று அமைந்துள்ளது. நாளும் பொழுதும் தென்னிலங்கையில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவெறிப் பிரசாரங்களையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் இவர், தான் ஒரு உயர்ந்த இன, மத சமரசவாதி எனவும் தமிழ் அரசியல்வாதிகள் இனங்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தி சிங்களவர்களும் தமிழர்களும் இணைந்து செயற்பட முடியாத நிலையை உருவாக்கி வருகிறார்கள் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

சிங்கள மக்களைத் திட்டித் தீர்ப்பதையும் இனவாதம் பேசுவதையுமே தமிழ்த் தேசியக் கூட்டனமைப்பினர் நாடாளுமன்றத்தில் செய்து வருகின்றனர் எனவும் வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் புதியவர்கள் நாடாளுமன்றம் வந்து அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் எமது மண்ணில் வந்து நின்று முழங்கித் தள்ளியுள்ளார்.

தமிழ் மக்களுக்கு இந்த நாட்டில் சிங்கள மக்களைப் போன்று நியாயபூர்வமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குரல் கொடுத்து வருகிறது. எம்மீது தொடர்ந்து மேற்கொள்ளப்படும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளைக் கைவிடுமாறு கோருகிறோம். இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட எமது காணிகளையும் வீடுகளையும் மீன்பிடி மையங்களையும் விடுவித்து எம்மை எமது பாரம்பரிய சொந்த மண்ணில் வாழவும் தொழில் செய்யவும் அனுமதியுங்கள் எனக் கோருகிறோம். நாம் படையினரிடம் ஒப்படைத்த, வெள்ளைவான்களில் கடத்தப்பட்டு காணாமற் போனோரைக் கண்டுபிடித்துத் தாருங்கள் எனக் கேட்கிறோம். அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்கும்படி அழுத்தம் கொடுக்கின்றோம்.

இப்படியெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினால் இது சிங்கள மக்களுக்கு விரோதமானதா? எம்மை இந்த நாட்டின் உரிமையுள்ள மக்களாக வாழ விடுங்கள் என்று கேட்டால் அது இனவாதமா?

இது ஒரு பௌத்த – சிங்கள தேசம் எனவும் ஏனைய சிறுபான்மை இனங்கள் அவர்களின் தயவில் வாழ வேண்டும் எனவும் கூறும் அத்துரலிய ரத்தின தேரர் போன்றவர்களுக்கு நாங்கள் இந்த நாட்டுப் பிரஜைகள் என்ற உரிமையுடன் வாழ விடுங்கள் எனக் கேட்டால் அது சிங்கள மக்களுக்கு எதிரான நடவடிக்கையாகப்படுகின்றது.

வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய வாழிடமல்ல என்று அடித்துக் கூறும் சிங்கள இனவாதிகளுக்கு எங்கள் பாரம்பரியக் காணிகளில் மீளக்குடியேற அனுமதிக்கும் படி கேட்பது இனவாத நடவடிக்கையாகப்படுகின்றது.

நாம் சிங்கள மக்களை வெறுக்கவில்லை. நாளாந்தம் ஆயிரக்கணக்காண சிங்கள மக்கள் வடபகுதிக்கு சுற்றுலா வந்து செல்கிறார்கள். நாம் அவர்களை அன்போடு ஆதரித்து அனுப்புகிறோம். ஆனால் மணலாறு உட்படப் பல பிரதேசங்களில் எமது மக்களின் சொந்தக் காணிகளை அபகரித்துத் தமதாக்குவதை எதிர்க்கின்றோம். சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் விகாரைகள் அமைக்கப்படுவதை நாம் எதிர்க்கவில்லை. ஆனால், நீராவிப்பிட்டிப் பிள்ளையார் கோயிலில் விகாரை அமைப்பதையோ வெடுக்குநாரி லிங்கேஸ்வரர் ஆலயத்தைக் கையகப்படுத்துவதையோ அனுமதிக்க முடியாது. நீராவிப்பிட்டி பிள்ளையார் கோயில் வளாகத்தில் ஒரு தேரரின் சடலத்தை எரியூட்டியமை இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துமா?

நாம் நாட்டைப் பற்றிக் கதைப்பதில்லை எனவும் சிறுபான்மையினர் பற்றியே கதைக்கிறோம் எனவும் குற்றம்சாட்டியுள்ளார். நாம் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள். தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் தொடரப்படும் வரை, தமிழ் மக்கள் இந்த நாட்டின் உரிமையுள்ள ஒரு தேசிய இனம் என்பது ஏற்றுக்கொள்ளப்படும்வரை, நாம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கே முன்னுரிமை கொடுக்க முடியும். பிரச்சினையை அடுத்த கட்டமாகவே எம்மால் நோக்க முடியும்.

எனினும், நாடு தேசிய ஆபத்தை எதிர்கொள்ளும்போது நாம் ஒதுங்கியிருந்து விடவில்லை. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மஹிந்த ராஜபக்ச தலைமையில் புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டு ஜனநாயகம் கேள்விக்குள்ளாக்கப்பட்டபோது நாம் அதற்கு எதிராக நீதிமன்றத்தில் கடுமையாகப் போராடி ஜனநாயகத்தைக் காப்பாற்றினோம்.

‘ஒன்றிணைந்த நாட்டுக்குள் உச்சகட்ட அதிகாரப் பகிர்வு’ என்ற எமது கோரிக்கை தமிழ் மக்களுக்கானது மட்டுமல்ல முழு நாட்டு மக்களுக்குமான அதிகாரப் பகிர்வு என்ற விடயத்தை அத்துரலிய ரத்ன தேரர் போன்ற இனவாதிகளால் புரிந்துகொள்ள முடியாது என்பதை நாமறிவோம்.

தமிழ் இளைஞர்கள் நாடாளுமன்றம் சென்று அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறும் தேரரிடம் இதுவரை அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்ற டக்ளஸ் தேவானந்தாவாலோ, கருணாவாலோ, சுவாமிநாதனாலோ, விஜயகலா மகேஸ்வரனாலோ தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளைத் தடுக்க முடிந்ததா? மாறாகத் துணைபோக நிர்ப்பந்திக்கப்பட்டனர் என்பதை மறுக்க முடியுமா? இதைச் செய்ய இன்னும் இளைஞர்கள் தேவையா?

தமிழர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை ஏவி இந்த நாட்டில் குருதியாறு பாய வைக்கும் ரத்ன தேரர் போன்றோரின் சர்க்கரை பூசிய தோட்டாக்களில் விழுந்து விடத் தமிழ் மக்கள் தயாரில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்து கொள்கின்றோம்.

இலங்கை ஒரு சிங்கள பௌத்த தேசம் என்ற இனவெறிக் கோசத்தை களைந்தெறிந்து விட்டு இது சிங்கள தமிழ் முஸ்லிம்களுக்குரிய ஒரு பல்லினங்களுக்குரிய ஒரு நாடு என்பது என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறதோ அன்று மட்டுமே நல்லிணக்கம் ஏற்பட முடியும் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *